பொலிட்டிக்கல் சயின்ஸ் படிக்கலாம்... போட்டித் தேர்வில் கலக்கலாம்!

பி.ஏ., அரசியல் அறிவியல் (பொலிட்டிக்கல் சயின்ஸ்) படிப்பு... அரசாங்கப் பணிகள், அரசியல் பணிகளை இலக்காகக் கொண்டவர்களுக்கு தெளிவான வழிகாட்டும் துறை. இந்திய அரசியல் மற்றும் சமூகம் குறித்துப் பயிற்றுவிக்கும் இந்தத் துறை, அவற்றைப் பற்றிய தெளிவான அறிவு மற்றும் சிந்தனைகொண்ட குடிமகன்களை உருவாக்கவல்லது. இந்தத் துறை பற்றியும், இதில் உள்ள படிப்புகள், வேலைவாய்ப்புகள் பற்றியும் தகவல்கள் பகிர்கின்றார், சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் ஆட்சியல் துறைத் தலைவர் கோட்டீஸ்வர பிரசாத்.

விண்ணப்பம்

பன்னிரண்டாம் வகுப்பில் எந்த பாடப்பிரிவில் படித்தவர்களும் பி.ஏ., பொலிட்டிக்கல் சயின்ஸ் பட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். எம்.ஏ., பொலிட்டிக்கல் சயின்ஸுக்கு பி.ஏ, பி.எஸ்ஸி, பி.இ என்று எந்த இளங்கலை படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு டிகிரி என்று விண்ணப்பிக்காமல், மத்திய அரசு (ஐ.ஏ.எஸ் தேர்வுகள்) மற்றும் மாநில அரசின் (டி.என்.பி.எஸ்.சி) போட்டித் தேர்வுகளை எழுதும் நோக்கமுள்ள மாணவர்கள், சட்டப்படிப்பில் நாட்டமுள்ள மாணவர்கள், அரசியல் களங்களில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள் விருப்பத்துடனும் திட்டத்துடனும் இதைத் தேர்வுசெய்யும்போது, அதில் பிரகாசிக்கும் வாய்ப்பைப் பெறலாம்.

கல்லூரி

சென்னை பல்கலைகழகத்தில், அரசியல் மற்றும் ஆட்சியல் துறையால், எம்.ஏ மற்றும் எம்.ஃபில்., பொலிட்டிக்கல் சயின்ஸ் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. சென்னை ஜஸ்டிஸ் பஷீர் அகமது சயீத் பெண்கள் கல்லூரியில் பி.ஏ பட்டமும், சென்னை கிறித்தவக் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரியில் பி.ஏ, எம்.ஏ, எம்.ஃபில் மற்றும் ஆராய்ச்சிப் பட்டங்களும் வழங்கப்படுகின்றன. இவை தவிர்த்து  இந்தியாவில் பல மாநில மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களிலும் பழைமையான இப்படிப்பு உள்ளது.

சிலபஸ்

பெயருக்கு ஏற்றபடி, அரசியல் அறிவியல் துறையின் இளங்கலைப் பட்டத்தில் இந்திய அரசியல், சர்வதேச அரசியல், இந்திய மற்றும் மேற்கத்திய அரசியல் சிந்தனைகள், இந்திய மற்றும் உலக அரசியலமைப்பு, சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகள், ஜனநாயகம் போன்றவற்றை பயிலலாம். முதுகலைப் பட்டத்தில் இவற்றையே இன்னும் ஆழமாகக் கற்றுக்கொள்ளலாம். சிவில் சர்வீஸ் தேர்வுகளின்போது, இந்தப் பாடங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வேலைவாய்ப்புகள்

இளங்கலை பட்டம் பெற்ற பின், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கும், அரசாங்கப் பணிக்கான இதர போட்டித் தேர்வுகளுக்கும் தயாராகலாம். எல்.எல்.பி போன்ற சட்டப்படிப்புகளிலும் சேரலாம். முதுகலைப் பட்டம் பெற்றபின், கல்லூரிப் பேராசிரியர்களுக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்விலோ (NET) அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்விலோ (SLET) தேர்ச்சிபெற்று பணிவாய்ப்பைப் பெறலாம். எம்.ஃபில், மற்றும் பிஹெச்.டி பட்டம் பெற்றவர்கள், பல்கலைக் கழகங்களில் ஆசிரியராகப் பணிபுரியலாம்.

ஜெ.விக்னேஷ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick