Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹாஸ்டல் கேர்ள்ஸ்... அட்டென்ஷன் ப்ளீஸ்!

சொந்த ஊரைவிட்டு நகரங்களுக்கு மேற்படிப்பு, வேலை காரணமாகச் செல்லும் பெண்களின் முக்கியப் பிரச்னை, விடுதி. லேடீஸ் ஹாஸ்டலில் ‘தேவதை வம்சம் நீயோ’ என்று பாடிக்கொண்டிருக்கலாம் என்பது நிதர்சனமில்லை. அவஸ்தைகள், பிரச்னைகள் தவிர்த்த நிம்மதியான ஹாஸ்டல் லைஃபுக்கு கைகொடுக்கும் கைடு... இதோ!

இடம்

விடுதி அமைந்திருக்கும் இடம் ஊரின் மையத்திலும், பேருந்து நிலையம், ஏ.டி.எம் சென்டர்கள் இவையெல்லாம் அருகில் இருக்கும்படியாகவும் பார்த்துக்கொள்ளவும். ஒயின்ஷாப் அருகில் அமைந்திருக்கும் விடுதியைத் தவிர்ப்பது நல்லது. ஹாஸ்டலுக்கு செக்யூரிட்டி அவசியம் இருக்க வேண்டும்.

உடன் தங்குபவர்கள்

ஒரு விடுதியைத் தேர்ந்தெடுக்கும் முன், அங்கு தங்கியிருக்கும் பெண்கள் உங்களுக்கு இணக்கமான ஒரு சூழலைத் தருவார்களா என்று யோசிக்கவேண்டும். அவர்களின் பெர்சனல் தேவையில்லை. ஆனாலும், உங்கள் மாத வருவாயும் உங்களுடன் தங்கி இருக்கும் பெண்களின் மாத வருவாயும் ஓரளவுக்காவது ஒத்துப்போக வேண்டும். உங்களைவிட இரண்டு மடங்கு வருமானம் வாங்கும் பெண்களோடு தங்கும்போது, அவர்கள் செய்யும் ஆடம்பரச் செலவுகளுக்கு நீங்களும் பழக்கமாவீர்கள். அல்லது அந்தப் பெண்கள் உங்களைத் தாழ்வாகப் பார்க்கவும் வாய்ப்புள்ளது. உங்கள் ஊர்க்காரர் அல்லது தெரிந்தவர் ஒரு சிலராவது இருக்கும் விடுதியைத் தேர்ந்தெடுப்பது நல்லது... முன்பின் தெரியாத ஊரில் ஆரம்ப நாட்களுக்கு அனுசரணையாக இருக்கும்.

இது இம்பார்டன்ட் கேர்ள்ஸ்!

உள்கட்டமைப்பு

தங்கவிருக்கும் விடுதியில் தனி ஆபீஸ் ரூம் இருக்கிறதா, குளியலறை, துணி துவைக்கும் இடம் போன்றவை வசதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். அதேபோல, சார்ஜர் போட ப்ளக் பாயின்ட் மற்றும் ஜன்னல் இதெல்லாம் கொஞ்சம் பக்கம் இருக்கும்படி படுக்கையை திருப்பிப்போட்டுக் கொள்ளுங்கள்.

இல்லைன்னா, சார்ஜ்போட க்யூதான்!

விதிமுறைகள்

இன் டைம், அவுட் டைம் குறித்து ஒவ்வொருவரும் கட்டாயம் எழுத வேண்டும் என்ற நடைமுறை உட்பட, விடுதியின் நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுங்கள். அவையெல்லாம் உங்களின் பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளே! நாளை அது ஏதாவது ஒரு விதத்தில் உங்களுக்குக் கைகொடுக்கும், காப்பாற்றும்!

வரலாறு முக்கியம் அமைச்சரே!

முதல் உதவி

எப்போதும் ஒரு மெடிக்கல் கிட் கையோடு இருக்கட்டும். காய்ச்சல், சளி, தலைவலி மற்றும் உங்களுக்கு இருக்கும் குறிப்பிட்ட அலர்ஜிக்கான மாத்திரைகள் என அனைத்தும் அதில் எப்போதும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். உடம்பு சரியில்லாத நேரங்களில் மருந்து, மாத்திரைக்காக யாரையும் நம்பி இருக்கத் தேவையில்லை. ரூம்மேட்ஸுக்குத் தேவைப்பட்டாலும் கொடுக்கலாம்.

நமக்கு நாமே!

அதிகப் பேச்சு வேண்டாம்

உங்கள் சொத்து, சுகம், சோகம், வங்கிக் கதை, வந்த கதை, போன கதை என எல்லாவற்றையும் ஹாஸ்டலில் தங்கி இருப்பவர்களிடம் சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள். பலதரப்பட்டவர்களும் தங்கியிருக்கும் அவ்விடத்தில், ஒவ்வொருவரைப் பற்றியும் நீங்கள் முழுமையாக அறிந்திருக்க மாட்டீர்கள். அதேபோல, யாரிடமும் எடுத்தவுடன் நெருக்கமாகப் பழகவேண்டாம். கிசுகிசுக்களைத் தவிருங்கள்... உங்களைப் பற்றி பிறர் பேசுவதையும், நீங்கள் பிறரைப் பற்றி பேசுவதையும்!

இதயத்தை மூடிப் பேசவும்!

அவசரத்தொகை

உங்கள் பர்ஸில் பணம் வைத்திருப்பதோடு, சூட்கேஸ், பெட்டுக்குக் கீழே என வெவ்வேறு இடங்களில் சிறு தொகையைப் பிரித்து வைத்திருங்கள். திடீரென பர்ஸ் தொலைந்துவிட்டால்கூட `பேக் அப்’புக்கு இது உதவும்.

எதையும் ப்ப்ப்ளான் பண்ணிப் பண்ணணும்!

கோ.இராகவிஜயா, படங்கள்:வ.வினோத்குமார்

‘‘தைரியமாக புகார் கொடுங்கள்!’’

விடுதியில் தங்கியிருக் கும் பெண்களின் பாதுகாப்பு குறித்து, திட்டக்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் கூறும்போது, ‘‘குறுகலான சந்து, ஆள்நடமாட்டமற்ற ஏரியா போன்ற இடங்களில் இருக்கும் விடுதிகளைத் தவிர்க்கவும். இரவு 10 மணிக்குமேல் எந்த ஓர் ஆணும், அவர் விடுதி உரிமையாளராக இருந்தாலும்கூட, கேட்டுக்குள் நுழையாதபடியான கட்டுப்பாடும் பாதுகாப்பும் இருக்க வேண்டும். விடுதி முறையாகப் பதிவு செய்யப்பட்டு நடத்தப்படுகிறதா என்பதையும், விடுதிக் காப்பாளர் குறித்தும் நன்கு விசாரிக்கவும். தங்கியிருக்கும் விடுதியில் எந்தப் பிரச்னை என்றாலும், பெண்கள் உடனடியாக 100 எண்ணை அழைக்க வேண்டும். திருட்டு, ஹாஸ்டல் உரிமையாளர்கள் தகாதமுறையில் நடந்துக்கொள்வது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் நிச்சயமாகப் போலீஸில் புகார் அளிக்க வேண்டும். தங்களைப் பற்றிய விவரம் தெரிவிக்கப்படாமல் விசாரணை மேற்கொள்ளப்படும். பெண்கள் தைரியமாகப் புகார் செய்தால்தான் குற்றங்களைக் குறைக்க முடியும்!’’ என்றார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
கருவளையத்துக்கு 'குட் பை'!
ஸ்க்ரீன் ஷாட்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு!”
Advertisement
[X] Close