என் டைரி - 380

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பங்களாவில் குடும்பத்தினர்... பசியுடன் நான்!

டம்பரச் சொத்து இருக்கிறது. கண்ணுக்கு அழகான உறவுகள் இருக்கிறார்கள். ஆனால், தனிமையும், பசியுமாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன், ஒரு நரக வாழ்க்கையை!

எனக்குத் திருமணமானபோது, என் கணவர் ஒரு ஏக்கர் நிலத்துக்குச் சொந்தமான விவசாயி. நானும் அவரும் சேர்ந்து உழைத்து, அரும்பாடுபட்டு பொருளீட்டி, அதைச் சிக்கனப்படுத்தி, சேமித்து, பெருக்கி என... எங்கள் பையனுக்கு 15 வயதானபோது 10 ஏக்கருக்குச் சொந்தக்காரர்கள் ஆகும் அளவுக்கு உயர்ந்தோம். உழைப்பும், செல்வமும் தொடர்ந்து வளர்ந்தன. அறுவடை நாட்களில் வயலில் வேலைபார்ப்பவர்களுக்கு எங்கள் வீட்டில்தான் சாப்பாடு. 100, 200 பேர் என பந்தியில் என் கையால்தான் பரிமாறுவேன். 

ஒரே மகனுக்கு, சொந்தத்திலேயே திருமணம் முடித்தோம். பேரன், பேத்தி என்று சந்தோஷமாக வாழ்ந்தோம். ஆனால், பள்ளியில் சேர்க்கும் வயதில், பெரிய ஸ்கூல் என்று சொல்லி அவர்கள் இருவரையும் கொடைக்கானலில் ஒரு கான்வென்ட்டில் சேர்த்துவிட்டார்கள். பேரப்பிள்ளைகள் வெகுதூரம் போனதில் எனக்கும் என் கணவருக்கும் மனது சந்தோஷமிழந்து போனது. சில வருடங்களில் என் கணவரும் இறந்துவிட, என் வாழ்க்கை இன்னும் சுருங்கிப்போனது.

அதுவரை விவசாய நிலத்தின் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்த என்னிடம், ‘இனி எல்லாம்

நான் பார்த்துக்கிறேம்மா’ என்று கைமாற்றிக் கொண்ட என் பையன், அப்படியே சொத்துக்கள் அனைத்தையும் அவன் பேரில் மாற்றி எழுதிவாங்கிக்கொண்டான். கை, கால் சுகத்துடன் நாம் இருக்கும்போதே அவனுக்கு சொத்து வேலைகளை எல்லாம் முடித்துக்கொடுத்துவிட வேண்டும் என்று நானும் முழு மனதுடன் கையெழுத்திட்டேன்.

இதன் பிறகுதான் என் நிலைமை தலை கீழாக மாற ஆரம்பித்தது. என் மருமகள் என்னை மதிக்காமல் நடக்க ஆரம்பித்தாள். அவமானம், உதாசீனம், எரிச்சல், கோபம்... எல்லாவற்றையும் தந்தாள். மருமகளை எதிர்த்து என் மகனாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.எங்களின் பூர்வீக ஓட்டு வீட்டுக்கு அருகிலேயே ஆடம்பர பங்களா கட்ட ஆரம்பித்தான் என் மகன். ஆனால், என்னை இந்த வீட்டிலேயே விட்டுவிட்டு, அவர்கள் மட்டும் அதில் குடியேறினார்கள். அடுத்த கொடுமையாக, எனக்கு சமைத்துக்கொடுக்க முடியாது என்று கூறிவிட்டாள் மருமகள். தினமும் காலை 11 மணி வாக்கில், காலைக் கும் மதியத்துக்குமாக ஹோட்டலில் இரண்டு பார்சல் வாங்கிவந்து கொடுக்கிறான் என் மகன். இரவு, வெறும் தண்ணீரைக் குடித்துவிட்டுப் படுத்துவிடுகிறேன். அப்படி நான் என் மருமகளுக்கு என்ன கொடுமை செய்தேன்?

68 வயதாகும் எனக்கு சாவு எப்போது என்று தெரியவில்லை. ஊருக்கே கூலிக் காசு கொடுத்திருக்கிறேன் என் கைகளால். இன்று வயிறு நிறைய சாப்பாடுகூட இல்லை. என் நிலை மாற, என் மருமகள் மனம் மாற ஏதாவது வழியிருக்கிறதா மகள்களே?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்