ஆபத்தில் கைகொடுக்கும் அசத்தல் 'ஆப்ஸ்'!

மிளகாய்ப்பொடியில் தொடங்கி பெப்பர் ஸ்பிரே வரை, பெண்களின் பாதுகாப்புக்கான தற்காப்புப் பொருட்கள் காலத்துக்கு ஏற்ப நவீனமாகிக்கொண்டே வருகின்றன. இந்த ஸ்மார்ட்போன் யுகத்தில், பெண்களின் பாதுகாப்புக்கான `ஆப்ஸ்’களும் பெருகியுள்ளன. புது இடத்திலோ, இரவு நேரத்திலோ, தனியாக சிக்கிக்கொள்ளும் சூழலிலிலோ... பெரிதும் கைகொடுக்கவல்ல `ஆப்ஸ்’களின் அறிமுகம் இங்கே...

சேஃப்டிபின் (safetypin)

ஒரு புதிய இடத்துக்குக் குடிபெயரும்போது அந்த இடத்தின் பாதுகாப்பு அம்சங்கள், அருகிலுள்ள காவல் நிலையங்கள், அவசரத் தொடர்பு எண்கள், மேலும் அந்த இடத்தின் சூழலுக்கு ஏற்ப மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் ஆகியவற்றை இந்த ஆப் வழங்குகிறது. வேலை காரணமாக தனியாக அறை எடுத்துத் தங்கும் பெண்கள், கல்லூரி ஹாஸ்டலில் இருக்கும் பெண்கள் போன்றோரின் மொபைலில் அவசியம் இருக்கவேண்டிய ஆப் இது.

சர்க்கிள் ஆஃப் சிக்ஸ் (circle of six)

இந்த `ஆப்’பில், அவசர நிலையில் தொடர்புகொள்ள நினைக்கும் ஆறு நபர்களின் தொடர்பு எண்களைப் பதிவுசெய்துகொள்ளலாம். இதில் வெவ்வேறு நோட் டிஃபிகேஷன்கள் இருக்கும். அதாவது, பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும் என்றாலோ, தெரியாத ஒரு பகுதியிலிருந்து அழைத்து வர யாரேனும் தேவைப்பட்டாலோ, பாதுகாப்பற்று தனித்திருப்பதாக உணரும் சூழலிலோ, இதைப் பயன்படுத்தினால், அதை ஒரு எஸ்.எம்.எஸ் அலர்ட் மூலம் இந்த ஆறு பேருக்கும் தெரியப்படுத்தும் இந்த ஆப். மேலும் அருகில் அவசரத்துக்குத் தொடர்புகொள்ளக் கூடிய எண்களையும் பரிந்துரைக்கும்.

வித்யூ ஆப் (vithU app)

ஓர் இக்கட்டான அவசர சூழ்நிலையில், மொபைலில் எண்களை அழுத்தக்கூட அவகாசம் இருக்காது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் கைகொடுக்கும் இந்த ஆப். மொபைலில் உள்ள பவர் பட்டனை இரண்டு முறை உடனுக்குடன் அழுத்தினால், `ஆப்’பில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் நபரின் தொடர்பு எண்ணுக்கு அலர்ட் கால் சென்றுவிடும். அது மட்டுமின்றி ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒருமுறை, உங்கள் இருப்பிடத்தை `ஜிபிஎஸ்’ மூலம் அந்த நபருக்கு அலர்ட் எஸ்.எம்.எஸ் ஆக அனுப்பிக்கொண்டே இருக்கும்.

ஸ்க்ரீம் அலார்ம் (scream alarm)

யாரேனும் தவறாக நடக்க முயற்சிக்கும் தருணத்தில், ஓரளவுக்கு மேல் கத்த இயலவில்லை என்றால், இந்த ஸ்க்ரீம் அலார்ம் ஆப் மூலம் மிகுந்த சத்தத்தை வெளிப்படுத்த முடியும். இது பெண்களின் குரலிலேயே அபாய ஒலி எழுப்பி, தொந்தரவு கொடுப்பவர்களை ஒரு கணம் நடுங்கச் செய்வதோடு, அக்கம்பக்கத்தில் இருந்தும் ஆட்களை உதவிக்கு வரவைக்கும்.

நிர்பயா (Nirbhaya)

இது மல்டி பர்பஸ் ஆப். பாது காப்பற்ற நிலையிலோ தனியாகவோ இருக்கும்போது, `ஆப்’பில் முன்னரே பதிவுசெய்யப்பட்ட நபரின் தொடர்பு எண்ணுக்கு ஒவ்வொரு 300 அடிக்கும் நீங்கள் இருக்கும் இடத்தை,  அப்டேட் கொடுத்துக்கொண்டே இருக்கும். மேலும், அவசர நிலையில் பவர் பட்டனை அழுத்தினால் அபாய ஒலியோ அல்லது பிறரின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு சிக்னலோ கொடுக்கும்.

பெண்களின் மொபைலில் நிச்சயம் இருக்கட்டும் ஒரு பாதுகாப்பு ஆப்!

தா.நந்திதா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick