என் டைரி - 385

உதவிக்கு விலையாய் தன்மானம்... உருகித் தவிக்கும் ஓர் உள்ளம்!

ன் கணவருக்கு ஒரு தம்பி, இரண்டு தங்கைகள். அனைவரும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசிக்கிறார்கள். எங்களைவிட வசதியான வாழ்க்கையும்கூட. பெரிய வருமானம் இல்லை என்றாலும் நானும், என் கணவரும், குழந்தைகளும் சந்தோஷமாக வாழ்ந்தோம்... இரண்டு வருடங்களுக்கு முன் என் கணவரின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட நாள் வரை.

ஏலச் சீட்டு, குலுக்கல் சீட்டு என்று சீட்டு பிடித்துவந்தார் என் கணவர். நானும் கணக்கு வழக்கு, சீட்டு வசூல், பணப்பட்டுவாடா என்று தொழிலில் அவருக்கு உதவியாக இருந்தேன். எதிர்பாராதவிதமாக, 10 லட்ச ரூபாய் சீட்டுப்போட்ட ஒருவர் சீட்டை எடுத்துக்கொண்டு தொகையைக் கட்டாமல் ஓடிவிட, அந்த நஷ்டத்தில் எங்கள் குடும்பம் நொடித்துவிட்டது.

எங்களிடம் இருந்த நகை, கொஞ்சம் சேமிப்புப் பணம் எல்லாமுமாகச் சேர்த்து 3 லட்சம்வரை திரட்ட, என் கணவருடன் பிறந்த தம்பியும் தங்கைகளும் 7 லட்சம் ரூபாய் சேர்த்துக்கொடுத்து உதவ... சீட்டுப் போட்டவர்களுக்கு கடனை அடைத்து, ஒருவழியாகக் கரையேறியது எங்கள் குடும்பம். ஆனால், அந்தக் உதவிக்குக் கைம்மாறாக என் கணவரை அடிமையாக்கிக்கொண்டது அவரது குடும்பம்.

இந்த இரண்டு வருடங்களாக என் கணவருக்குத் தொழில், வேலை, வருமானம் என்று எதுவும் இல்லை. தன் தம்பி, தங்கைகள் வீடுகளுக்கு மளிகைப் பொருட்கள் வாங்கித் தருவது முதல், மின்சாரக் கட்டணம் கட்டுவதுவரை அனைத்து வேலைகளையும் பார்த்துக்கொடுக்கிறார். அவர்கள் எங்கள் குடும்பத்தின் பொருளாதாரத்துக்கு உதவி வருகிறார்கள். ஆனால், அண்ணனாக இல்லாமல், இப்போதெல்லாம் ஒரு வேலையாளாகத்தான் அவரை அவர் உறவுகள் நடத்துகிறார்கள்.

‘இப்படியே எத்தனை வருஷம் ஓட்ட முடியும்? கடனாகவாவது உங்களுக்கு மளிகைக்கடை, ஆட்டோனு ஏதாச்சும் தொழிலுக்கு ஏற்பாடு பண்ணித் தரச் சொல்லுங்க. நாம உழைச்சு சம்பாதிச்சு கடனை அடைச்சுக்கலாம். வாங்கின காசுக்காக சுயமரியாதையையும், மொத்த வாழ்க்கையையும் அடகுவைக்க முடியாது’ என்று கணவரிடம் சொன்னேன். ‘சீட்டுப்போட்டவங்க சட்டையைப் பிடிச்சப்போ, என் தம்பி, தங்கச்சிங்க பண்ணின உதவி பெருசு. அதுக்காக ஆயுளுக்கும் நான் அவங்களுக்கு அடிமையா இருந்தாலும் தகும். இதில் இன்னும் வேற உதவச்சொல்லி அவங்களை என்னால கேட்க முடியாது’ என்கிறார். என் பிறந்த வீட்டிலும் எங்களுக்கு உதவும் அளவுக்கு வசதி இல்லை.

இந்த இக்கட்டான சூழலில் இருந்து எப்படி மீள்வது? நாங்கள் தலைநிமிர்ந்து வாழ ஆலோசனை கூறுங்கள் தோழிகளே..!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்