Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முன்னேற்றம் அடைந்துவிட்டதா பெண் இனம்..?

மகளிர் தின ஸ்பெஷல்

ரோப்பா, அமெரிக்கா, வளைகுடா நாடுகள் என உலகமெங்கும் வசிக்கும் பெண்கள், தாங்கள் வாழும் சமூகத்தில் பெண்களின் நிலை எந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது, இன்னும் என்னென்ன தளங்களில் மாற்றம் வேண்டும் என்பது பற்றிப் பகிர்கிறார்கள்... அவள் விகடனுக்காக!

ரோசெல்லா ஸ்கில்லாச்சி ஆவணப்பட இயக்குநர், மானுடவியல் ஆராய்ச்சியாளர்- இத்தாலி

‘‘ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சம உரிமை என்பது மீதான நம்பிக்கை, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிக அதிகமாகவே இருந்தது ஐரோப்பியப் பெண்களுக்கு. ஆனால், அந்த நம்பிக்கை விரைவில் ஏமாற்றத்தை மட்டுமே சந்தித்தது. அரசியலாகட்டும், நிறுவனங்கள் ஆகட்டும், பொருளாதார மையங்கள் ஆகட்டும்... வெகு சிலர் மட்டுமே உரிமை பெற முடிந்தது. இப்போதும் சூழல் அப்படியேதான் இருக்கிறது. மிகக்குறைந்த அளவிலான பெண்கள் மட்டுமே ஆட்சி அதிகாரத்துக்கு வர முடிகிறது, அவர்களால் மட்டுமே சுயமாக முடிவு எடுக்க முடிகிறது, அவர்களால்தான் பெண்களின் பிரச்னைகளுக்குத் தீர்வுக்கு முன்னெடுப்புகள் செய்ய இயல்கிறது.

சம்பளம், ஆண்களைவிட பெண்களுக்கு குறைவாகவே வழங்கப்படுகிறது, ஆண்களைவிட அதிகம் படித்திருந்தாலும், பணிச்சூழலில் ஆண்களைவிட குறைவாகவே மதிப்பிடப்படுகிறார்கள். பணிகளில் முக்கிய இடம் அளிக்கப்படுவதில்லை. அப்படியே ஒரு பணியில் தன்னை இருத்திக்கொண்டாலும், குடும்பம், குழந்தைகள் வளர்ப்பு பொறுப்புகள் அவர்களை முன்னேறவிடாமல் தடுக்கின்றன.

இத்தகைய தடைகளின் விளைவாக, இத்தாலி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு புதிய புரட்சி ஏற்பட்டு உள்ளது. அது, 35-40 வயதில் முதல் குழந்தையைப் பெற்றுக்கொள்வது. உண்மையில் அந்த வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள பெண்ணின் உடல் ஒத்துழைப்பது இல்லை. ஆயினும், சிறு வயதில் இருந்து தொடர்ந்து பாடுபட்டு ஒரு பெண் தன் வாழ்க்கைக்கான பணத்தை பணி மூலமோ, வர்த்தகத்தின் மூலமோ பெற்று சுயமாக நிற்கும்போது அவளை தாய்மைப் பொறுப்புகள் மூழ்கடித்துவிடுவதால், இந்த முடிவுக்கு வந்துவிட்டாள்.

மொத்தத்தில், பாட்டிகள் முன்வைத்த பெண் இன முன்னேற்ற கோரிக்கைகளுக்காக பேத்திகளும் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்!’’

எலிசபெத் க்ளாட்சன்
கணினி மென்பொருள் பொறியாளர், அலபாமா, அமெரிக்கா

‘‘கடந்த 20 ஆண்டுகளை ஒப்பிடும்போது கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் தலைமை செயல் அலுவலர் பொறுப்புகள், விண்வெளி, ஆயுதம் தாங்கும் ராணுவத்தில் படையணி வீரர்கள், கட்டளைத் தளபதிகள், பொது வாழ்க்கையில் அரசியல் தலைவர்கள் என ஒரு நாட்டின் முக்கிய முடிவுகளை எடுக்கும் இடம் வரை பெண்கள் பங்களிக்கிறார்கள்.

ஆனால், சில சமூகங்களில் பெண்கள் இன்னும் வீட்டு வேலைகளைச் செய்யும் இயந்திரமாகத்தான் நடத்தப்படுகிறார்கள். சில குடும்பங்களில், அவர்கள் இன்னும் இருண்ட காலத்தில்தான் வாழ்கிறார்கள். உலகில் என்ன நிகழ்கிறது என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. சில பெண்களுக்கு சமூக, அரசியல் சுதந்திரம் என்பது கிடைத்தாலும்கூட கட்டுப்பாடுகளோடும், தடைகளோடும்தான் அவை அளிக்கப்படுகின்றன. மேலும், பாலின வேறுபாடு, பாலின துன்புறுத்தல்களும் அவர்களை விடாமல் துரத்துகின்றன.

இருந்தாலும்கூட பெண்கள் முன்னேற்றத் தைப் பொறுத்தவரை அது நூறாண்டுகள் ஆனாலும் தொடர்கதைதான் என்பதால், நாம் இன்று என்ன நிலையில் இருக்கிறோமோ அதற்கு நம்மை நாமே ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்வோம்.’’

மீனாகுமாரி சசிகுமார்
12 ஆண்டுகளாக துபாயில் கணினி ஆசிரியர்

“வளைகுடா நாடுகளில், குறிப்பாக அமீரக நகரங்களில், பெண்கள் பாதுகாப்பு எல்லா இடங்களிலும் முழு நிறைவைத் தருகிறது. பணியிடங்களிலும், நகர்ப் பகுதிகளிலும், அரசுப் பேருந்து களிலும் பெண்கள் பாதுகாப்பு சிறப்பா கவே இருக்கிறது. பொது இடங்களில் வரிசைகளில், பேருந்து இருக்கை களில் பெண்களுக்கு முன்னுரிமையும், சிறப்பிடமும் தரப்படுகிறது. இரவு எந்த நேரமும் பெண்கள் தனியாக பயணம் செய்யவோ, வீதிகளில் நடந்து செல்லவோ தடையோ, பயமோ ஏதும் இல்லை. பணியிடங்களில் ஆணும் பெண்ணும் சமமாகவே பாவிக்கப்படுகின்றனர். இந்நிலை இன்று நேற்று அல்ல, கடந்த 10 வருடங்களுக்கு மேலான எனது அமீரக வாழ்வனுபவத்தில் இருந்து சொல்கிறேன்.

ஆனாலும், சில பெண்கள் வேலைக்குச் செல்வதை வைத்து சமூகப் பெண்களின் தனி மனித சுதந்திரத்தை அளவிட முடியாது என்பது எனது கருத்து. பெண்களின் பொருளாதாரம், சுதந்திரம், விருப்பம் எல்லாம் மற்ற நாடுகளைப் போலவே இங்கும் பெரும்பாலும் கணவனைச் சார்ந்தே இருக்கிறது. பணிக்குச் செல்வதையோ, விரும்பிய வாழ்வை மேற்கொள்ளவோ பொதுவாக பெண்கள், ஆண்கள் பெற்றிருக்கும் சுதந்திரத்தைப் பெற இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் எனத் தெரியவில்லை.’’

ஷோபா தர்ஷன் சுவிட்சர்லாந்தில் பணிபுரியும் ஈழத்துப்பெண்

‘‘நான் இங்கே ஆணுக்குச் சரிசமமாக மதிக்கப்படுகிறேன். அதைவிட ஆண், பெண் என்ற பேதங்களே இங்கு இல்லை என்றுதான் கூற வேண்டும். அரசியல் பிரவேசம் முதல், நிர்வாகக் கட்டமைப்பு வரை பெண்கள் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். சட்டங்களும் பெண்களுக்குத்தான் முக்கியத்துவம் வழங்குகின்றன. நான் எந்நேரமும் எங்கும் சென்று வரலாம். இப்படியான மனித நாகரிகம் வளர்ச்சியடைந்த நாட்டில் வாழ்கிறேன் என்பது பெருமையாக இருக்கிறது. பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை நான் செய்தியின் வாயிலாகவே அறிகிறேன்.

16 வயதைக் கடந்த பெண், தனக்கான நண்பரை அல்லது துணையை தேடும் சுதந்திரம் இருக்கிறது. தமது அடிப்படைக் கல்வியை கற்றபிறகு குறைந்தபட்சம் 18 வயதைக் கடந்ததும் தனக்கான இருப்பிடம், வேலை, வாழ்க்கை அனைத்தையும் தாமே முடிவு செய்துகொள்கிறார்கள். அதை இந்தச் சமூகம் அங்கீகரிக்கிறது.

என்னைப் பொறுத்தமட்டில் நான் மிகவும் சுதந்திரம் பெற்றவளாக உணர்கிறேன். இருந்தாலும், இந்த அளவற்ற சுதந்திரத்தின் பாதிப்பாக நான் உணர்வது, தீயபழக்க வழக்கங்களுக்கு பெண்கள் அடிமையாவதும் இங்கு அதிகமாகக் காணப்படுகிறது. குடும்ப வாழ்க்கைமுறை குறைந்துவருகிறது. இன்று நாம் அனுபவிக்கும் இந்தச் சுதந்திரம், நமக்கு எதிரான, பிழையான பல அடக்குமுறைகள் களையெடுக்கப்பட்டு நமக்குக் கிடைத்தது. அந்த சுதந்திரத்தை, நமது பெற்றோர், முன்னோர் சொன்ன அனைத்தையும் எதிர்ப்பது என்று பொருள்கொள்ளக் கூடாது.’’

யாஸ்மின் அபுபக்கர்
ஐக்கிய அரபு எமிரேட்

‘‘முஸ்லிம் பெண்களுக்கு, தானே தலாக் விடுக்கும் உரிமை, சொத்தில் பங்கு ரிமை போன்றவை மதத்தின் பெயரிலேயே வழங்கப்பட் டாலும், அவர்கள் அதை உணராமல் இருப்பதுதான் வேதனை. பெண் என்பதால் நாங்கள் இன்னமும் அனுபவிக்கும் பிரச்னைகளில் வரதட்சணைக் கொடுமை, `படித்துவிட்டாள்... அதனால் இவள் அடங்காதவள்’ என்ற மதிப்பீடுகள், கணவரைவிட படிப்பில், பட்டங்களில் பெண் அதிகம் என்றால் ஈகோ ஏற்பட்டு இல்லறம் கெடுவது, வரன்கள் விஷயத்தில் இதுவே எதிரொலிப்பது, பெண்குழந்தையைப் பெற்றவளைக் கேவலமாக நினைப்பது என பெண்களின் பிரச்னைகள் வடியாமல் நிரம்பியே உள்ளன.

இத்தனை இடர்களையும் தாண்டி நான் மகிழும் ஒரு மறுமலர்ச்சி, பெண்கள் குறித்தான சமூகத்தின் பார்வை மற்றும் மதிப்பீட்டில் மாற்றம் தெரிவது. வேலைகளில், நிர்வாகத்தில் பெண்களின் பங்கும், சாதனைகளும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன. அங்கீகாரம், மதிப்பீடுகள் சரியாகவே இருக்கின்றன. அதனால்தான், மென்மேலும் பெண்கள் வேலைவாய்ப்புகளில் வெற்றி பெறுகிறார்கள். முக்காடு என்பது உடலைப் பாதுகாக்கவே என்றும், மூளைக்கல்ல என்பதையும் இப்போது அரபுப் பெண்கள் நிரூபிக்கின்றனர்!’’

விஷ்வா விஸ்வநாத்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
70 வயது... 83 பதக்கம்!
திருமண சிக்கல்... தீர்த்துவைத்த தோழன்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு!”
Advertisement
[X] Close