துணிவுக்கு மறுபெயர் ரஜனி!

- துப்பறியும் சாம்ராஜ்யம் நடத்தும் பெண்மணி...பிசினஸ் ஸ்பெஷல்!

ரபரப்பான மும்பையின் மாஹேம் பகுதியில் வசிக்கும் ரஜனி பண்டிட்... இந்தியாவின் முதல் பெண் துப்பறியும் நிபுணர். நம் பக்கத்துவீட்டுப் பெண்ணைப் போன்ற முகத்தோற்றம், உடல்வாகு. ஆண்களே அதிகம் கோலோச்சும் இந்தத் துறையில், 25 வருடங்களுக்கு முன்னரே சுயம்புவாக துணிந்து இறங்கியவர் ரஜனி. தன்னுடைய `ரஜனி பண்டிட் டிடெக்டிவ் சர்வீசஸ்' நிறுவனத்தின் மூலம், 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலான துப்பறியும் விங், 75,000-க்கும் அதிகமான வழக்குகள் என துப்பறியும் துறையில் ஒரு சாம்ராஜ்யத்தையே நடத்திக்கொண்டிருக்கிறார்.

‘‘என் தந்தை மஹாராஷ்டிர மாநில சி.ஐ.டி போலீஸில் பணிபுரிந்தார். மகாத்மா காந்தி கொலைவழக்கு விசாரணையில் பங்கேற்றவர். வழக்குகள் சம்பந்தமாக என் தந்தையை சந்திக்க பலர் எங்கள் வீட்டுக்கு வருவார்கள். அவர்கள் பேசுவதை எல்லாம் நான் கூர்ந்து கவனிப்பேன். சில வழக்குகள் குறித்து தனிப்பட்ட முறையில் நான் என் தந்தையிடம் விவாதிப்பது உண்டு.

கல்லூரியில் படிக்கும்போது என் வகுப்புத் தோழி ஒருத்தி, சில மாணவர்களுடன் சேர்ந்து புகைபிடிப்பது, மது அருந்துவது என தகாத பழக்கவழக்கங்களில் ஈடுபட்டாள். நல்ல குடும்பத்துப் பெண், அப்படி தீயவழியில் செல்வதை தாங்கிக்கொள்ள முடியாமல், அதை அவளுடைய தந்தையிடம் தெரிவித்ததோடு, அவரை ஒரு டாக்ஸியில் அழைத்துச் சென்று அவளது நடவடிக்கைகளை நேரடியாகக் காண்பித்தேன். அவர் தன் மகளைக் கண்டித்து நல்வழிப்படுத்தினார். ‘நல்ல சமயத்தில் உதவினாய். நீ இந்தப் பிரச்னையை என்னிடம் கொண்டுவந்த சேர்த்த விதம், மிகவும் துணிச்சலானது. நீ துப்பறிவதைத் தொழிலாகச் செய்யலாமே?’ என்றார் தோழியின் அப்பா. அந்த வார்த்தைகள் என் மனதில் ஊறிக்கிடந்தன.

கல்லூரிப் படிப்பை முடித்தபின், தற்காலிகமாக ஒரு நிறுவனத்தில் பணி புரிந்தேன். அப்போது என்னுடன் பணிபுரிந்த ஒரு பெண்ணின் குடும்பத் தில் நிகழ்ந்த நகைத் திருட்டைக் கண்டறிய களமிறங்கி, உண்மையை வெட்டவெளிச்சமாக்கினேன். அப்போதுதான், துப்பறிவதற்கென்று பயிற்சியோ, சிறப்புத் தகுதியோ, கல்வியோ தேவையில்லை; மனதை ஒருமைப்படுத்துவது, விடாமுயற்சி, சமயோசிதம், துணிச்சல், உள்ளுணர்வு, துணிகரச் செயல்களைச் செய்யும் சாகசம் மற்றும் மனோதிடம் இவையெல்லாம்தான் வேண்டும் என்பதை உணர்ந்தேன். துப்பறிவதை முழு நேரத் தொழிலாகச் செய்ய முடிவெடுத்தேன்’’ எனும் ரஜனி, தான் தொடங்கிய துப்பறியும் நிறுவனம் குறித்த விளம்பரத்தை, பிரபல மராட்டிய நாளிதழில் வெளியிட முயன்றிருக்கிறார்.

‘‘நான் பெண் என்ற ஒரே காரணத்தினால், அந்த நாளிதழின் ஆசிரியர் என் விளம்பரத்தை வெளியிட முன்வரவில்லை. எதேச்சையாக, அந்த ஆசிரியரின் நண்பர் ஒருவரின் வழக்கு ஒன்றைத் துப்பறிந்து பிரச்னையைத் தீர்த்து வைத்தேன். அதற்குப்பின் அந்த நாளிதழின் நிருபரே என்னைத் தேடிவந்து பேட்டி கண்டு, என் புகைப்படத்துடன் சிறப்புக் கட்டுரையை  வெளியிட்டார். அன்றிலிருந்து இன்றுவரை, என் நிறுவனத்துக்காக விளம்பரம் கொடுக்க வேண்டிய அவசியமே எனக்கு ஏற்படவில்லை’’ என்றபோது, ரஜனியின் குரலில் கம்பீரம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்