என் டைரி - 382

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
விநோதமான அம்மா... விசனத்தில் மகள்!

திருமணத்துக்குப் பின் பெண் களுக்குப் பெரும்பாலும் மாமியார்தான் பிரச்னையாக இருப்பார். ஆனால், எனக்கோ என் அம்மாதான் பிரச்னை!

அன்பான கணவர் கிடைத்திருக் கிறார். ஆறு மாத திருமண வாழ்க்கையை காதல் பொங்க கடக்கவிருக்கிறோம். விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டிருக்கிறோம். மகிழ்ச்சிக்கு எந்தக் குறையும் இல்லை. என் கணவரின் பெற்றோர் வரும்போது அவர்களை நான் தாங்குவது, என் வீட்டினர் வரும்போது அவர்களை அவர் தாங்குவது என்று மிகப் புரிதலுடனும் பக்குவத்துடனும் வாழ்ந்து வருகிறோம். ஆனாலும் என் அம்மா, ‘நீயெல்லாம் என்ன குடும்பம் நடத்துற?’ என்ற ரீதியில் என்னை கரித்துக்கொண்டே இருப்பதுதான் துயரம்.

அம்மாவின் 16 வயதிலேயே அவருக்கு நான் பிறந்துவிட்டேன். ஒரே பெண். என் அப்பா-அம்மாவுக்கு இடையே ஒரு சம்பிரதாய வாழ்க்கை இருந்ததே தவிர, அன்பு, காதல், நெருக்கம் என்று அவர்கள் வாழ்ந்த தில்லை. அதனால், நானும் என் கணவரும் அந்நியோன்யமாக இருக்கும் பொழுதுகளில் எல்லாம் என் அம்மாவுக்கு ஏக்கமும், சமயங்களில் பொறாமையும்கூட எழுவதை நான் உணர்கிறேன். அதனால் முடிந்தவரை அவர் முன் என் கணவரிடம் இருந்து நான் விலகியே இருக்கிறேன். ஆனால், ரொமான்டிக் ஆளான கணவரை என்னிடம் இருந்து நிறுத்திவைக்க முடியவில்லை.

அனைவரும் இருக்கும்போது, ‘வேர் இஸ் மை ஸ்வீட் பொண்டாட்டி?’ என்று தேடிவந்து என் அருகில் அமர்வார்; குங்குமம் இட்டுவிட்டு, விரிந்துகிடக்கும் கூந்தலை திடீரென க்ளிப் செய்துவிட்டு, ‘அழகுடீ நீ’ என்பார்; என்னைச் சுற்றி சுற்றிவந்து ஏதாவது சினிமா பாடல்களை பாடுவார். அந்நாட்களில் அம்மாவின் அர்ச்சனை என்னால் தாங்கமுடியாத அளவுக்கு இருக்கும். 

‘நீயும் உன் வீட்டுக்காரரும் நாகரிகமாவா நடந்துக்கிறீங்க?’, ‘எப்பப் பார்த்தாலும் வீட்டையே சுத்தி வர்றாரே... ஆம்பளையா லட்சணமா வெளிய போகமாட்டாரா அவர்?’ என்று அம்மா உதிர்க்கும் வார்த்தைகளில், கலாசாரம் என்பதைத் தாண்டி, அவரின் பொறாமையை நான் நன்கு உணர்கிறேன். பல சமயங்களில் கண்டுகொள்ளாமல் விட்டாலும், சில சமயங்களில் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்டாலும், எல்லா சமயங்களிலும் அப்படி இருப்பேன் என்று இப்போது நம்பிக்கையில்லை. எப்போது வெடித்துவிடுவேனோ என்று எனக்கே அச்சமாக இருக்கிறது. எனவே, இப்போதெல்லாம் அம்மா என் வீட்டுக்கு வருகிறார் என்றாலே பதறுகிறது எனக்கு.

இந்த விநோதமான பிரச்னையை எப்படி சமாளிப்பது?!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்