நமக்குள்ளே!

‘பொங்கல் ஃபெஸ்டிவலுக்கு லீவ் விடப் போறாங்களே... நானு, மம்மி, டாடி மூணு பேரும் ஷாப்பிங் போவோம். புது டிரெஸ், ஸ்வீட்ஸ், கிஃப்ட்ஸ் வாங்கித் தருவாங்க. பொங்கல் சாப்பிடுவோம்... சினிமாவுக்குப் போவோம். அவ்ளோதான். ஆங்... சொல்ல மறந்துட்டேன். ஃபோர் டேஸ் கழிச்சு, பொங்கல் எப்படி செலிபிரேட் பண்ணோம்னு. மிஸ்கிட்ட ஒரு கட்டுரை எழுதிக் காட்டணும்...

அக்காவின் மகள், சென்னையில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். `பொங்கலுக்கு என்ன பண்ணுவீங்க?’ என்று போன் செய்து கேட்டபோது வந்துவிழுந்த பதில்தான் இது. இந்தத் தலைமுறை குழந்தைகளுக்குப் பண்டிகை என்பது பாடநூலில் உள்ள படங்களும் பாடமுமாகவே இருக்கிறது.

சின்ன வயதில் வீட்டில் இருக்கும்போது பழைய பொருட்களை போகியன்று கொளுத்தி, பொங்கலன்று கதிரவனுக்கு வெண்பொங்கல் படைத்து, மறுநாள் மாடுகளுக்கு மரியாதை செலுத்தி, அடுத்த நாள் பெரியவர்களை வணங்கி, ஆறு, குளம், ஏரி, வயல் என்று வெளியிடங்களில் கூடி கூட்டாஞ்சோறு சமைத்து, தாவணி, பட்டுப் புடவை, தாழம்பூ ஜடையோடு தெருவெல்லாம் வளைய வந்த நாட்களை எண்ணிப் பார்க்கும்போது... வழக்கம்போலவே ஏக்கம் பொங்குகிறது!

இப்போது அக்கா சென்னையிலும், நான் டெல்லியிலும் இருக்கிறோம். இருவரின் குழந்தைகளுக்குமே பொங்கல் என்பது ஒரு `ஃபெஸ்டிவல்’ மட்டுமே. ஒவ்வொரு வருடமும் அக்காவின் குடும்பமும் எங்கள் குடும்பமும் சேர்ந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா போவது வழக்கம். இம்முறை சொந்த கிராமத்துக்குப் போய், வயல்களில் தாழம்பூவைத் தேடி அதன் வாசத்தை குழந்தைகள் நுகரச் செய்து, பசுக்களில் பால் கறக்கும் அழகைப் பார்த்து அவர்களை ஆரவரிக்க வைத்து, சூளையில் வெந்து தயாராகும் மண்பானைகளின் மகத்துவம் காட்டி... என எங்கள் வாழ்நாளில் கிடைத்த எண்ணற்ற வரங்களை, குழந்தைகளுக்கும் காண்பிக்க முடிவெடுத்திருக்கிறோம்.’

- டெல்லியிலிருந்து வாசகி மஞ்சுப்ரியா அனுப்பியிருக்கும் கடிதம் இது.

இதைப்படிக்கும் போது எண்ணற்ற ஞாபக அலைகள் என் நினைவில் வந்து போகின்றன. சுற்றுச்சூழல் குறித்தும், இயற்கையின் இனிமை குறித்தும் ஏட்டுப்பாடங்களாக குழந்தைகளுக்குக் கடத்துவதைவிட,  இயற்கையைப் போற்றுவதற்கென்றே முன்னோர்கள் கட்டியமைத்திருக்கும் பொங்கல் போன்ற நன்னாட்களை, அவற்றின் இயல்போடு... குழந்தைகளோடு கொண்டாடும்போது அதன் பலன், பல்மடங்கு பெருகும் என்பது உண்மைதானே!

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

உரிமையுடன்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்