பியூட்டிஃபுல் நெயில்ஸ்... யூஸ்ஃபுல் டிப்ஸ்!

‘‘நகப்பராமரிப்பு என்பது அழகு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல... அதில் ஆரோக்கியமும் அடங்கியுள்ளது!’’ என்று சொல்லும் சேலம், ‘ப்ளூம்’ பியூட்டி பார்லரின் பியூட்டிஷியன் மகேஸ்வரி தரும் நெயில் கேர் டிப்ஸ் இங்கே...

‘‘பொதுவாக, ஒருவரின் நகத்தின் வடிவமானது அவர் எலும்புகளின் வடிவத்தைப் பொறுத்து அமையும். ஒரு வாரத்துக்கு 1 மில்லிமீட்டர் என்ற விகிதத்தில் நகங்கள் வளரும். எனினும், வயதாகும்போது கைகள், கால்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைவதால், அப்போது நகங்களின் வளர்ச்சியும் குறைந்துபோகும். கை நகங்களின் வளர்ச்சியைவிட கால் நகங்களின் வளர்ச்சி மெதுவாகவே நடைபெறும். எல்லாவற்றுக்கும் மேலாக, உடலில் ஏற்படும் பாதிப்புகளைக் காட்டிக்கொடுக்கும் கண்ணாடியாகவும் நகங்கள் செயல்படும்!’’ என்று அறிமுகம் தந்த மகேஸ்வரி, நகங்களின் இன்னும் பல்வேறு அம்சங்களைப் பற்றியும் பேசினார்...

நெயில் பாலிஷ் போடும்போது...

நெயில் பாலிஷ் போடும்போது, அதை நன்றாகக் குலுக்கிவிட்டு, பிரஷ்ஷால் முதலில் ஓரப்பகுதிகளிலும், பிறகு நடுப்பகுதியிலும் அப்ளை செய்ய வேண்டும். நெயில்பாலிஷ் அப்ளை செய்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னும் பின்னும் நகங்களில் நெயில் வார்னிஷ் அப்ளை செய்துகொண்டால், கூடுதல் பளபளப்பு கிடைக்கும்.

நெயில் பாலிஷ் ரிமூவர்... உஷார்!

எப்போதும் தரமான நெயில் பாலிஷையே உபயோகிக்க வேண்டும். ரைலான் அல்லது அக்ரிலிக் அடங்கிய நெயில் பாலிஷ்கள், பரிந்துரைக்க ஏற்றவை. சிலருக்கு நெயில் பாலிஷ் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அவர்கள் அதைத் தவிர்ப்பதே நல்லது. அதேபோன்று நெயில் பாலிஷ் ரிமூவர், நகத்தில் உள்ள இயற்கையான கொழுப்பை அகற்றிவிடும் தன்மை கொண்டது என்பதால், அதை அடிக்கடிப் பயன்படுத்தக்கூடாது.

நகங்கள் உடையாமல் இருக்க...

 ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி, நகங்களில் அப்ளை செய்து ஊறவிடலாம்.

 வெள்ளை ஜெலட்டின் பவுடரை இளஞ்சூடான நீரில் கரைத்து விரல்களில் அப்ளை செய்து ஊறவிட்டால், நகங்களுக்கு கால்சியம் சத்து கிடைக்கும்.

 நகம் கடிக்கும் பழக்கத்தை அறவே விடுவதும், நகங்களில் அழுக்கு, கிருமிகள் தங்காமல் சுகாதாரம் காப்பதும் நகச்சுத்தியைத் தவிர்ப்பதற்கான வழிகள்.

 சிலருக்கு நகத்தைச் சுற்றி தோல் உரிந்து காய்ந்து காணப்படும். இந்த இறந்த செல்களால் தொற்று ஏற்படலாம் என்பதால், இதனை கட்டர் மூலம் நீக்கிவிடலாம். அப்படி நீக்கும்போது, எந்தத் திசையில் தோல் உரிந்துள்ளதோ அதே திசையில் கட்டர் மூலம் இழுத்து நீக்க வேண்டும். எதிர் திசையில் இழுத்தால் தோல் பாதிப்படையும்.

 நீளமான நகம் வளர்ப்பவர்கள் அதில் அழுக்கு சேராமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வெதுவெதுப்பான நீரில் டெட்டால், ஷாம்பூ, அரோமா ஆயில், பெப்பர் மின்ட் ஆயில் தலா ஒரு சொட்டு சேர்த்து விரல்களை அதில் ஊறவைத்தால், கண்ணுக்குப் புலப்படாத அழுக்கு நீங்குவதுடன், நகங்களுக்கும் புத்துணர்சி கிடைக்கும்.

நகச்சிதைவு

அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவில் விட்டமின்கள், புரோட்டீன், கால்சியம் போன்ற தாது உப்புகள் சரியான அளவில் இல்லை எனில், நகங்கள் பொலிவிழந்து பாதிப்படையும். டிடர்ஜன்ட் சோப்புகள், வாஷிங் பவுடர், ப்ளீச் வகையறாக்களைப் பயன்படுத்தும்போதும், துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது போன்ற வேலைகளின்போது நகங்கள் நீரில் ஊறியே இருப்பதும், நகங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். டின், கேன் போன்ற கூர்மையான, இறுக்கமான பொருட்களை திறக்கும் முயற்சியிலும் நகங்கள் பாதிப்படையலாம்.

நக அழகு

 

நக அழகுக்கு நெயில் பாலிஷ் மட்டுமல்லாமல் எனாமல், பேஸ் கோட்ஸ் (base coats), டாப் கோட்ஸ் போன்றவையும் மார்க்கெட்டில் உள்ளன. செல்லுலோஸ் நைட்ரேட்டைக் கொண்ட எனாமல், நிறமற்றது. சூரிய ஒளியில் இருந்து நகங்களைப் பாதுகாக்கக்கூடியது. பேஸ் கோட்ஸ், எனாமலை நகத்தோடு ஒட்டவைக்கும். டாப் கோட்ஸ், எனாமலின் பளபளப்பை அதிகரிப்பதோடு நகங்களை சிராய்ப்புகளில் இருந்து காக்கும். இவை தவிர, நகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவல்ல ஜெலட்டினும், காஸ்மெடிக் மார்க்கெட்டில் உண்டு.

மென்மையான விரல்களுக்கு...

 மிதமாக சூடு செய்யப்பட்ட பாதாம் எண்ணெயில், சொரசொரப்பான உள்ளங்கைகளை 10 நிமிடம் வைத்து எடுத்தால், சொரசொரப்பு நீங்கி பளபளப்பு கிடைக்கும்.

 பெட்ரோலிய ஜெல்லியைத் தடவி, 10 நிமிடங்கள் ஊறவிட்டுக் கழுவினால், விரல்கள் மென்மையாகும்.

 கைகளில் லிக்விட் பாராஃபின் தடவி 10 நிமிடங்கள் ஊறவைத்துக் கழுவினாலும் நல்ல பலன் கிடைக்கும்.

 இளஞ்சூடான நீரில் துளசி, புதினா இலைகள், சிறிதளவு ஆரஞ்சு சாறு சேர்த்து 10 நிமிடங்கள் கைகளை ஊறவைத்தால், கைகளில் உள்ள கருமை நீங்கும்.

தொகுப்பு: ச.ஆனந்தப்பிரியா  படங்கள்: சூ.நந்தினி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick