சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
செய்வினைகள் செயலிழக்கும்... மதுரகாளியம்மன் மகிமை!

 பக்தர்கள் வேண்டியது எதுவாயினும், கருணையுடன் அருள்பாலித்து அதைக் கிடைக்கச் செய்வாள், அவர்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பாள்... சிறுவாச்சூர் மதுரகாளியம்மன். பில்லி, சூனியம், மாந்திரிகத்தைத் தீர்க்கும் மதுரகாளியம்மன் வீற்றிருக்கும் சிறுவாச்சூர், பெரம்பலூர் அருகில் இருக்கிறது.

தலவரலாற்றை மெய்சிலிர்ப்போடு சொல்லத் தொடங்கினார் பூசாரி கிருஷ்ணன். ‘‘சிலப்பதிகாரத்தின் நாயகி கண்ணகி, மதுரையை எரித்த பின், மன அமைதி கொள்ளாமல் இத்தலம் வந்து மதுர(ரை) காளியம்மனாக அமைதிகொண்டார் என்பது புராணம். சிறுவாச்சூரின் வழிபாட்டு தெய்வம், செல்லியம்மன். ஒரு மந்திரவாதி, தனது மந்திரவலிமையால் அம்மனைக் கட்டுப்படுத்தி தீய செயல்களுக்குப் பயன்படுத்தி வந்துள்ளான். ஒரு வெள்ளிக்கிழமை இரவு மதுரகாளியம்மன் இத்தலத்தில் தங்க இடம் கேட்க, அதற்கு செல்லியம்மனோ, தன்னை மந்திர வலிமையால் மந்திரவாதி கட்டுப்படுத்தி வைத்துள்ளதைக் கூறினாள். தான் அதற்கு தக்க வழிசெய்வதாக கூறி, அன்றிரவு அங்கு தங்கிய மதுரகாளி, மந்திரவாதியை அழித்து வதம் செய்தாள்.

அவள் ஆற்றல் கண்ட செல்லியம்மன், அவளை சிறுவாச்சூர் ஆலயத்திலேயே தங்கி, பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டினாள். சிறுவாச்சூருக்கு வெள்ளிக்கிழமை வந்த மதுரகாளியம்மன், பக்தர்களுக்கு ஆலயத்தில் திங்கட்கிழமை காட்சி தந்தாள். எனவே, திங்கள் மற்றும் வெள்ளி மட்டும்தான் ஆலயம் திறந்திருக்கும்.

மந்திரவாதியை மதுரகாளியம்மன் இத்தலத்தில் வதம் செய்ததால் பில்லி, சூனியம், மாந்திரிகத்தை தீர்க்கும் தலமாக விளங்குகிறது சிறுவாச்சூர். இக்கோயிலின் சிறப்புப் பிரார்த்தனை, மாவிளக்கு. செய்வினையைப் போக்க மதுரகாளியம்மனை உடுக்கை அடித்து அழைத்து, பக்தர்கள் தங்கள் குறைகளை சொல்வார்கள். பிறகு குறைகளை ஒரு காகிதத்தில் எழுதி காசு, மஞ்சள், குங்குமம் வைத்து சூலத்தில் முடிந்து வைப்பார்கள். மாவிளக்கு போட்டு பிரார்த்திப்பார்கள். கோயில் மண்ணை வீட்டுக்கு எடுத்துச் சென்று, 20 நாட்கள் அம்மனை தொடர்ந்து வழிபட வேண்டும். அப்படிச் செய்தால் சூனியம் விலகும்’’ என்று பரவசத்துடன் சொன்னார் பூசாரி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்