இரும்பு மனுஷி ஐரோம் ஷர்மிளா!

போராளி

லகத்தைத் திரும்பிப் பார்க்கவைத்த பெண்... ஐரோம் ஷர்மிளா. தன் மாநிலத்தில் நடைமுறையில் உள்ள ராணுவத்தின் சிறப்பு அதிகாரத்தை நீக்கக்கோரி 2000-ம் ஆண்டில் தன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். 16 ஆண்டுகள் தொடர் உண்ணாவிரதத்தை இந்த ஆகஸ்ட் 9-ம் தேதியோடு முடித்துக்கொண்டு, தன் அகிம்சை போராட்டத்தை  இனி அரசியல் போராட்டமாக தொடரவிருப்பதாக அறிவித்திருக்கிறார்.

மணிப்பூர் மாநிலத்தில் இம்பால் நகரத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் ஒன்பதாவது பெண்ணாகப் பிறந்தார் ஷர்மிளா. 1980-ம் வருடம், மத்திய அரசு ராணுவத்துக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை (Armed Forces Acts) அமல்படுத்தியது. அதைப் பயன்படுத்தி, மக்களிடம் அடக்குமுறையைப் பிரயோகித்தது ராணுவம். இதனால் வெறுப்படைந்த ஷர்மிளா, அடக்குமுறைக்கு எதிரான பெண்கள் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டு ராணுவத்துக்கு எதிராகப் போராட ஆரம்பித்தார்.

2000-ம் ஆண்டும் நவம்பர் 2. காலையில் பேருந்துக்காகக் காத்துக்கொண்டிருந்த 10 பேரை, ராணுவம் சுட்டுத் தள்ளிவிட்டுச் சென்றது. அந்தச் சம்பவம், ஐரோம் ஷர்மிளாவின் மனதை தீப்பிடிக்க வைத்தது. ‘ராணுவத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு அதிகாரத்தை அரசாங்கம் திரும்பப்பெறும்வரை, என் போராட்டம் தொடரும்’ என்று அறிவித்து உண்ணாவிரதத்தில் அமர்ந்துவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலைக்கு அவர் செல்ல, அரசாங்கம் அவரைக் கைதுசெய்து, உணவு உண்ண மிரட்டியது. அவர் அசையவில்லை. மூக்கில் டியூப் வழியாக திரவங்களை உட்செலுத்தி அவர் உயிர்வாழும்படி பார்த்துக்கொண்டது அரசாங்கம்.

இந்த 16 ஆண்டுகளில், ஷர்மிளா தண்ணீர்கூட அருந்தவில்லை. தலைமூடியை சீவவோ, நகம் வெட்டவோ இல்லை. நிம்மதியான உறக்கம் இல்லை. உடலில் சத்துக்கள் குறைந்து, முக்கிய உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டன. பலமுறை உயிருக்கு ஆபத்தான நிலைக்குச் சென்று திரும்பினார். தனி அறை அவர் உலகம் ஆனது.

அரசாங்கம் ஷர்மிளாவை வருடம் ஒருமுறை விடுதலை செய்யும். அப்போது அவர் மைதானத்தில் அமர்ந்து தன் போராட்டத்தை தொடர்வார். மீண்டும் கைது செய்யப்படுவார். தன் 28 வயதில் போராடத் தொடங்கிய ஷர்மிளாவுக்கு இப்போது வயது 44.

உலகின் மிக நீளமான உண்ணாவழிப் போராட்டம், ஷர்மிளாவுடையது. இருந்தும் அதன் நோக்கம் நிறைவேறாத நிலையில், இப்போது அதை முடித்துக்கொண்டு, அரசியல் போராட்டத்தைத் தொடரவிருப்பதாக அறிவித்திருக்கும் இவருக்கு ஆதரவு பெருகிக்கொண்டிருக்கிறது.

வெல்லும்... பெண் வலிமை!

 கே.அபிநயா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்