நமக்குள்ளே!

காதல் மற்றும் கலப்புத் திருமணங்கள், கொலை வரை செல்வது தொடர்கதையாகிவிட்ட சூழல்... நடுநடுங்க வைக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் பட்டப்பகலில், பொதுமக்கள் மத்தியில் எவ்வித பதற்றமும் இல்லாமல் உடுமலைப்பேட்டையில் நடந்தேறியிருக்கிறது காதல் தம்பதி சங்கர்-கௌசல்யா மீதான கொலைவெறித் தாக்குதல். காதல் கணவனைப் பறிகொடுத்துவிட்டு, குற்றுயிரும் குலையுயிருமாக நிற்கிறாள் இளம்பெண் கௌசல்யா! இந்தக் கொலைக் காட்சிகள் வைரலாகி, `இது நாகரிக சமூகம்தானா?’ என்கிற கேள்வியை நாலாபக்கமும் எழுப்பிக்கொண்டிருக்கிறது.

இத்தகைய கொலைகளுக்கு சாதி, மதம் மட்டும் காரணங்கள் என்று முடித்துக்கொண்டுவிட முடியாது. உறவுகள் என்ன சொல்வார்களோ... நண்பர்கள் என்ன கேட்பார்களோ... ஊரார் எப்படியெல்லாம் கேலி செய்வார்களோ என்றெல்லாம் கௌரவம் பார்க்கும் மனநிலை, அனைவரின் மனதிலும் ஆழப்பதிந்து போயிருப்பது மிகமிக முக்கியமான காரணங்கள். இவைதான் பெற்றோர்களையே கொலை வாள் ஏந்த வைக்கிறது.

காதலித்து சட்டப்படி மணம் முடித்துவிட்ட பிறகு, வாழ வாய்ப்பு கொடுக்காமல் அந்தக் காதல் ஜோடியை ரத்தச் சகதியாக்கிவிட்டு, அதைக் கௌரவக் கொலை என்று பெருமையோடு சொல்லித் திரிகிறார்கள். ஆனால், கொலைப் பழியோடு சிறைச்சாலையில் தண்டனையை அனுபவிப்பது மட்டும் கௌரவமான செயலா?

இவர்களின் `கௌரவங்கள்’ ஒருபக்கம் இருக்கட்டும்!

எந்த வகையில் பார்த்தாலும், இதுபோன்ற பிரச்னைகளில் சிக்கிக்கொண்டு பெருமளவு சீரழிவது... பெண்கள் மட்டுமே. கைபிடித்தவன் கொல்லப்பட்டுவிட, உறவுகளும் கல்லாய் போய்விட, பலத்த காயங்களுடன் உடல்ரீதியாக, மனரீதியாக பாதிப்புகளுக்குள்ளாகி, நடைபிணமாகிவிட்ட பெண்ணின் அடுத்தக்கட்ட நிலைதான் என்ன?

காலகாலமாக பெண்ணின் பெருமை பேசிக்கொண்டே இருக்கும் இந்தச் சமூகம், எப்போதுதான் செய்யப்போகிறது நியாயம்?!

உரிமையுடன்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்