நமக்குள்ளே!

‘அச்சச்சோ, மணல்ல கை வைக்காதே... இன்ஃபெக்‌ஷன் ஆயிடும்’, `சைக்கிள் ஓட்டறதா இருந்தா, தனியா போகாதே. அண்ணாவைத் துணைக்குப் பிடிச்சுக்க சொல்லு’, `வெயில்ல போனா... ஸ்கின் டார்க் ஆகிடும். வீட்லயே விளையாடு’ - இப்படியெல்லாம் குழந்தைகளுக்கு எக்கச்சக்க ரூல்ஸ் போடுபவர்கள் நம்மில் அதிகம். சாதாரணமாகக் குழந்தை தடுக்கி விழுந்தால்கூட, வீட்டை மினி மருத்துவமனையாகவே ஆக்கும் அளவுக்கு பதறித்துடிப்பவர்களும் அதிகம்தான்.

ஆனால், இத்தகைய மனநிலையைக் கொண்டவர்கள்.... போட்டி என்று வந்துவிட்டால், அப்படியே தலைகீழாக மாறிவிடுவதுதான் வேடிக்கை. `என்ன அடிபட்டாலும் முதல் ஆளா ஓடி வந்து கப் வாங்கியே ஆகணும்’ என்று குழந்தைகளின் மனதில் அழுத்தத்தை விதைப்பதும், `உன் கிளாஸ்மேட் எல்லாம் அவ்ளோ வேகமா ஓடியும், கீழ விழாம ஓடி ஜெயிச்சிட்டாங்க. நீ தோத்துட்டே’ என ஒரே பல்லவியையே திரும்பத் திரும்ப பாடுவதும் இங்கே சர்வசாதாரணம்தானே!

வீட்டுக்குள், `இளவரசி’ என பொத்திப்பொத்தி வளர்த்துவிட்டு, பொதுவெளியில் வந்துவிட்டால், `அவள் ஜெயித்தே ஆகவேண்டும். தோல்வி என்பதை நினைத்துக்கூட பார்க்கக் கூடாது’ என்பதாக மட்டும்தானே இருக்கிறது இங்கே பலருடைய நினைப்பும். `வீட்டில் ஆயிரமாயிரம் கட்டுப்பாடுகளை விதித்து வளர்த்துவிட்டு, போட்டிகளில் கொஞ்சம் சறுக்கினால்கூட புலம்பித் தீர்ப்பது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும்’ என்று எப்போதாவது யோசிக்கிறோமா?

இதோ... போட்டிக்கான நேரம் ஆரம்பமாகிவிட்டது. இப்போதாவது யோசிப்போம்.

ஆம்... `நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும்’ என்று பெரும்பாலான வீடுகளில் ஓங்கி ஒலிக்கிறது தேர்வு நேர கோஷம். இது, ஆர்வமூட்டுவதாக இருக்கும் வரை தவறில்லை. இதேபோல தொடர்ந்து பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்து ஒழுங்குபடுத்துவதும், அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதும் முக்கியமாக செய்தே ஆகவேண்டிய விஷயங்கள்தான். அதேசமயம், ஓரிரு மதிப்பெண்கள்கூட குறைவாக எடுத்துவிடக்கூடாது என்கிற அக்கறையில், குழந்தைகளிடம் கறார் காட்டினால், அது தவறானதாக முடிந்துவிடக் கூடும். தேர்வு நேர பரபரப்பை குழந்தைகளுக்கு உணர்த்துவதாக நினைத்துக்கொண்டு, அவர்களின் பதற்றத்தைக் கூட்டிவிட்டால், தேர்வு பற்றிய தேவையற்ற பயம், அவர்களின் மனதில் முதலிடத்தைப் பிடித்துவிடும்!

என்ன... நான் சொல்வது சரிதானே தோழிகளே!

உரிமையுடன்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்