Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘‘ஹோட்டல்ல பார்சல் கட்டும் வேலை பார்த்தேன்!’’

- பெண் இயக்குநர் உஷா கிருஷ்ணன்சினிமா ஸ்பெஷல்

யக்குநர் அந்தஸ்து கிடைக்கப் பெறுவதற்குள், உதவி இயக்குநராக தாங்கள் படும் கஷ்டங்களை, பல ஆண் இயக்குநர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறோம். அதுவே பெண் என்று வரும்போது, சிரமங்கள் இன்னும் பெருகித்தான் போகும். அப்படி ஒருவர்தான், உஷா கிருஷ்ணன். தமிழ்த் திரையுலகில் ஒற்றை கை விரல்களைக்கொண்டு எண்ணிவிடும் எண்ணிக்கையிலேயே பெண் இயக்குநர்கள் இருக்க... எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல், அதில் ஒருவராக இணைந்திருக்கிறார் உஷா. விரைவில் வெளிவரவிருக்கும் ‘ராஜா மந்திரி’ படத்தின் இயக்குநர். தான் கடந்து வந்த பாதை பற்றி நம்முடன் பகிர்கிறார், இந்தப் பெண் படைப்பாளி...

நான்!

‘‘சொந்த ஊர் சிதம்பரம் பக்கத்துல ஒரு கிராமம். அப்பா சோடா கம்பெனி வெச்சிருந்தாங்க. எனக்கு ஒரு அக்கா, ஒரு அண்ணன். நல்லா படிப்பேன், ஸ்கூல் டாப்பர். அப்பாவுக்கு என்னை கலெக்டர் ஆக்கணும்னு ஆசை. எனக்கு ஏதாச்சும் வித்தியாசமா படிக்கணும், வேலை பார்க்கணும்னு ஆசை.

இளங்கலை பி.எஸ்ஸி., பயோ டெக்னாலஜி படிச்சேன். காலேஜ் நாட்கள்ல ஸ்கிட்ல கலக்குவேன். முதுகலையில் மீடியா சயின்ஸ் படிச்சேன். எங்க வீட்டுல உள்ளவங்களுக்கு அப்படீன்னா என்னனுகூடத் தெரியாது. 

கோலிவுட் அறிமுகம்!

‘சினிமாதான் என் கனவு’னு எல்லாம் எனக்கு எதுவும் இல்ல. கல்லூரியில் என் கூடப்படிச்சவங்க எல்லாம் நல்லா எழுதுவாங்க. எனக்கு அந்தளவுக்கு எல்லாம் எழுத வராது. ஏதாவது சேனல்ல வேலை பார்க்கிறதுதான் இலக்கா இருந்தது. கல்லூரியில படிச்சப்போ, எழுத்தாளர் பாஸ்கர் சக்தி சாரோட அறிமுகம் கிடைச்சது. அவர்தான், என்னை இயக்குநர் மகேந்திரன் சார்கிட்ட உதவி இயக்குநரா சேர்த்துவிட்டார். உண்மையைச் சொன்னா, பாஸ்கர் சார் சொன்னப்போதான் எனக்கு மகேந்திரன் சார் பற்றியே தெரியவந்தது. அப்போ அந்தளவுக்குதான் இருந்தது என் சினிமா அறிவும், ஆர்வமும்.

உதவி இயக்குநர்!

அதுக்கு அப்புறம் ‘நாதஸ்வரம்’ தொடர்ல உதவி இயக்குநரா  சேர்ந்தேன். அப்போ சென்னையில நானும் அண்ணனும் ஒண்ணா தங்கியிருந் தோம். நான் ‘நாதஸ்வரம்’ தொடருக்கு வேலைபார்க்கப் போனப்போதான், எங்க அண்ணனுக்கு நான் மீடியா சம்பந்தமான படிப்புப் படிச்சதும், சீரியல் வேலையில் இருக்கிறதும் தெரிய வந்தது. ‘சினிமா, சீரியல் எல்லாம் வேணாம்’னு வீட்டில் இருக்கிறவங்க கட்டுப்பாடு விதிச்சாங்க. நான் விடாம போராடினேன். ஒரு கட்டத்துல எங்க அண்ணனும் நானும் பிரிய நேர்ந்துச்சு. 

காசு இல்லை!

வெளிய தனியா தங்க வேண்டிய நிலை. கையில காசு இல்லை. சாப்பாட்டுக்காக ஹோட்டல்ல பார்சல் கட்டும் வேலை வரை பார்த்தேன். அந்த வேலையைக்கூட, ‘நான் படிக்கல’னு சொல்லித்தான் வாங்கினேன். காலையில சினிமா வாய்ப்பு தேடிப் போவேன், மதியம் முதல் ராத்திரிவரை கடையில வேலை பார்த்துட்டு, அங்கேயே சாப்பிட்டுக்குவேன். இப்போ இயக்குநரா இருக்கிற பலர்கிட்ட உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டுருக்கேன்.      எதுவும் ஈஸியா கைவரல.

சுசீந்திரனின் பட்டறை!

இந்த நேரத்துலதான், இயக்குநர் சுசீந்திரன் சாரோட ‘ஜீவா’ படத்துல உதவி இயக்குநரா வேலைபார்க்கிற வாய்ப்பு கிடைச்சது. நான் சினிமாவை முழுமையா கத்துக்கிட்டது சார்கிட்டதான். நான் தனியா படம் பண்ணினப்போவும், சார் சொன்ன விஷயங்களை எல்லாம் மனசுல வெச்சுட்டுதான் வேலையை ஆரம்பிச்சேன். அதுல முக்கியமானது... ‘படம் பண்ணும்போது எத்தனையோ பிரச்னைகள் வரலாம். ஆனா கேமரா பக்கத்துல நின்னு ஷாட் சொல்லும் போது இயக்குநரா மட்டும்தான் இருக்கணும்’ என்ற அறிவுரை.

‘ராஜா மந்திரி’!

‘ராஜா மந்திரி’, என்னோட முதல் படம். இந்தப் படத்துக்காக கதை சொல்லிச் சொல்லியே எனக்கு ஏராளமான நட்பு கிடைச்சது. அப்படி ஒரு நல்ல நண்பர், ‘மெட்ராஸ்’ ரஞ்சித் சார். என் கதையில் தவறுகள், திருத்தங்களை அக்கறையோட சொல்வார். என் படத்தில் கலையரசன் மற்றும் காளி வெங்கட் ரெண்டு பேரும் முக்கியமான கேரக்டர்கள். ‘மெட்ராஸ்’ படத்துக்கு முன்னாடியே கலையரசன் என் படத்துல ஹீரோவா நடிக்கத் தயாரா இருந்தார். ஆனா, தயரிப்பாளர் கிடைக்கலை. அதன்பிறகு,    ‘மெட்ராஸ்’ கலையரசனுக்கு நல்ல பிரேக் கொடுக்கும். அப்புறம் அவரைவெச்சு படம் பண்ணினா நல்ல ரீச் இருக்கும்’னு காத்திருக்கச் சொன்னார் ரஞ்சித் சார்.

அவர் சொன்ன மாதிரியே கேமராமேன் பி.ஜி முத்தையா சார், மதியழகன் சார் ரெண்டு பேரும், ‘ராஜா மந்திரி’ படத்தின் தயாரிப்பாளர்களா கிடைச்சாங்க. இவங்க, பெரிய சப்போர்ட் எனக்கு. இசை, ஜஸ்டின் பிரபாகரன். அவரோட பெரிய ரசிகை நான்.  அவரும் எனக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்தார்.

ஒரு கிராமத்துப் பெண், சவால்கள் நிறைஞ்ச திரை உலகில் ஆறு வருஷ தளராத போராட்டத்துக்கு அப்புறம், இன்னிக்கு ஒரு இயக்குநரா நிற்க, இப்படிப் பல ஆண்களின் அன்பும், ஆதரவும் காரணம். அவங்க எல்லாருக்கும் நன்றி. அதேபோல, இப்ப என்னைப் புரிஞ்சிக்கிட்டு ஆதரிக்கிற எங்க அண்ணனுக்கும் நன்றி. ஏப்ரல் மாசம் ‘ராஜா மந்திரி’ ரிலீஸ். நிச்சயமா உங்க எல்லோருக்கும் பிடிக்கும்!’’

- பல வருடப் போராட்டமும் உழைப்பும் பளபளப்பாக்குகின்றன, உஷாவின் கண்களை!

எஸ்.கே.பிரேம் குமார், படங்கள்:பா.அபிரக்‌ஷன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
மியூசிக் ஃபேமிலி... ஹேப்பி ஃபேமிலி!
இவை பெண்களின் சினிமா..!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close