என் டைரி - 384

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
கைவிட்டுப் போன பணம்... கைபிசைந்து நிற்கும் மகன்!

ருமகள் பிரச்னைதான் எனக்கும். ஆனால், நான் வருத்தப்படுவது எனக்காக அல்ல, என் மகனுக்காக.

என் மகன் பல வருடங்கள் வெளிநாட்டில் வேலைசெய்தான். மாதம் ரூபாய் 50 ஆயிரம் சம்பளம். அவன் மனைவிக்குதான் பணம் அனுப்புவான். ஒரு கட்டத்தில், `ஊர், உறவை எல்லாம் விட்டுவந்து உழைத்தது போதும்; சொந்த நாட்டில் மனைவி, அம்மாவுடன் சென்றுசேர்ந்து, ஏதேனும் தொழில் செய்து பிழைத்துக்கொள்ளலாம்' என்ற நம்பிக்கையோடு தாய்நாடு திரும்பினான்.

கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கழித்து வீடு திரும்பிய அவனுக்கு, என் மருமகள் தந்தாள் இடிபோன்ற அதிர்ச்சி. அவன் அனுப்பிய பணம் எதையும் சேர்த்துவைக்காமல், வெறுங்கையோடு இருந்திருக்கிறாள். அதில் அதிர்ச்சி அடைந்த என் மகன், ‘இந்த ஆறு வருஷத்துல 36 லட்சம் அனுப்பியிருக்கேன். என்னதான் செஞ்ச அதையெல்லாம்?’ என்று கேட்க, அவளிடம் பதில் இல்லை. மனம் நொந்துபோனவன், என் வீட்டுக்கு வந்தான். அந்நேரம் பார்த்து அவள் வீட்டைப் பூட்டி சாவியையும் எடுத்துக்கொண்டு தன் அக்கா வீட்டுக்குச் சென்றுவிட்டாள்.

இதற்கிடையில், ஐந்து வருடங்களுக்கு முன் எனக்கு போன் செய்த என் மகன், ‘அம்மா... அவளுக்கு ஒரு முக்கிய செலவு இருக்கு. நீங்க கையில இருக்கிற நகையையும், காசையும் கொடுங்க. நான் உங்களுக்கு திருப்பித் தர்றேன்’ என்று சொல்ல, நானும் என் 7 பவுன் நகை மற்றும் கையில் இருந்த 33 ஆயிரம் ரூபாயை அவளிடம் கொடுத்து அனுப்பினேன். அதுவும் போனது போனதுதான். இப்போது என் மகனுக்குக் கொடுத்து உதவ என்னிடமும் எந்தப் பொருளும் இல்லாமல் இருக்கிறேன்.

என் மகன் அனுப்பிய அத்தனை லட்சங்களையும் அப்படி என்னதான் செலவுசெய்தாள் என்று அவள் சொன்னாலாவது, மனம் சாந்தியடையும். அதையும் சொல்லாமல், அக்கா வீட்டில் இருந்துகொண்டு, நாங்கள் போன் செய்தாலும் எடுக்காமல் படுத்தியெடுக்கிறாள் மருமகள். மேலும், குற்ற உணர்ச்சியில் தவிக்க வேண்டியவள், ‘அவரு வேலைவெட்டி இல்லாம அவங்க அம்மா வீட்டுல இருக்காரு’ என்று அனைவரிடமும் சொல்லித் திரிவது, ஜென்மத்துக்கும் மன்னிக்க முடியாதது.

என் மகன் இப்போது வெறும் ஆளாக நிற்பதைப் பார்க்க சகிக்கவில்லை. இத்தனை வருடங்களாக உழைத்த அவன் உழைப்பு எல்லாம் வீணாகிப்போனதை நினைக்கும்போது என் பெத்த மனம் பற்றி எரிகிறது. அவன் செய்த தவறெல்லாம், தன் மனைவியை கண்மூடித்தனமாக நம்பியது மட்டுமே.

என் மகனின் வாழ்வு விடிவதற்கு வழி என்ன?!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்