என் டைரி - 379

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வசந்தங்களை வரவேற்காத மகன்... வாழ்க்கையே வெறுப்பான தாய்!

கனின் பிரியத்தால் மனம் குளிர்வாள் அம்மா. ஆனால், என் மகன் என் மீது வைத்துள்ள அளவு கடந்த பிரியமும் பாசமுமே என்னை வாட்டுவது, விதியின் விளையாட்டு. இளம்வயதிலேயே நான் என் கணவரை இழந்தபோது, என் மகன்தான் வாழ்க்கையில் எனக்கிருந்த ஒரே பிடிப்பு. புகுந்த வீட்டினரின் வெறுப்பு, பிறந்த வீட்டினரின் புறக்கணிப்பு என எல்லாவற்றையும் எதிர்கொண்டு என் மகனை நான் வளர்த்தெடுக்க, என் அரசு வேலை எனக்குக் கைகொடுத்தது. ‘இந்த உலகத்தில் கோடி பேர் இருந்தாலும், எனக்கு நீயும், உனக்கு நானும்தான் உலகம்’ என்று என் மகனிடம் சொல்லி வளர்த்தேன். அவனும் அப்படியே வளர்ந்தான்.

எனக்குத் தோழிகள், உறவினர்கள் என்று யாரும் தேவைப்படவில்லை. என் மகனும், அவன் மகிழ்வுமே மட்டும் போதும் என்று வாழ்ந்தேன். இன்னொரு பக்கம், என் பையனும் விளையாட்டு, நண்பர்கள் என்று எதையும் நாடாமல், கதைகள் கேட்பது, பேசிச் சிரிப்பது, செஸ், கேரம் என வீட்டுக்குள் விளையாடுவது என்று என்னுடன் இருக்கவே விரும்புவான்.

ஆரம்பத்தில் என் பையனின் உலகம் என்னை அச்சாக வைத்து சுழல்வதில் மகிழ்ந்தாலும், வருடங்கள் செல்லச் செல்ல, அதுவே உறுத்தவும் ஆரம்பித்தது. பள்ளி, கல்லூரி முடிக்கும் காலம் வரை அவனுக்கென்று நெருங்கிய நண்பர், தோழி என்று யாரும் இல்லை. இப்போது அலுவலகம் செல்லும் வரையிலும்கூட நிலைமை இதுவே..! பதின்வயதிலோ, இந்த 27 வயதிலோ அந்தந்த வயதுக்குரிய சந்தோஷங்கள், கேளிக்கைகள் என்று எதுவும் இல்லாமல், வீட்டுக்குள் என்னுடனேயே கிடக்கிறான்.

`திருமணம் செய்துவைத்தால் சரியாகிவிடுவான்' என்று பெண் பார்க்க ஆரம்பிக்க, இடியை இறக்கினான் என் பையன். ‘எனக்குக் கல்யாணமெல்லாம் வேண்டாம். மீறிப் பண்ணினா நான் சந்தோஷமா இருக்க மாட்டேன்; அந்தப் பொண்ணோட வாழ்க்கையும் பாழாகிடும். கடைசிவரை எனக்கு நீ... உனக்கு நான்னே இருந்துடலாம்’ என்கிறான் பிடிவாதமாக! ‘கடைசிவரைன்னா, எனக்குக் கடைசிவரை நீ இருப்ப. நான் போயிட்டா உனக்குக் கடைசிவரை யாருடா இருப்பா?’ என்றால், ‘ஒருவேளை அப்போ தோணுச்சுன்னா, கல்யாணம் பண்ணிக்கிறேன். எனக்காக வாழ்க்கை எல்லாம் உழைச்சு, ரிட்டையர்ட் ஆகி... சுகர், பிரஷர், மூட்டுவலினு போராடிட்டு இருக்கே... இப்போ உன்னைப் பார்த்துக்கிறதுதான் மட்டும்தான் என் சந்தோஷம்’ என்கிறான்.

உண்மையில், என் கஷ்ட நஷ்டங்களை அவன் மீதும் திணித்து, என்னைவிட்டு அகலாமல் இப்படி வளர்த்துவிட்டேனே என்று குற்ற உணர்ச்சி என்னைக் கொல்கிறது. வாழ்வின் பிற சந்தோஷங்கள், கொண்டாட்டங்களில் இருந்து அவன் பிரிந்து இருந்துவிட்டதும், இருப்பதும், இனியும் இருப்பேன் என்று சொல்வதும் என் மனதை அறுக்கிறது.

என் மகன் இல்லற வாழ்க்கை, இனிய உறவுகள், உற்சாகப்படுத்தும் நண்பர்கள் என வாழ நான் என்ன செய்ய வேண்டும் சகோதரிகளே?!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்