Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முகமூடி உலகில்... மனிதநேய முகங்கள்!

மனிதநேயம்

சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையம். இரவு 11.30. மனநிலை பாதிக்கப்பட்ட ஓர் இளம் பெண் ஆடைகளற்று பிளாட்ஃபாரத்தில் சுற்றித் திரிகிறார். ‘அய்யோ பாவம்’ என்று கடந்தவர்கள் பலர். முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு சென்றவர்கள் பலர். அந்தப் பெண்ணை வைத்த கண் வாங்காமல் விழுங்கியவர்கள் சிலர்.

கூட்டத்தில் இருந்த யாரோ ஒரு நல்லவர், சென்னை, தலைமைச் செயலகத்தில் பணியாற்றும், சமூக சேவைகளில் முன் நிற்கும் வெங்கடேஷின் செல்போனுக்குத் தொடர்புகொண்டு விவரத்தைச் சொல்கிறார். அடுத்த நிமிடமே வெங்கடேஷின் செல்போனிலிருந்து சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் அழகர்சாமிக்கு தகவல் பரிமாறப்பட, உடனடியாக அவர் பெண் காவலர்களுக்கு உத்தரவிட, சம்பவ இடத்துக்கு விரைந்த அவர்கள் அந்தப் பெண்ணை மீட்டனர். விசாரணையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் மஞ்சு என்று தெரியவர, இப்போது அந்தப் பெண் சென்னை போரூரில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மஞ்சுவைப் போல, ஆயிரக்கணக்கான ஆதரவற்றோரை மீட்டு காப்பகங்களில் சேர்க்கும் சேவையைச் செய்து வருகிறார்கள், திருவான்மியூரைச் சேர்ந்த வெங்கடேஷும், திருவொற்றியூரைச் சேர்ந்த வசந்தியும்! கரிசனமும் கோபமும் வெளிப்படுத்தின வசந்தியின் வார்த்தைகள்...

“என் கணவர் இறந்துவிட்டார். இயல்பிலேயே எனக்கிருந்த உதவும் எண்ணத்தால், பாலியல் தொழிலாளர்களை நல்வழிப்படுத்தி மறுவாழ்வு அளிக்க இயங்கிய ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தேன். இப்போது, வெங்கடேஷ் சாருடன் இணைந்து ஆதரவற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். சென்னையில் ஆதரவற்ற நிலையில் இருப்பவர்கள் குறித்து தகவல் கிடைத்ததும், அது எந்த நேரமாக இருந்தாலும், உடனடியாகப் புறப்பட்டுவிடுவோம். அவர்களுக்கு முதலுதவி, உதவிகளைச் செய்து சென்னையில் உள்ள ஏதாவது ஒரு காப்பகத்தில் சேர்த்துவிடுவோம். இதில் காவல்துறை எங்களுக்கு மிகவும் உதவிகரமாக  இருக்கிறது. சமீபத்தில் மஞ்சுவை மீட்ட முயற்சியிலும் அவர்களின் துரித நடவடிக்கை பெரும் நன்றிக்கு உரியது’’ என்றவர், தன் பயணத்தில் மறக்க முடியாத ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார்.

‘‘2012-ம் ஆண்டு எங்களுக்கு வந்த அழைப்பில் பேசியவர், காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூர் பகுதியில் நிறைமாத கர்ப்பிணியான, மனநிலை பாதிக்கப்பட்ட இளம் பெண் அநாதையாக சுற்றித் திரிவதாகச் சொன்னார். உடனடியாக அங்கு சென்றோம். அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணை பார்க்கவே பரிதாபமாகவும், வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்று பயமாகவும் இருந்தது. அருகில் சென்று, அவர் கைகளை அனுசரணையாகப் பற்றிப் பேச்சுக் கொடுத்தேன். முதலில் முரண்டு பிடித்தவர், பிறகு ஒத்துழைப்பு கொடுக்க... பெயர், முகவரி என்று எந்த விவரமும் தெரியாத அவரை சென்னையில் ஒரு காப்பகத்தில் சேர்த்து, அவருக்கு மரியாள் என்று பெயர் வைத்தோம்.

மரியாளை மருத்துவப் பரி சோதனைக்கு உட்படுத்தியபோது, அவர் ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் நோயாளி என்பது தெரிய வந்தது. மரியாளுக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கும் அதே நோய் பாதிப்பு இருக்க, அது 20 நாட்களில் இறந்தது. அடுத்த ஒரு மாதத்தில் மரியாள் இறந்தார். மரியாளை இந்த நிலைமைக்குத் தள்ளியவர்கள் யார் என்ற கேள்வி, இன்னும் என்னைத் துரத்துகிறது.

அந்த அயோக்கியர்கள் மனிதப் பட்டியலிலேயே சேரத் தகுதியற் றவர்கள். அவர்களை நினைத்தால் `ச்சீ' என்று குமட்டுகிறது!’’

- பெருங்கோபம், வசந்தியின் வார்த்தைகளில்!

‘‘சில ஆண்டுகளுக்கு முன்பு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஒரு அழைப்பு வந்தது. போய்ப் பார்த்தபோது, மனநிலை பாதிக்கப்பட்ட 15 வயது இளம் பெண் ஆடைகளற்று பிளாட்ஃபாரத்தில் சுற்றிக்கொண்டிருந்தார். அவர் டெல்லியைச் சேர்ந்தவர் என்பதைத் தவிர வேறு விவரம் அறிய முடியவில்லை. இப்போது ஒரு காப்பகத்தில் இருக்கும் அவர், நான் அங்கு செல்லும்போதெல்லாம் என்னை ஓடி வந்து அணைத்துக்கொள்வார். இப்படி இதில் அன்பு அத்தியாயங்கள் நிறைய!’’ என்றபோது, அவர் கண்களில் ஒளி!

வெங்கடேஷ், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையில் ரெக்கார்டு கிளார்க்காகப் பணிபுரிகிறார். அரசு வேலை பாதிக்காத வகையிலும், விடுமுறை நாட்களில் 24 மணி நேரமும் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

‘‘கிட்டத்தட்ட 20 வருடங்களாக ஆதரவற்ற வர்களை மீட்கும் சேவையில் இருக்கும் நான், இதுவரை 1500-க்கும் மேற்பட்டவர்களை காப்பகங்களில் சேர்த்துள்ளேன். களத்தில் பல பிரச்னைகளை சந்திக்க நேரும். சிலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு பல நாட்களாக சாலையோரத்தில் கிடப்பதால், அருகிலேயே செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசும். மனிதநேயம் மனதாகும்போது, அதெல்லாம் ஒரு பொருட்டாகத் தெரியாது. அவர்களுக்கு முதலுவி செய்து மருத்துவ உதவி தேவைப்பட்டால் மருத்துவமனையிலும், இல்லையெனில் காப்பகத்திலும் சேர்ப்பேன்.

மனநிலை பாதிப்பு, உறவுகளின் புறக்கணிப்பு போன்ற காரணங்களால் ஒரு வேளை உணவுக்கும் வழியில்லாத நிலையில் இனி நீங்கள் யாரையாவது எதிர்கொண்டால்... குறைந்தபட்சம் அவர்களின் அந்த நேரத்துப் பசியையாவது ஆற்றுங்கள். அதில் கிடைக்கும் திருப்தியும், புண்ணியமும் வேறு எதிலும் கிடைக்காது!’’

- மனிதநேயமாக மின்னியது வெங்கடேஷின் முகம்!

எஸ்.மகேஷ், படங்கள்:கே.கார்த்திகேயன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
கம்ப்யூட்டர் முதல் கார் டிரைவிங் வரை...
"தன்னம்பிக்கை வானளவு... மீள்வோம்தன்னாலே!'
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு!”
Advertisement
[X] Close