Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உங்கள் பிள்ளைக்கு நீங்கள்தான் பியூட்டிஷியன்!

- `லைஃப்லாங்’ அழகுக் குறிப்புகள்பியூட்டி அண்ட் ஹெல்த் ஸ்பெஷல்

`எந்தக் குழந்தையும் அழகுக் குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே...
அந்த அழகு அப்படியே இருப்பதும்,
காணாமல் போவதும்
அன்னை வளர்ப்பினிலே!’


- இதென்ன புதுப்பாட்டு என்று யோசிக்காதீர்கள்.

‘சின்ன வயசுல இவ முகம் அழகா பளிங்கு மாதிரி இருக்கும். இப்ப முகமெல்லாம் பருவா இருக்கு’, ‘ஸ்கூல் படிச்சப்போ

தலைமுடி அப்படியே அலை பாயும். இப்போ 25 வயசுதான் ஆகுது... ஆனா, முன் நெத்தியில வழுக்கை’ என்று கவலைப்படும் அம்மாக்களின் புலம்பல்கள் அதிகம். குழந்தைகள் வளர வளர அவர்களின் அழகு காணாமல் போவதே இதற்குக் காரணம்

வருங்கால அம்மாக்களும் இப்படி வருத்தப்படாமல் இருக்கவும், பிற்காலத்தில் உங்கள் குழந்தைகள் பியூட்டி பார்லர் நோக்கிச் செல்லாமல் இயற்கையாகவே அவர்களின் உடல் ஆரோக்கியத்துடன் கூடிய அழகுடன் மிளிரவும்... குழந்தை பிறந்ததில் இருந்தே அதன் சரும நலனைக் காக்க செய்ய வேண்டியவை பற்றிய ஆலோசனைகளைச் சொல்கி றார், சென்னையில் உள்ள கேர் அண்ட் க்யூர் அரோமா கிளினிக்கின் நிர்வாகி கீதா அஷோக்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு..!

கர்ப்பகாலத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகமுள்ள காய்கறிகள், பழங்கள், நட்ஸ் போன்றவற்றைச் சாப்பிடவும். இது வயிற்றில் உள்ள குழந்தையின் உடல் பாகங்கள், முடி, சருமம் என அனைத்துக்கும் நல்ல போஷாக்கைத் தரும். குறிப்பாக விட்டமின்-சி... குழந்தையின் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிப்பதுடன், சருமத்துக்கு நல்ல நிறம் கொடுக்கும்.

பிறந்த குழந்தைக்கு..! 

பிறந்து 10 நாளான பிறகு, குழந்தையின் உடலில் பேபி ஆயில் தடவி வெயிலில் காட்டுவார்கள். அதற்கு பேபி ஆயிலைவிட, ஆல்மண்ட் ஆயில் அல்லது அவகாடோ ஆயில் சிறந்தது. அதைத் தடவி காலை 6 மணியிலிருந்து 7 மணி வரையிலான இளம் வெயிலில் குழந்தையைக் கொஞ்ச நேரம் காட்டவும். பிறகு, நலங்கு மாவு தேய்த்துக் குளிக்க வைக்கவும்.

இளம்வெயிலில் குழந்தைக்குத் தேவையான விட்டமின்-டி சத்து கிடைப்பதுடன், சூரியனின் மிதமான வெப்பத்தினால் சருமத் துவாரங்கள் திறந்து சருமத்தில் தடவியுள்ள எண்ணெய் முழுவதும் உடலினுள் இறங்கும். இதனால் வளர்ந்ததும்கூட சருமம் இயற்கை வனப்புடன் இருக்கும்.

நலங்கு மாவு!

ஆவாரம்பூ, அதிமதுரம், பூலாங்கிழங்கு, கார்போக அரிசி, உலர்ந்த ரோஜா இதழ்கள், பச்சைப் பயறு இவை எல்லாவற்றிலும் தலா 100 கிராம் எடுத்து மெஷினில் பொடிக்கவும். அதைக் காற்றுப்புகாத டப்பாவில் பத்திரப்படுத்தவும். இந்த நலங்கு மாவை தினசரி குழந்தைக்கு குளியலுக்குப் பயன்படுத்தி வர, பிற்காலத்தில் உடலில் மற்றும் வியர்வை நாற்றம் வராமலிருக்க உதவும்.

தலைமுடி ஆரோக்கியம்!

பெரியவர்களைப்போல் அல்லாமல் பிறந்த குழந்தைக்கு அனைத்து சீதோஷ்ண நிலைகளும் ஒத்துக்கொள்ளும். ஆகவே வெந்நீர்தான் என்று இல்லாமல், அறையின் தட்பவெப்ப நிலையில் உள்ள தண்ணீரிலேயே குழந்தையைக் குளிப்பாட்டலாம். பிறந்த குழந்தையின் தலையில் படிந்திருக்கும் வெண்துகள் போன்ற படிவம், முடியின் வேர்க்கால்களில் அடைத்துக் கொண்டு முடிக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் செய்யும். இதை தேய்த்துக் குளிப்பாட்டாமல்விட்டால் முடி மிக மெலிதாக வளர ஆரம்பிக்கும். அந்தக் குழந்தைகளை தினசரி தலைக்கு குளிக்க வைக்கும்போது இப்படிவம் நாளடைவில் உதிர்ந்து, தலைமுடிக்கு நல்ல ஆரோக்கியமும் அடர்த்தியும் கிடைக்கும்.

2 முதல் 5 வயதுடைய குழந்தைகளுக்கு..!

சில பெற்றோர் குழந்தை கறுப்பாக உள்ளது என, சிறுவயது முதலே அதற்கு ஃபேர்னஸ் க்ரீம் தடவ ஆரம்பித்துவிடுவார்கள். இது முற்றிலும் தவறானது. கறுப்போ, வெள்ளையோ... சருமத்துக்கு அழகைத் தருவது, நல்ல ஆரோக்கியம்தான். ஆரோக்கியமான சருமம் நிற பேதமில்லாமல் வனப்புடன் மிளிரும். எனவே, குழந்தைக்கு சாத்துக்குடி, கேரட் போன்றவற்றின் ஜூஸ்களைத் தொடர்ந்து கொடுக்கவும். சோப் தவிர்த்து, நலங்கு மாவு தேய்த்துக் குளிப்பாட்டவும்.  

வாரம் இருமுறை, ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் அரை ஸ்பூன் நல்லெண்ணெய் எனும் விகிதத்தில் கலந்து, தலைக்குத் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து, நல்ல தரமான மற்றும் மைல்டான ஷாம்புவால் அலசவும். சிகைக்காய் பொடி கூந்தலை வறண்டுபோகச் செய்யும் என்பதால் தவிர்க்கவும். 

பொதுவாக அழுக்கு நீங்க மட்டுமல்லாமல், உடல் சூடாவதைத் தவிர்த்து குளிர்விக்கவே தினசரி குளியல் முறை செய்யப்படுகிறது.  சிறு குழந்தைகளைக் குளிப்பாட்ட, ஒரு குளியல் டப்பில் நீர் நிரப்பி, அதில் ஷவர் ஜெல் மற்றும் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கக் கூடிய இந்து உப்பு ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்து, குழந்தையை அதில் அமரவைத்து குளிப்பாட்டினால் பிற்காலத்தில் சரும நோய்கள் வருவதைத் தவிர்க்க முடியும்.

குழந்தைகளின் சரும நிறம் மேம்பட..!

100 மில்லி மினரல் வாட்டரில், ஃப்ரெஷ்ஷான பன்னீர் ரோஜா இதழ்கள் ஒரு கைப்பிடி சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவும். நீர் சிறிது வற்றியதும் அடுப்பிலிருந்து இறக்கி, ஒரு மூடி போட்டு மூடி 24 மணி நேரம் ஊறவிடவும். பிறகு அதை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளவும். 

தினமும் காலை மற்றும் மாலையில் ரோஜா நீரில் பஞ்சை நனைத்து குழந்தைக்கு உடல் முழுவதும் துடைத்துவிடவும். இதனால் சரும நிறம் மேம்படுவது மட்டும் இல்லாமல், இறந்த செல்கள் சுத்தமாக நீக்கப்படும் (இத்திரவம் தீர்ந்ததும் மறுபடி புதிதாக செய்துகொள்ளவும். மொத்தமாக செய்துவைக்க வேண்டாம்).

5 முதல் 10 வயதுடைய குழந்தைகளுக்கும், 10 முதல் 12 வயதுடைய சிறுவர்களுக்குமான சரும ஆரோக்கிய ஆலோசனைகளை அடுத்த இதழில் பார்க்கலாம்...

- இந்துலேகா.சி

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
எக் ஷாம்பு... ஐந்தே நிமிடத்தில் தயாரிக்கலாம்... அழகான கூந்தல் பெறலாம்!
அன்றாட வாழ்க்கையில், அழகு... ஆரோக்கியம்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு!”
Advertisement
[X] Close