அடுக்களையிலேயே அழகாகலாம் - 6

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வெயிலிலும் அழகு... தர்பூசணி தரும் வழிகள் 10

வெயில் காலத்தில் தர்பூசணி உடலுக்குக் குளிச்சி தரக்கூடியது. 90% தண்ணீர் இருப்பது, இதன் சிறப்பு. வெயிலால் ஏற்படும் அனைத்து வகையான உடல் மற்றும் சருமப் பிரச்னைகளை விரட்டியடிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. தர்பூசணி ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் தரக்கூடிய பலன்களை இங்கே பட்டியலிடுகிறார், அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி.

1. சன் டேன், உஷ்ணத்தைக் குறைக்க

தர்பூசணிச் சாறு – அரை கப், கடலை மாவு – அரை கப், கஸ்தூரி மஞ்சள்தூள் – 2 தேக்கரண்டி கலந்து, சோப்புக்குப் பதிலாக இதைப் பயன்படுத்தி பாதம் முதல் உச்சிவரை 5 நிமிடங்கள் மிருதுவாக மசாஜ் செய்து குளிக்கவும். இது வெயிலினால் ஏற்படும் டேனை நீக்கி, உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.

2. மாசு, கறுப்படைதல் நீங்க

வெளியே சென்று வந்தால் மாசு, தூசு பட்டு முகம் கறுப்படையும். இதற்கு ஓட்ஸ் பவுடர் - அரை கப், தர்பூசணிச் சாறு - ஒரு கப், பச்சைக் கற்பூரம் பவுடர் – 2 சிட்டிகை ஆகியவற்றைச் சேர்த்து அரைக்கவும். இதை வெளியே செல்லும் முன் ஃபேஸ்பேக் ஆகப் போட்டுக்கொண்டு, முகம் கழுவிவிட்டுச் சென்றால், சருமத் தொல்லைகள் வராமல் தடுக்கும்.

3. வியர்வை துர்நாற்றம் நீங்க

25 கிராம் வெட்டிவேர், ரோஜா – 5 பூக்களின் இதழ்கள், வேப்பந்தளிர் – 4, வெந்தயத் தூள் – 25 கிராம், பூலாங்கிழங்கு – 25 கிராம், தர்பூசணிச் சாறு – ஒரு கப் எடுத்து அரைக்கவும். வியர்வை அதிகம் வெளியேறும் பகுதிகளில் தடவி, காய்ந்ததும் குளிக்கவும். இதனால் வியர்வையினால் வரும் துர்நாற்றம் முற்றிலும் நீங்கும்.

4. புத்துணர்ச்சி பெற

வெயிலினால் சருமமும் உடலும் சோர்ந்தே இருக்கும். தர்பூசணி 5 பீஸ், பன்னீர் ரோஜா 5, மரிக்கொழுந்து ஒரு கட்டு எடுத்து சுத்தம்செய்து ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். அதை ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து... பின்னர் முகம், கழுத்து, கை, கால்களில் பூசிக் கழுவினால், உடலும் சருமமும் புத்துணர்ச்சி பெறும்.

5. கண் எரிச்சல் நீங்க

வெள்ளரிக்காய் 2 பீஸ், தர்பூசணி 2 பீஸ், ஒரு தேக்கரண்டி பால் பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அரைத்து, கண்களைச் சுற்றி பேக் போடவும். 10 நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வெடுக்கவும். பிறகு கழுவினால், வெயிலால் ஏற்படும் கண் எரிச்சல் நீங்கி, புத்துணர்வை உணரலாம்.

6. உடல் மற்றும் முக எரிச்சலைத் தவிர்க்க

தர்பூசணிச் சாறு – அரை கப், எலுமிச்சைச் சாறு – 2 தேக்கரண்டி, தக்காளி – கால் கப் எடுத்துக் கலக்கவும். சிறிய பருத்தித் துணியில் அதை நனைத்தெடுத்து கை, கால், உடலில் ஒற்றியெடுத்து, பின்னர் குளிக்கவும். இது உடல் எரிச்சலை நீக்கும். தர்பூசணி விதைகளை அரைத்து, பொடி செய்து, கடலை மாவுடன் கலந்து வைத்துக்கொண்டு முகம் கழுவ, முக எரிச்சல் நீங்கி குளுமை கிடைக்கும்.

7. முழங்கை, கால், கழுத்து கறுப்படையாமல் தவிர்க்க

இளநீர் - கால் கப், தர்பூசணிச் சாறு - கால் கப், கஸ்தூரி மஞ்சள் – 4 தேக்கரண்டி எடுத்துக் கலந்து கால், முழங்கை, கழுத்துப் பகுதிகளில் பூசிக் கழுவினால் வெயில், வியர்வையால் கறுப்படைவதைத் தவிர்க்கலாம்.

8. பரு, கரும்புள்ளிகள் நீங்க

புதினா இலைப் பொடியுடன் தர்பூசணி சாறு சேர்த்து முகத்தில் பேக் போடவும். பின்னர் ஐஸ் கட்டியை ஒரு துணியில் சுற்றி முகத்தில் ஒற்றியெடுக்க, பரு, கரும்புள்ளிகள் நீங்கும்.

அதேபோல் கடலை மாவு – அரை கப், வெட்டிவேர் – 2 தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் – ஒரு தேக்கரண்டி, தர்பூசணி சாறு – கால் கப் எடுத்துக் கலந்து தடவினால், வெயில் கட்டிகள் வராது.

9. அம்மை தழும்புகள் நீங்க

இளநீர் வழுக்கையுடன், 4 தர்பூசணித் துண்டுகள் சேர்த்து அரைக்கவும். அம்மை இறங்கும் சமயத்தில், நான்கு தண்ணீர் விட்ட பிறகு, இளநீர் வழுக்கை - தர்பூசணி விழுதை அம்மை வடுக்கள் மீது பூசிக் கழுவிவர, வடுக்கள் நீங்கும்.

10. உடல் குளிர்ச்சி பெற

தர்பூசணிச் சாறு – அரை கப், எலுமிச்சைச் சாறு – 50 மில்லி, கல் உப்பு – ஒரு பிடி எடுத்துக்  கலந்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். பின்னர் அதை ஒரு டப் நீரில் கலந்து, பாதத்தை அதில் வைக்கவும். இதன் மூலம் பாதங்களிலிருந்து உடல் முழுக்க குளிர்ச்சி ஏறும்.

கால் கப் நுங்குச் சாறு, கால் கப் தர்பூசணிச் சாறு, கால் கப் பார்லி பொடி எடுத்து கலந்து உடல் முழுதும் மசாஜ் கொடுங்கள். பின்னர் அருவியிலோ ஆற்றிலோ குளித்துப் பாருங்கள்... உடல் அவ்வளவு குளிர்ச்சி பெறும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்