நமக்குள்ளே...

‘வருவாய்க்கு வழியில்லாத வயதான பெற்றோரை மகன்தான் பராமரிக்க வேண்டும். பெற்றோரைப் பராமரிக்கும் கணவனை, தன்னுடன் பிரிந்து வரச்சொல்லும் மனைவியை விவாகரத்து செய்ய சட்டத்தில் உரிமை உள்ளது’ என சமீபத்தில் தீர்ப்பு வழங்கி இருக்கிறது உச்ச நீதிமன்றம்.
ஒரு குறிப்பிட்ட வழக்கை அடிப்படையாகக்கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும்.. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்படக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது. `இது சரியான தீர்ப்புதான்’ என ஒரு தரப்பும், `விவாகரத்து சட்டத்தை ஆண்கள் தவறாகப் பயன்படுத்தக்கூடும்’ என இன்னொரு தரப்பும் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

‘நான் உங்களுக்கு மட்டும்தான் மனைவி. உங்கள் அப்பா, அம்மாவுக்கு வேலை செய்வதற்காக வரவில்லை என்று பெண்கள் கூறுவது அறம் இல்லை. தங்களின் வாழ்க்கைமுறை மேற்கத்திய கலாசாரம்போல இருக்க வேண்டும் என்று நினைப்பதும் தவறு’ என்று சிலர் உணர்ச்சிவசப்பட்டு கருத்துகளைச் சொல்வதைக் கேட்க முடிகிறது.

இன்னொரு தரப்பினரோ, ‘மனைவி என்பவள் தன் பெற்றோரிடம் இருந்து பிரிந்து கணவன் வீட்டுக்குச் செல்வதுதான் பெரும்பாலும் நம்நாட்டில் வழக்கமாக இருக்கிறது. ஆனால், அவள் தன்னுடைய பெற்றோருக்கு ஆற்றவேண்டிய கடமை குறித்து இங்கு யாரும் பேசுவதில்லையே?’ என்ற கேள்வியை முன்வைக்கின்றனர்.

இந்தக் கருத்துக்கு பலம் சேர்ப்பதைப்போல, ‘வயதான காலத்தில் பெற்றவர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது மனைவியின் பெற்றோருக்கும் பொருந்தும் என்று சொல்வது சரியானதே. அதைவிடுத்து, கணவரின் பெற்றோரை கைவிடுங்கள் என பிரசாரம் செய்யக்கூடாது’ என்ற கருத்தும் ஒலிக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை திருமணத்துக்குப் பிறகு கணவன் வீட்டில் மனைவி வாழ்வதென்பதும், அந்த வீட்டுப் பெரியவர்களை பாதுகாப்பதும் மனிதம் சார்ந்தது. அதேசமயம், மாறிவரும் இன்றைய வாழ்க்கைச் சூழலில், குறிப்பாக ஒற்றைக் குழந்தைகள் நிறைந்த சமூகமாக மாறிவரும் நிலையில், கணவனின் பெற்றோர்... மனைவியின் பெற்றோர் என்கிற வித்தியாசம் இல்லாமல், இருதரப்பையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கணவன் - மனைவி இருவருக்குமே உண்டு என்பதை அனைவருமே உணர வேண்டும். இதில் ஆண் - பெண் பாலின பாகுபாடு பார்ப்பதும், இதை குடும்ப அரசியலாக்குவதும் ஆரோக்கியமான சமூகத்தை வழி நடத்தாது என்பதே உண்மை என நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் தோழிகளே?!

உரிமையுடன்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்