Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வீட்டு வேலையாட்கள்... வில்லங்கம் தவிர்ப்பது எப்படி?

விழிப்பு உணர்வு

`பகீர்' சம்பவம் மற்றும் பாதுகாப்பு ஆலோசனைகள்

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே இருக்கும் இரண்டாங்கட்டளை பகுதியில், சமீபத்தில் பணம், நகைக்காக ஆசிரியர் தேன்மொழி, அவர் தாய் வசந்தா இருவரும், அவர்கள் வீட்டின் வேலைக்காரப் பெண் மற்றும் அவள் கூட்டாளிகளால் கொல்லப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சி.

தேன்மொழியின் ஏழு வயதுப் பெண் சுரபிஸ்ரீ யின் கழுத்தையும் அறுத்த கொலை காரர்கள், ஒன்பது மாதக் கைக்குழந்தை குணஸ்ரீ யை எதுவும் செய்யவில்லை. கழுத்து அறுபட்டாலும் உயிர் பிழைத்த  ஏழு வயது சுரபி, மறுநாள் அதிகாலையில், மயக்கம் தெளிந்து, தன் தங்கையைத் தூக்கிக்கொண்டு ரத்தக்காயத்துடன் அக்கம் பக்கம் உதவி கேட்டு ஓடிவந்த காட்சி, பார்த்தவர்களைக் கண்கலங்கச் செய்தது.

சுரபிஸ்ரீ யை மருத்துவமனையில் சேர்ப்பித்தும், போலீஸுக்குத் தகவல் தந்தும் உதவியது... அந்தப் பகுதியைச் சேர்ந்த கன்னியப்பன்.

‘‘தேன்மொழி, டீச்சர் வேலை பார்க்கிறாங்க. நாலு வருஷத்துக்கு முன்னாடிதான் இந்த வீட்டை விலைக்கு வாங்கி குடிவந்தாங்க. அவங்களோட கணவர் ராமசாமி, ஏமன் நாட்டுல வேலை பார்க்கிறார். தேன்மொழி, தன் ரெண்டு பொண்ணுங்க மற்றும் அம்மாகூட வசிச்சுவந்தாங்க. நவம்பர் மாச கனமழையால அவங்க வீட்டுக்குள் மழைநீர் புகுந்தப்போ, வீட்டின் பராமரிப்புக்காக, தேன்மொழியோட உறவினர் ஒருத்தவங்க சொல்லிதான் சத்யா என்ற பெண்ணை வேலைக்குச் சேர்த்திருக்காங்க. சத்யாவின் கண்ணில் படும்படி தேன்மொழி அடிக்கடி நகைகளை வைக்க, எடுக்கனு இருக்க, அவளுக்கு சபலம் வந்திருக்கு. பணத்துக்கு ஆசைப்பட்ட சத்யா, தன் ஆண் கூட்டாளிங்க ரெண்டு பேரோட சேர்ந்து, ஆண் துணையில்லாத தேன்மொழி வீட்டுல கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருக்காங்க’’ என்ற கன்னியப்பன், கொலை சம்பவத்தை விவரித்தார்...

‘‘ஏப்ரல் 20-ம் தேதி இரவு, சத்யா தன் கூட்டாளிகளோட தேன்மொழியோட அம்மா வசந்தா பாட்டிகிட்ட சகஜமா பேச்சுக்கொடுத்து, வீட்டுக்குள்ள போயிருக்காங்க. டீ குடிச்சுட்டு, குழந்தை  குணயைக் கொஞ்சின சத்யாவும், அவ கூட்டாளிகளும், சமயம் பார்த்து வசந்தா பாட்டியைக் கொலைசெஞ்சு கிச்சன்ல போட்டுட் டாங்க. கொலை சம் பவத்தைப் பார்த்த குழந்தை சுரபியின் கழுத்தை அறுத்ததுல அவ மயங்கி விழுந் துட்டா. அங்கேயே காத்திருந்த அந்த கொலைகாரங்க, தேன்மொழி ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் அவங்களை யும் கொலைசெஞ்சு ஸ்டோர் ரூம்ல போட் டுட்டு, அவங்களோட நகைகளைத் திருடிட்டு போயிட்டாங்க.மயக்கம்  தெளிஞ்ச சுரபிஸ்ரீ, தங்கையைத் தூக்கிட்டு மறுநாள் விடியற்காலை ஆறு மணிக்கு     எங்க  வீட்டு வாசல்ல கோலம் போட்டுட்டு இருந்த என் மனைவிகிட்ட ஓடிவர, என் மனைவியின் அலறல் கேட்டு ஓடி வந்து பார்த் தேன். உடனே பக்கத்து வீட்டுல இருந்த ஜெயங் கொண்டான் மற்றும் ஊராட்சித் தலைவர் சுந்தர் எல்லாரையும்  கூப்பிட்டேன்.

கழுத்து மற்றும் உடல் முழுக்க ரத்தக் கறையோட,  நடந்த கொலை சம்பவத்தை பதற்றத்தோட மழலை மொழியில அந்தக் குழந்தை அழுதுட்டே சொன் னப்போ நிலைகுலைஞ்சு போயிட்டோம். ஜெயங்கொண்டான், சிறுமியை உடனடியா மருத்துவ மனைக்குக் கூட்டிட்டுப் போக... நானும், சுந்தரும் அந்த வீட்டுக்குள்ள போய் பார்த்தோம். உடனே போலீஸுக்குத் தகவல் சொன்னோம்'' என்று விவரித்த கன்னியப்பன்

``இப்போ குழந்தைங்க சுரபிஸ்ரீ , குணஸ்ரீ ரெண்டு பேரும் திருவெற்றியூர்ல இருக்குற அவங்க சொந்தக்காரங்க வீட்டுல இருக்காங்க. வேலை கொடுத்தவங்களையே கொலை செய்ற அளவுக்கு, பணத் தாசை ஒரு பொண்ணை மிருகமா மாத்தியிருக்கு. இந்தச் சம்பவம், வீட்டு வேலைக்கு ஆள் வைக்கிற வங்களுக்கு எல்லாம் எச்சரிக்கை!’’

-அக்கறை பொங்கச் சொன்னார்,  கன்னியப்பன்.

கு.ஆனந்தராஜ், படங்கள்:சொ.பாலசுப்ரமணியன், ரா.வருண் பிரசாத்


ஏஜென்சி மூலமாக வேலையாட்கள்!

சென்னை, ‘இன்டர்நேஷனல் மேன்பவர் ஆர்கனைசேஷன்’ அமைப்பின் உரிமையாளர் புஷ்பா பிரபு சொல்லும் தகவல்கள்...

எங்களிடம் வரும் வேலையாட்கள், குற்றப் பின்னணி இல்லாதவர்களா என்பதை நன்கு விசாரித்து, பின்னர் அவர்களின் புகைப்படம், முக்கிய ஆவணங்கள், கைரேகை போன்றவற்றை பெற்றுக்கொள்வோம். அவர்களுக்கு ஷூரிட்டி தரும் மூன்று நபர்களின் தொடர்பு எண்களை வாங்கி வைத்துக்கொள்வோம். பின்னர்தான், அவர்களை எங்கள் ஏஜென்சி மூலமாக வீட்டினரின் தேவை, விருப்பத்துக்கு ஏற்ப வேலைக்கு அனுப்புவோம்.

வேலையாளின் வேலைசெய்யும் உரிமம், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ரென்யூவல் செய்யப்படும். அப்போது, அவரின் ஆவணங்கள் அனைத்தும் மீண்டும் ஒருமுறை சரிபார்க்கப்படும். ஒருவேளை ரென்யூவலின்போது, அவரின் செயல்பாடு வீட்டுக்காரர்களுக்குத் திருப்தியாக இல்லையென்றால், வேறு ஆளை மாற்றிக்கொள்ளலாம்.

நாங்கள் பெரும்பாலும் பெண் வேலையாட்களைத்தான் சிபாரிசு செய்வோம். அதிலும் 40 - 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண் வேலையாட்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

ஏஜென்சி மூலமாக வேலையாட்களை தேர்ந்தெடுக்கும்போது, குறிப்பிட்ட ஏஜென்சி நம்பிக்கைக்கு உரியதுதானா என்பதையும் விசாரித்து உறுதி செய்துகொள்ள வேண்டும்.

ஏஜென்சிக்கு பணம் கொடுக்க முடியாத நடுத்தரக் குடும்பத்தினர், நன்கு தெரிந்தவர்களின் மூலமாக வேலையாட்களை நியமித்துக்கொள்கிறார்கள். அப்படி நியமிப்பவரின் பின்னணியை நன்கு விசாரித்துக்கொள்வது முக்கியம்.


வேலையாட்களை நியமிக்கும் முன்...

ன்றைய அவசர வாழ்க்கையில், வீட்டுக்கு வேலையாட்களை வைத்துக்கொள்வது தவிர்க்க முடியாததாகிவிட்டது. எனினும், அது ஆபத்தில் முடிந்துவிடாமல் இருக்க கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை காவல்துறையின் சார்பில் விளக்குகிறார், தமிழக காவல்துறை ஐ.ஜி ரவி...

வீட்டுக்குப் புதிதாக வேலையாட்களை நியமிக்கும்போது, அவரின் அனைத்து அடையாள அட்டை மற்றும் முக்கிய ஆவணங்களைப் பெற்று, அது ஒரிஜினலா என்று உறுதிபடுத்தி, அவற்றை அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் காண்பித்து, அவர் ஏதாவது குற்றப் பின்னணி கொண்டவரா என்பதைக் கேட்டறியவும். அப்படி எதுவும் இல்லை என்றாலும்கூட, அவரின் ஆவண நகல்களை காவல்நிலையத்தில் கொடுத்து, உங்களுக்கும் அவருக்கும் இடையிலான அந்த வேலை ஒப்பந்தத்தைப் பதிவுசெய்து கொள்ளவும். அதோடு, அந்த வேலையாளுக்கு சாட்சியாக குறைந்தபட்சம் இருவர் ஷூரிட்டி கையெழுத்திடுவதுடன், அவர்களின் முக்கிய ஆவணங்களின் நகல்களையும் பெற்றுக்கொள்ளவும்.

ஏஜென்சி நிறுவனங்களின் மூலமாக வேலையாட்களை எடுக்கும்போதுகூட, மேற்கூறிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றவும்.

வீட்டு வேலையாட்கள் முன்னிலையில், பணம், நகை சார்ந்த விஷயங்களை வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்க்கவும். நகை மற்றும் பணத்தை வேலையாட்களின் கண்களில்படும்படி வைப்பது கூடாது. அவர்களிடம் பணம், நகைகளை பீரோவில் எடுத்துவைக்கச் சொல்வது போன்ற நம்பிக்கையின் அடிப்படையிலான பொறுப்புகளை ஒப்படைப்பதும் தவறு. இவையெல்லாம் அவர்களுக்கு சபலம் ஏற்படுத்தலாம். அதற்கு நீங்களே காரணமாகிவிடாதீர்கள்.

வீட்டு வேலையாட்களிடம் அளவான இடைவெளியுடன் இருக்கவும். அவர்களிடம் நெருக்கமாகப் பழகி, குடும்பப் பின்புலம், பிரச்னைகளைப் பகிராதீர்கள். தேவைக்கும் அதிகமான இடம், உரிமை அளிக்காதீர்கள்.

பெரும்பாலும் ஆண்களின் துணையின்றி இருக்கும் பெண்களை மையப்படுத்திதான் இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. எனவே, அப்பா, அண்ணன் என்று யாராவது ஒரு ஆண் உறவின் துணையுடன் இருப்பது நல்லது. வசதியானவர்கள், நம்பிக்கைக்குரிய செக்யூரிட்டி ஏஜென்சி மூலமாக வாட்ச்மேன், செக்யூரிட்டி நியமித்துக்கொள்ளலாம்.

வசதியானவர்கள் தங்கள் வீடுகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்திக்கொள்வதும் நல்லது. அது சரியாக இயங்குகிறதா என்பதை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும்.

தனியாக வசிக்கும் பெண்கள், அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் அது குறித்து பாதுகாப்பு வேண்டினால், பெண் காவலர்களே உங்கள் வீட்டுக்கு அவ்வப்போது பாதுகாப்புப் பணி நிமித்தம் வந்து போவார்கள்.

தற்போது ஏஜென்சி மற்றும் தனிப்பட்ட அறிமுகத்தில் வேற்று மாநில நபர்களும் வேலையாட்களாக வருகிறார்கள். இவர்களிடமும் மிகுந்த கவனத்தோடு இருப்பதுடன், மொழி தெரியாது என்று நினைத்து அவர்கள் முன்னிலையில் பணம், நகை விஷயங்களைப் பேச வேண்டாம்.

மொத்தத்தில், வீட்டு வேலையாட்களிடம் கண்டிப்புடன், கரிசனமின்றி இருக்க வேண்டும் என்று சொல்லவரவில்லை, கவனத்துடன் இருங்கள் என்கிறோம். காரணம், பெரும்பாலான குற்றச் சம்பவங்கள், நம்பிக்கை துரோகம் செய்துதான் முடிக்கப்படுகிறது. விழித்திருங்கள்!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
நோய் நாடி..! - பெருகி வரும் சிறுநீரக பாதிப்புகள்!
அவள் 20-20 ஒன் டே ஃபன் டே!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close