தன் மதிப்பு அறியாதவள்!

குட்டிக் கதை

பெண்... கல் தோன்றி மண் தோன்றாத காலத்தில் இருந்து கவிஞர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்களின் சிந்தனைக்கு வற்றாத அட்சயப்பத்திரமாக விளங்கி வரும் கருப்பொருள். பெண்களைப் போற்றியும், தூற்றியும், கிண்டலடித்தும் எழுதப்பட்ட கருத்துகள், கவிதைகள், கதைகள்... எண்ணில் அடங்காதவை! சமீபத்தில் ‘வாட்ஸ்அப்’பில் உலாவரும், பெண்ணின் சிருஷ்டி பற்றிய, உள்ளத்தைத் தொடும் ஒரு கதை இங்கே...

ஆண் உட்பட எல்லா உயிரினங்களை யும் படைத்து முடித்த கடவுள், இறுதியாகப் பெண்ணை படைக்க ஆரம்பித்தார். ஒரு நாள், இரு நாள் அல்ல... தொடர்ந்து ஆறு நாட்களாகப் பெண்ணைப் படைத்துக்கொண்டிருந்தார். அனைத்தை யும் கவனித்துக்கொண்டிருந்த தேவதை ஒன்று, `‘ஏன் இந்தப் படைப்புக்கு மட்டும் இவ்வளவு நாட்கள்?’’ என்று கேட்டது.

அதற்குக் கடவுள், `‘இந்தப் படைப்புக் குள் நான் நிறைய விஷயங்களை உள்ளடக்க வேண்டும். இந்தப் பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதைச் சாப்பிட்டாக வேண்டும். அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும். சின்னக் காயத்திலிருந்து உடைந்துபோன மனது வரை எல்லா வற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும். அவளுக்கு உடம்பு சரியில் லாதபோதும் அவளே அவளைக் குணப் படுத்திக்கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும். இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும்தான் இருக்கும்’’ என்று விளக்கமாகச் சொன்னார்.

`‘இது அத்தனைக்கும் இரண்டே கைகளா?!’’ என்று ஆச்சர்யப்பட்டது தேவதை. ஆர்வத்துடன் லேசாகப் பெண்ணைத் தொட்டுப்பார்த்துவிட்டு, `‘ஆனால், இவளை மென்மையாகப் படைத்திருக்கிறீர்களே?’’ என்று கேட்டது.

`‘இவள் உடலளவில் மென்மை யானவள். ஆனால், மனதளவில் மிகவும் பலமானவள். அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்துவிடுவாள். அது மட்டுமல்ல, அவளால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும். கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவளுக்குள்ளேயே அடக்கிக்கொள்ளத் தெரியும். கோபம் வந்தாலும் அதைப் புன்னகை மீறாமலே வெளிப்படுத்தும் தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு. தனக்கு நியாயமாகப்படுகிற விஷயத்துக்காகப் போராடி ஜெயிக்கவும் செய்வாள். மற்றவர்களிடம் எதையும் எதிர் பார்க்காமல் அன்பை மட்டுமே அளவில்லாமல் தருவாள்’’ என்றார்.
``ஓ... இந்தளவுக்குப் பெண்ணால் யோசிக்க முடியுமா?!’’ என்றது தேவதை ஆச்சர்யம் விலகாமல்.

`‘எல்லா விஷயங்களைப் பற்றி யோசிக்க மட்டுமல்ல, அவற்றுக்குத் தீர்வையும் அவளால் சொல்ல முடியும்’’ என்றார் கடவுள்.

தேவதை, பெண்ணின் கன்னங்களைத் தொட்டுப்பார்த்துவிட்டு, `‘இவள் கன்னத்தில் ஏதோ வழிகிறதே?’’ என்றது.

‘`அது கண்ணீர். அவளுடைய கவலை, துக்கம், துயரம், ஏமாற்றம், புறக்கணிப்பு, நிராகரிப்பு என்று எல்லா வலிகளுக்கும் அவளின் ஒரே எதிர்வினை அது மட்டும்தான்’’ என்றார் கடவுள்.

ஆச்சர்யமான தேவதை, `‘உங்கள் படைப்பிலேயே சிறந்தது இதுதான். இந்தப் படைப்பில் எந்தக் குறையுமே கிடையாதா..?’’ என்று கேட்டது.

`‘தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது!’’ - குற்ற உணர்வுடன் பதிலளித்தார் கடவுள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick