கேன்சரும் கடந்து போகும்!

- கௌதமி சொல்லும் `லைஃப் அகெய்ன்விழிப்பு உணர்வு

‘குரு சிஷ்யன்’ திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, 90-களின் நம்பர் ஒன் கதாநாயகியானவர் கௌதமி. பிறகு குடும்பம், குழந்தை என்றானவரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது அவருக்கு ஏற்பட்ட மார்பகப் புற்றுநோய். ஆனாலும், மனம் தளராமல் 10 வருடங்கள் நோயுடன் போராடி மீண்டு வந்திருக்கும் கௌதமி, ‘லைஃப் அகெய்ன்’ என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். கேன்சரில் இருந்து அவர் மீண்டு வந்த தருணங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்....

‘‘கேன்சர் குறித்த உங்களுடைய கருத்தியல் எப்படிப்பட்டது?’’

‘‘கேன்சரைப் பொறுத்தவரை 60% புற்றுநோய்களை சுயபரிசோதனையிலேயே கண்டறிந்துவிட முடியும். பிறகு பயமின்றி மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது புத்திசாலித்தனம்.’’

‘‘இதில் உங்கள் அனுபவம் என்ன?’’

‘‘2004-ம் வருடம், என்னுடைய 32 வயதில், நான் சுயபரிசோதனை செய்துகொண்டபோது எனக்குள் ஏதோ தவறாக இருப்பது புரிந்தது. உடனடியாக மருத்துவரை அணுகினேன். மார்பகப் புற்றுநோய் என்னைப் பாதித்திருக்கிறது என்பது தெரியவந்தது.

அது தொடக்க நிலையில் இருந்த கேன்சர் என்பதால், எனக்கு துளிகூட பயம் ஏற்படுத்தவில்லை. பயம்தான் ஒருவருக்கு அவர் நோயை அதிகப்படுத்தும் காரணி என்று சொல்வேன். முக்கியமான ஒன்று, கூகுளில் தேடி உங்கள் நோயைப் பற்றித் தெரிந்துகொள்வது வேண்டவே வேண்டாம். அப்படித்தான் நானும் பயமுறுத்தும்படியான விஷயங்களைத் தூக்கிப் போட்டுவிட்டு, முறையான மருத்துவ சிகிச்சையை மட்டுமே பின்பற்றினேன். என் அனுபவத்தில் இருந்து சொல்வது இதைத்தான்... கேன்சர் என்றதும் அழகு, வலி, சிகிச்சை, எதிர்கால பயம் போன்றவற்றை நினைத்து மறுகாமல், சிகிச்சையை வெற்றிகரமாக முடிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி மட்டும் நினையுங்கள்.

‘‘கடினமான மருத்துவ சிகிச்சைகளை எப்படி ஏற்றுக்கொண்டீர்கள்?’’

‘‘கேன்சரைப் பொறுத்தவரை மருத்துவ சிகிச்சை மிகக் கடினமானதும், மனஉளைச்சலை ஏற்படுத்தக் கூடியதும்தான். ஹீமோதெரபியால் முடி கொட்டும், உடல் இளைக்கும். மருந்துகள், மாத்திரைகள், ஊசி... என வலி நிறைந்த ஒன்றுதான். ஆனால், ஒரு பெரிய இழப்பிலிருந்து வெளிவர அத்தகைய சின்னச் சின்னச் வலிகளை நாம் தாங்கித்தான் ஆக வேண்டும். அதுவும் ஒரு அம்மாவாக, என் மகளுக்காக நான் வேண்டும். அதனால், என் மகளுக்கு புரிகின்ற மாதிரி என் நிலையை விளக்கினேன். பலன்... சிகிச்சையின்போது என்னுடனே இருந்து என் திடத்தை அதிகப்படுத்தினாள்.

‘‘லைஃப் அகெய்ன் ஃபவுண்டேஷன் குறித்து...’’

‘‘இந்த அமைப்பு கேன்சர் நோயாளிகளுக்கு மட்டும் அல்ல... எல்லோருக்குமானது. ‘ஒருவருக்கொருவர்... எல்லோருக்கும் இங்கு எல்லோரும் ஆதரவு ('one for one. we are there for everyone')’ என்பதுதான் இதன் குறிக்கோள். `கேன்சர் என்பது கொடிய நோயல்ல, சரியான பரிசோதனைகள் மூலமாக அதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட முடியும்' என்பது உள்ளிட்ட விழிப்பு உணர்வுத் தகவல்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். கேன்சர் குறித்து மனத்தெளிவு சிறிதளவும் இல்லாத கிராமப்புற மக்களிடம், கேன்சர் குறித்த பார்வையை ஒரு நடிகை என்ற என் இமேஜ் ஒரு துளியாவது மாற்ற உதவும். அதற்காகத்தான் நான், ஊடகவியலாளரும், என் தோழியுமான மாலா மணியன், என்னுடைய சகோதரி ஹேமா ஆகியோர் இதை ஆரம்பித்துள்ளோம்.

அதற்காகவே தன்னார் வலர்களை ஒன்றிணைத்து வருகிறோம். வீடியோக்கள், படங்கள், கேன்சரிலிருந்து மீண்டு வந்தவர்களின் தன்னம்பிக்கை வார்த்தை கள் என விரைவில் களத்தில் இறங்க உள்ளோம்.’’

‘‘கேன்சரிலிருந்து மீண்டு வந்த பெண் களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் உங்களுடைய அறிவுரை என்ன?’’

‘‘குடும்பத்தின் அச்சாணியாக இருப்பவள் பெண். எல்லோருடைய பிரச்னைகளையும் சுமக்கும் வலிமையுடைவள் என்றாலும், அவளுடைய பிரச்னைகளைக் கண்டு பயம்கொள்பவள். அவளுக்கு அதிலிருந்து வெளிவர அன்பு, அர வணைப்பு தேவைப் படுகிறது. அதுவும் உடலால் பாதிக்கப்படும்போது அவளுடைய மனதை வலிமையாக்க வேண்டிய அவசியம் குடும்ப உறுப்பினர்களுக்கு இருக்கிறது. கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  உங்களால் முடிந்த அரவணைப்பை தவறாமல் கொடுங்கள்!’’

- புன்னகையுடன் சொல்கிறார் கெளதமி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்