டிஜிட்டல் டாக்டர்!

சாதனை

னீஷா மஹாஜன்...  26 வயதே நிரம்பிய இளம் பெண் மருத்துவர். மகாராஷ்ட்ராவில் ஜல்கான் நகருக்கு அருகில் படோண்டா கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, நவீன டிஜிட்டல் மருத்துவமனையாக மேம்படுத்தி உலக மீடியாக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

மனீஷாவுக்கு அவள் விகடனின் வாழ்த்துகளை சேர்ப்பித்தோம். உற்சாகமாக பேச ஆரம்பித்தார் மனீஷா...

‘‘புனேயில் மருத்துவம் படித்தேன். பின்னர் மும்பையின் பிரபல ஜே.ஜே மருத்துவமனையில் சில ஆண்டுகள் பணிபுரிந்தேன். கடந்த டிசம்பர் மாதம் படோண்டா கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசுப் பணி கிடைத்தது. வெளிநோயாளிகள் பிரிவுடன் நிர்வாக வேலைகளையும் நானே கவனிக்க வேண்டிய நிலை. அங்கு போதுமான சிகிச்சை கிடைக்காமல், வசதியில்லாதவர்கள் கூட கடன் வாங்கி சிகிச்சைக்காக மும்பை, புனே போன்ற பெருநகரங்களில் உள்ள மருத்துவமனை களுக்குச் சென்று அநியாயமாகப் பணத்தை இழந்து கொண்டிருந்தார்கள்.

இதைத் தடுக்க, அரசு மருத்துவமனையில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தரமான சிகிச்சை அளித்தால், நிச்சயமாக மக்கள் அரசு மருத்துவமனையை நாடி வருவார்கள் என்று நம்பினேன். பொறிதட்டினாற்போல, பிரதமர் நரேந்திர மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம் என் நினைவுக்கு வர, அதைச் செயல்படுத்த முடிவெடுத்தேன். சாஃப்ட்வேர் இன்ஜினீயர் வினோத்துடன் இதை செயலாக்குவது பற்றி ஆலோசித்தேன். என்னுடன் பணிபுரிபவர்களுக்கும் இந்த நோக்கம் பற்றி விளக்கினேன்’’ என்றவர், நிதிக்காக யாரையும் எதிர்பார்க்காமல், இணைந்த கைகளை நம்பி வேலைகளைத் தொடங்கியுள்ளார்.

‘‘டிஜிட்டல் மருத்துவமனை திட்டத்தைப் பற்றிச் சொன்னதும், இந்தத் தொகுதி எம்.எல்.ஏ 50 ஆயிரமும், சக பணியாளர்கள் 19 ஆயிரமும், பஞ்சாயத்து உறுப்பினர் வைஷாலி 20 ஆயிரமும் என, அனைவரும் அவரவர்களால் முடிந்ததை மிகுந்த அக்கறையுடன் வழங்கினார்கள். நான் என் சம்பளத்தில் இருந்து 30 ஆயிரம் ரூபாய் வழங்கினேன். சேகரித்த தொகையில் மருத்துவமனை உபகரணங்களையும் சோலார் பேனல்களையும் வாங்கினோம். அப்படியும் பணம் போதவில்லை. கிராம மக்கள் தாங்களாகவே முன்வந்து மீதிப்பணத்தை வசூல்செய்து தந்தார்கள். அதைக்கொண்டு மத்திய, மாநில அரசிடம் இருந்து டிஜிட்டல் பல்ஸ் ஆக்ஸிமீட்டர், குளுக்கோமீட்டர், எடை பார்க்கும் கருவி, ரத்த அழுத்தத்தை பரிசோதிக்கும் கருவிகள் போன்றவற்றை வாங்கி, இந்த மருத்துவமனைக்கு தொழில்நுட்பம், நவீனம் என்று புத்துயிர் தந்தோம்’’ என்று மனீஷா சொல்லிக்கொண்டே தன் முன்னால் இருந்த கம்ப்யூட்டரைத் தட்டுகிறார். அதில் மருத்துவமனையின் நோயாளிகளைப் பற்றிய விவரங்கள், பணியாளர் களின் வருகைப் பதிவேடு, சம்பளப் பட்டியல் என நொடியில் துல்லியமாக திரையில் விரிந்து நம்மை அசரவைத்தது.

‘‘இந்த தொழில்நுட்ப மயமான நிர்வாகத்தால், கையிருப்பில் உள்ள மருந்துகள் குறித்த விவரங்களை உடனுக்குடன் தெரிந்துகொண்டு, தேவைக்கேற்ப வாங்க முடிகிறது. காலாவதியான மருந்துகள் தற்போது எங்களிடம் இல்லை. குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடவேண்டிய நாட்கள் குறித்த விவரங்களை பெற்றோரின் மொபைல் எண்ணுக்கு முன்கூட்டியே தகவல் அனுப்பி நினைவுபடுத்துகிறோம். சூரிய சக்தி மின்சாரம் கிடைப்பதால், மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. `சிசிடிவி கேமரா’க்கள் இருப்பதால் தற்போது பணியாளர் கள் ஈடுபாட்டுடன், வெளிப்படையாக, பொறுப்பு உணர்ந்து பணிபுரிகின்றனர். நோயாளிகளிடம் கனிவுடன் பேசுகின்றனர்’’ என்று புன்னகை பூக்கிறார் மனீஷா.

இப்போது இந்த மருத்துவமனையில் வெளிநோயாளிகளின் எண்ணிக்கை 40% அதிகரித்துள்ளது. மகப்பேறுப் பிரிவில் நவீன உபகரணங்கள் வந்திருப்பதால், வசதியுள்ள வர்கள்கூட பெருநகரங்களுக்குச் செல்ல நினைக்காமல், நம்பிக்கையுடன் இங்கு வருகிறார் கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்