Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நினைவூஞ்சலில் ஆடும் கதைநாயகிகள்!

மகளிர் தின ஸ்பெஷல்

மிழ் சினிமா வரலாற்றில், ஹீரோவின் காதலுக்குக் கன்னங்கள் சிவப்பது, சிணுங்குவது போன்ற கடமைகளே ஹீரோயின்களின் பொதுமரபு. அந்த `க்ளிஷே'க்கள் தகர்த்து, ஒரு திரைப்படத்தில் ஹீரோயினின் பங்கு கவர்ச்சி என்ற கட்டுடைத்து, ரசிகர்களை அழவைத்த, ஆச்சர்யப்படவைத்த, அள்ளி அணைத்துக் கொண்டாடவைத்த ஆளுமைப் பெண் பாத்திரங்களை உருவாக்கிய இயக்குநர்களுக்கு நன்றி. அப்படி தனக்கு அமைந்த மரியாதையான கதாபாத்திரத்தாலேயே நின்ற, வென்ற கதைநாயகிகள் பலர். அவர்களில் சிலர் இங்கே... நம் நினைவூஞ்சலில் ஆட!

புயலாகி வந்த தென்றல்!

புதுமைப்பெண் என்ற வார்த்தைக்கு ட்ரெண்ட் செட்டர், ‘புதுமைப்பெண்’ ரேவதி. ரேவதிக்கான மரியாதையை தந்த மைல்கல் கேரக்டர். தமிழ் சினிமாவுக்கு அப்போது அந்நியமாக இருந்த பெண் புரட்சியை, திரையில் தெறித்தவர். பெண் விடுதலை பேசும் எவருக்கும், ‘ஓ ஒரு தென்றல் புயலாகி வருதே’ `பிஜிஎம்'தான் இன்றளவும். அந்தளவுக்கு அதன் வீச்சை சினிமா என்ற மீடியம் மூலம் ஆண்டாண்டுகளுக்கும் சேர்த்து விதைத்தவர். கணவனே கண்கண்ட தெய்வம் என்றிருக்கும் பெண், அந்தக் கணவனாலேயே சந்தேகிக்கப்படும்போது காளியாக வெளிப்பட்டாள்; காலங்கள் கடந்தும் நம்முடன் பயணித்துக்கொண்டிருக்கிறாள்... அதே உக்கிரத்துடன்.

இவள் இலக்கணம் மீறியவள்!

திருமண பந்தத்தை மீறிய உறவைச் சுமந்த கேரக்டர், ‘சிந்துபைரவி’ சுஹாசினி (சிந்து). பொதுவாக இதுபோன்ற கதாபாத்திரங்களை திரையில் வார்ப்பதும், அந்த உறவில் உள்ள அழகையும், நியாயத்தையும் பேசுவதும், எல்லாவற்றுக்கும் மேலாக அந்தப் பாத்திரத்தை மக்கள் விரும்பும்வண்ணம் கொண்டுசேர்ப்பதும் சவாலிலும் சவால். அதற்காக இயக்குநர் கே.பி. தன் ஸ்கிரிப்ட்டில் உழைத்த பெரும் உழைப்பை, திரையிலும் நிறுத்திப் பொருத்தினாள் ‘சிந்து’. பெற்ற அம்மா வின் மடிசேர முடியாத பிள்ளையின் ஆற்றாமையை, ‘நானொரு சிந்து’ என்று சிரித்துக்கொண்டே பாடினார். அந்தப் பாடலில் அவர் பாடும் புரியாத ராகமும் தெரியாத சோகமும்தான்... அந்தக் கேரக்டரின் அழகு!

லேடி சூப்பர் ஸ்டார்!

காக்கிச்சட்டையை பெண்களும் உடுத்தலாம், கலக்கலாம் என்று சுழன்றடித்து ஜெயித்தவர், ‘வைஜெயந்தி ஐபிஎஸ்’ விஜயசாந்தி. திரையில் ஒரு பெண்ணை ஆக் ஷன் ஹீரோயினாக வார்க்கும்போது, அதை ரசிகர்கள் நம்பும்படியாக மட்டுமல்ல, கொண்டாடும் அளவுக்கு தன் ஆளுமையை வெளிப்படுத்தினார் விஜயசாந்தி. சினிமா என்பதைத் தாண்டி, பல பெண்களுக்கு பெர்சனல் இன்ஸ்பிரேஷன் ஆனார்கள் ‘வைஜெயந்தி’யும் விஜயசாந்தியும். ‘நான் `வைஜெயந்தி ஐபிஎஸ்’ மாதிரி போலீஸ் அதிகாரியாகப் போறேன்’ என்று அன்று பல பெண்களின் மனதில் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் ஆழ ஊன்றிய இந்தத் திரைப்பதிவை ரசிகர்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக்கினார்கள்.

பெண்ணைத் தோழியாகவும் பார்க்கவைத்தவள்!  

களங்கமற்ற ஆண் - பெண் நட்புக்கான ஃப்ரெஷ்ஷான, பியூட்டிஃபுல்லான திரைப்பதிவு... ‘புது வசந்தம்’ சித்தாரா. நான்கு ஆண் நண்பர்களுக்குக் கிடைத்த கண்மணித் தோழி ‘கௌரி’. சண்டை, பாசம், கோபம், சிரிப்பு என பெண் தோழமையின் வரவு ஆணின் வாழ்க்கையை இத்தனை அழகாக்கக்கூடியதா என்று வியக்கவைத்தவள். இன்றைக்கும் ஆண்களும், பெண்களும் பாலின ஈர்ப்பு தாண்டி விரும்பும், ஏங்கும் ஒரு நட்புலகத்தை அன்றே திரையில் வாழ்ந்த கௌரி, தோழி ஃபார் எவர்!

மொழிகள் தாண்டியவள்!

காதலையும், கோபத்தையும் கண்களாலேயே பேசிய ‘மொழி’ அர்ச்சனா, தமிழ் சினிமாவின் செல்லக்குட்டி. காது கேட்காது, பேச இயலாது. ஆனாலும், அன்பைப் பகிர வார்த்தைகள் தேவையில்லை என தன் பெரிய கண்களில் பல நூறு வார்த்தைகள் பேசினார் ஜோதிகா. இரக்கமும்,  கழிவிரக்கமும் வெறுக்கும் கம்பீரம், அந்தக் கேரக்டரின் அழகு.

இனி அச்சம் அச்சம் இல்லை!

ஊருக்குள் ஊறிய சாதி வெறியை வேரோடு பிடுங்க நினைத்து, அதில் வெற்றியும் கண்ட கிராமத்துப் பெண், ‘இந்திரா’ அனுஹாசன். காதலன், `பேசாம நகரத்துக்கு வந்துடு’ என்றழைத்தும், ‘இங்கேயே இருந்து இவங்களை மாற்றுவேன்’ என்று அதைச் சாதித்தவள்’. ‘இனி அச்சம் அச்சம் இல்லை’ என தமிழ்நாட்டுக் குழந்தைகள் அனைவரும் பாடியபோது, அவர்களைத் தங்கள் வீட்டு ‘இந்திரா’வாகவே நினைத்து அகமகிழ்ந்தார்கள் பெற்றோர். கோடம்பாக்கத்தில் மெட்ரோ சிட்டி மற்றும் அப்ராடு ரிட்டர்ன் ஹீரோயின்கள் பெருகி யிருந்த வேளையில், ஒரு கிராமத்து இளம் பெண்ணின் துணிவையும் திறனையும் சாதிப் பெண்புலத்தில் பேசிய நுணுக்கமான படைப்பு.

பேசப்படாத தந்தையின் அன்பு!

`அப்பா செல்லம்தான். ஆனால், எனக்குப் பிடிச்சது இதெல்லாம்' என்று கறாராக இருந்து அப்பாவையும் தன் வழிக்குக் கொண்டுவந்த மாடர்ன் மங்கை ‘அபியும் நானும்’ த்ரிஷா. மகிழ்ச்சியாக இருப்பதும் நெகிழ்ச்சியாக இருப்பதும் வாழ்க்கையைக் கொண்டுசெல்லும் வித்தை என்ற ‘அபி’யின் வார்த்தைகள் அள்ளின கோடி லைக்ஸ். எல்லா வீட்டின் அப்பா - மகள் அன்புலகிலும் வாழ்கிறாள் ‘அபி’!

கார்க்கிபவா,   ஓவியம்:ஷண்முகவேல்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
கதை கதையாம் காரணமாம்... 2
டிப்ஸ்... டிப்ஸ்...
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close