Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கலக்கலான வருமானம்... கண்ணாடியில்!

பிசினஸ்

"அடிவரையில் சறுக்கிய ஒரு தோல்வியில் இருந்து நான் தூக்கி நிறுத்தியதுதான், என் இந்த கண்ணாடி பிசினஸ்!''

- நிதானமாகப் பேசுகிறார், சென்னை, தி.நகர் ‘கிரியேட்டிவ் கிளாஸ் ஸ்டுடியோஸ்’ஸின் உரிமையாளர் மஞ்சுளா.

‘‘54 வருடங்களாக பரம்பரை பரம்பரையாக, என் புகுந்த வீட்டினர் பார்த்துக்கொண்டிருந்த கண்ணாடித் தொழில், கிட்டத்தட்ட படுத்துவிடும் சூழலில் இருந்தபோதுதான் நான் அந்த வீட்டில் மருமகளாக காலடி எடுத்து வைத்தேன். ‘இவ வந்தநேரம் இப்படி ஆயிடுச்சு’ என்று சொல்லிவிடுவார்களோ என்ற பயம் ஒருபக்கம், அந்தத் தொழிலை மீண்டும் நிமிர்த்திக்காட்ட நினைத்த துடிப்பு ஒருபுறம். ஆனால், அது உடனடியாக இயலாத காரியம் என்பதை நான் உணர்ந்தேன். கூடவே, பார்ட்னர்ஷிப்பில் தொழில் சென்றுகொண்டிருந்ததால், கோர்ட், கேஸ் எல்லாம் முடியும்வரை காத்திருந்தேன்.

எனக்குத் திருமணமான பன்னிரண்டு  வருடங்கள் கழித்து, ‘இந்தத் தொழிலை நாம எடுத்துச் செய்யலாம்!’ என்றேன் கணவரிடம். வைராக்கியத்துடன் தொழிலைக் கற்றுத் தேறி, கண்ணுங்கருத்துமாக பார்த்துக்கொண்டேன். குறுகிய காலத்துக்குள் அதில் முன்னேற்றத் தைக் காட்டினோம். காலத்தின் தேவைக்கு ஏற்ப `கண்ணாடிகள்' என்பதை, `டிசைனர் கண்ணாடிகள்' என்ற நவீன தளத்துக்கு உயர்த்தி, ஐந்து வருடங்களுக்கு முன் எங்கள் ‘கிரியேட்டிவ் கிளாஸ் ஸ்டுடியோஸ்’ஸை ஆரம்பித்தோம். இன்று இந்தத் தொழிலில் ஒரு வெற்றியாளராக எழுந்து நிற்கிறோம்!’’ என்றவர், தன் தொழில் பற்றிப் பகிர்ந்தார்....

‘‘அலுவலகம், ஹோட்டல், வீடு, பில்டர்கள் என எல்லாதரப்பு கஸ்டமர்களுக்கும் அவர்களுக்குத் தேவையான கதவு, ஜன்னல், பாத்ரூம் டோர், டேபிள் டாப், டைனிங் டேபிள் டாப் போன்றவற்றை கண்ணாடியில் டிசைன் செய்துகொடுப்பதுதான் எங்கள் தொழில். இது கிளாஸ் பெயின்ட்டிங் போல அல்லாது, கண்ணாடியிலேயே உருவங்கள் உருவாக்கும் மிக நுட்பமான வேலை. கெமிக்கல் பிராசஸில் டிசைன்களை உருவாக்குவதில் இருந்து, பத்திரமாக டெலிவரி செய்யும்வரை, 200 சதவிகிதம் கவனம் கொடுக்க வேண்டிய தொழில் இது. கிளாஸ் டிசைனிங்கைப் பொறுத்தவரை போட்டியாளர்கள் இங்கு நிறைய! புதுப்புது யோசனைகளை களமிறக்கிக்கொண்டே இருக்க வேண்டும்.

எங்களிடம் 200-க்கும் மேற்பட்ட மாடல்கள் உள்ளன. தவிர, கஸ்டமர்கள் விரும்பிக் கேட்கும் பிரத்யேக டிசைன்களையும் செய்து

தருவதுண்டு. சிலர் கண்ணாடிகளை வாங்கிக்கொடுத்து டிசைனிங் செய்துதரச் சொல்வார்கள். சில கஸ்டமர்கள் முழுப் பொறுப்பையும் எங்களிடம் ஒப்படைத்து விடுவார்கள். குறைந்தபட்சம் 900 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான கிளாஸ் டிசைன்களை செய்துதருகிறோம்’’ என்றபோது, கொஞ்சம் அசந்துதான் போனோம்! இந்த பிசினஸில் மார்க்கெட்டில் இப்போதுள்ள டிரெண்ட் பற்றித் தொடர்ந்து பேசினார் மஞ்சுளா...

‘‘பெருமாள், விநாயகர் உருவ டிசைன்கள், பூக்கள், இயற்கைக் காட்சிகளில் இருந்து... உலகின் மிகச்சிறந்த கட்டடங்களின் உருவங்கள் வரை கண்ணாடியில் டிசைன் செய்கிறோம். கலர் வொர்க் கிளாஸ் இப்போது அவுட் ஆஃப் ஃபேஷனாகி வருகிறது. காரணம், ஜன்னலுக்கு கலர் கிளாஸஸாக டிசைன் செய்யும்போது, வெயில்படுவதனால் அந்த நிறங்கள் விரைவில் பொலிவிழந்துவிடுகின்றன. எனவே, இப்போது அந்த ஆர்டர்கள் வருவதில்லை’’ என்றவர், தன் டீம் பற்றிச் சொன்னார்...

‘‘எங்கள் அலுவலகத்தில் ஆர்ட் வொர்க் செய்ய மூன்று பெண்களும், டெலிவரிக்கு மூன்று ஆண்களும் பணிபுரிகிறார்கள். என் கணவர் ரவீந்த்ரா, மூத்த பையன் பிரசாந்த் இருவரும், ‘விஜயலட்சுமி அண்ட் கோ’ என்ற கண்ணாடி நிறுவனத்தை பார்த்துக்கொள்கிறார்கள். இளைய மகன் கார்த்திக்கை, வெளிநாட்டில் கிளாஸ் கிராஃப்ட் கோர்ஸ் படிக்கவைத்தேன். `நான் நம்ம குடும்பத் தொழிலையே பார்க்கிறேம்மா’ என்று சந்தோஷத்துடன்  இந்தத் தொழிலைக் கையில் எடுத்தான். எட்டு வருடங்களுக்கு முன்

தொழிலில் நான் கொஞ்சம் சறுக்கிக் கொண்டிருந்தபோது, இந்த முறை அதை மேடேற்றியவன் கார்த்திக்தான். தொழில்சார்ந்த படிப்பு இருந்ததால், அதை காலத்தின் தேவைக்கு ஏற்ப நவீனத்துக்குத் திருப்பிக் கைதூக்கிவிட்டான். நான் ஜெயித்ததைவிட, அவனை ஜெயிக்க வைத்ததையும், அவன் எங்கள் தொழிலை ஜெயிக்க வைத்ததிலும் மகிழ்கிறேன்!’’ - ஒரு தாயாகப் பேசியவர், 

‘‘ஏற்ற இறக்கம் இல்லாத தொழில் உலகில் இல்லை. அதைத் தாண்டக் கற்றுக்கொண்டால் வெற்றி வெகுதூரம் இல்லை!’’

- கைகுலுக்கி முடிக்கிறார், மஞ்சுளா.

வே.கிருஷ்ணவேணி, படங்கள்:ஜெ.வேங்கடராஜ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
ஆயிரத்தில் ஒருத்தி!
இருபது வருடங்களாக ஹெச்.ஐ.வி... பம்பரமாக சுழலும் சேவகி!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு!”
Advertisement
[X] Close