பிரெட் கிராஃப்ட்... பக்கா வருமானம்!

கிராஃப்ட்

‘‘நான் அந்தக் காலத்திலேயே போஸ்ட் கிராஜுவேட். ஆனா, குடும்பம், குழந்தைகள்னு வேலைக்குப் போகமுடியல. வீட்டில் பொழுதுபோக கிராஃப்ட் வொர்க்ஸ் செய்ய ஆரம்பிச்சேன். எந்தப் பயிற்சி வகுப்புக் கும் போனதில்ல... நானே தேடித் தேடிக் கத்துக் கிட்டதுதான். தோரணம், பென் ஸ்டாண்டு, ஃப்ளவர் மேக்கிங், க்வில்லிங், ஹேண்ட் எம்ப்ராய்டரி, க்ளே வொர்க்னு எல்லாத்திலும் எக்ஸ்பெர்ட் ஆனேன். வீட்டுக்கு வர்றவங்க, ‘அழகா இருக்கே..? எனக்கு ஒண்ணு விலைக்கு செஞ்சுதர முடியுமா?’னு கேட்டப்போ, கிராஃப்ட் பிசினஸ் ஐடியா ஸ்பார்க் ஆச்சு. இப்போ பிசினஸ், பயிற்சி வகுப்புகள்னு பிஸியா இருக்கேன்’’

- சின்னச் சிரிப்புடன் சொல்கிறார், சங்கீதா. சென்னை, அண்ணாநகரில் உள்ள ‘ஷ்ராவார்ஷ் (Shravarsh) ஆர்ட்  அண்ட் கிராஃப்ட்’-ன் உரிமையாளர். இங்கு அவர் நமக்குக் கற்றுத் தருவது, பிரெட்தூள் போட்டோ ஃபிரேம்...

தேவையானவை:

பிரெட் துண்டுகள் - 4,  ஸிங்க் ஆக்சைடு (zinc oxide) - 1 டீஸ்பூன், ஃபேப்ரிக் பெயின்ட் (கறுப்பு, கோல்டன் நிறங்கள்), போட்டோ ஃபிரேம், ஃபெவிக்கால், லீஃப் மோல்டு, கத்தரிக்கோல்.

செய்முறை:

படம் 1: பிரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கவும்.

படம் 2: அவற்றை மிக்ஸியில் தூளாக்கவும்.

படம் 3: பிரெட் தூளுடன் ஸிங்க் ஆக்சைடு, ஃபெவிக்கால் சேர்த்துக் கலக்கவும்.

படம் 4: அதனைச் சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும் (பிசையும்போது கைகளில் ஒட்டாமல் இருக்க சிறிது தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளலாம்).

படம் 5: பிசைந்த மாவுடன் சிறிது கறுப்பு ஃபேப்ரிக் பெயின்ட் சேர்த்துப் பிசையவும்.

படம் 6: மேக்கிங் `டோ' தயார்.

படம் 7: `டோ'வை சிறிய தட்டுபோல தட்டவும்.

படம் 8: படத்தில் காட்டியுள்ளபடி அதனைச் சுற்றி மடக்கினால் ரோஜா போன்ற வடிவம் கிடைக்கும்.

படம் 9: இன்னும் சிறிது `டோ' எடுத்துத் தட்டி, ரோஜாவின் கீழ்புறம் பெட்டல்போலச் சுற்றவும்.

படம் 10: மீதம் இருக்கும் `டோ'வை கத்தரியால் வெட்டி எடுக்கவும்.

படம் 11: லீஃப் மோல்டில் சிறிது `டோ' வைத்து, படத்தில் காட்டியுள்ளபடி ஒருமுறை அழுத்திவிடவும்.

படம் 12: இலை வடிவம் தயார்.

படம் 13: இதேபோல, கற்பனைக்கு ஏற்ப விரும்பிய வடிவங்கள் செய்து ஒரு நாள் காயவிடவும்.

படம் 14: காய்ந்த வடிவங்களின் அடிப்புறத்தை, ஃபெவிக்கால்கொண்டு போட்டோ ஃபிரேமில் ஒட்டவும். 

படம் 15: கற்பனைத்திறனுக்கு ஏற்ப டிசைன்செய்து ஒட்டிக் காயவிடவும்.

படம் 16: காய்ந்ததும் அதன் மீது கறுப்பு ஃபேப்ரிக் பெயின்ட் அப்ளை செய்யவும்.

படம் 17: கறுப்பு பெயின்ட் காய்ந்ததும் அதன் மீது கோல்டன் ஃபேப்ரிக் பெயின்ட் அப்ளை செய்தால், ஆன்டிக் லுக் கிடைக்கும். கறுப்பு, கோல்டன் என்று இல்லாமல் விரும்பும் வண்ணங்களையும் பயன்படுத்தலாம்.

``இப்போ அழகான, அசத்தலான போட்டோ ஃபிரேம் உங்க கைகளில்! இதை குறைந்தது 250 ரூபாய் வரை விற்கலாம். போட்டோ ஃபிரேம் மட்டுமில்லாம, கீ செயின், ஜுவல்லரி, மினியேச்சர்னு எதுவும் செய்யலாம், பிரெட் கிராஃப்ட்டில்! குறைந்த செலவு, கொஞ்சம் வேலை, அதிக லாபம்... ஆல் த பெஸ்ட்!’’ என்று சந்தோஷம் பொங்க கூறுகிறார், சங்கீதா. 

சு.சூர்யா கோமதி, படங்கள்:பா.காளிமுத்து
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick