30 நாள் - அவள் சேலஞ்ச்

சாதனைப் பெண் ஆகணுமா?

சவாலைச் சந்தியுங்கள்!

டேங்கப்பா... எத்தனை சவால்கள்... எத்தனை கேள்விகள்... எத்தனை ஆர்வங்கள்!

`அவள் சேலஞ்ச்' அறிவிப்பைப் பார்த்துவிட்டு குவிந்துகொண்டிருக்கிற விண்ணப்பங்களில் தெரிகிறது ‘Life is a challenge... Face it!’ என்பதன் அர்த்தம்.

பள்ளிக்குக் கிளம்புகிற குழந்தைக்கு ஒருநாள்கூட ஒரு நிமிடம்கூடத் தாமதமாகிவிடக் கூடாதே என்கிற பதைபதைப்பில், எப்படியாவது சமாளித்து சரியான நேரத்துக்கு அனுப்பி வைக்கிற ஒவ்வொரு அம்மாவும் ஒரு சாதனையாளர்தான்.

வீட்டாருக்கு விருந்து சமைத்து வைத்துவிட்டு, பச்சைத்தண்ணீர் பல்லில் படாமல் விரதம் இருக்கும் சாமானிய மனுஷியின் கட்டுப்பாடுகூட ஒருவகையில் அசாத்தியமான சேலஞ்ச்தான்.

புதிதாகச் செய்கிற எந்த ஒரு விஷயமும் முதல் நாளே பழக்கமாவதில்லை. அதற்கு குறைந்தபட்சம் 21 நாட்களும் அதிகமாக 48 நாட்களும் அவசியம் என்கிறது மனவியல். அதனால்தான் மருந்து, மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறபோதும், புது விஷயங்களுக்குப் பழக அறிவுறுத்தும்போதும் ஒரு மண்டலம் - அதாவது 48 நாட்கள் செய்ய வேண்டும் என்கிறார்கள்.

அவள் வாசகியர் ரொம்பவே ஸ்மார்ட். அதனால்தான் அவர்களுக்கு 30 நாள் சேலஞ்ச்!

சவால்களை சந்திக்கிறவர்கள்தான் சாதனையாளர்கள் ஆகிறார்கள். `அவள் சேலஞ்ச்'சுக்கு தயாராகிற அத்தனை பேரையும் சாதனையாளர்கள் ஆக்குவதுதான் எங்கள் நோக்கம்.

மத்திய அரசுப் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார் அருணிமா சின்ஹா. ரயில் கொள்ளையரால் தாக்கப்பட்டுத் தூக்கி வீசப்பட்டார். தண்டவாளத்தில் கிடந்த அவர்மீது ரயில் ஏறியதில் கால்களை இழந்தார். கனவு வேலையையும் இழந்தார். அங்கேயே முற்றுப் பெற்றிருக்க வேண்டிய அருணிமாவின் வாழ்க்கை, மீண்டும் துளிர்த்தது. `விழுவது தோல்வியாகாது. விழுந்த பிறகும் எழாமல் இருப்பதுதான் மாபெரும் தோல்வி' என்பதற்கேற்ப வீறு கொண்டு எழுந்தார். முன்னைவிட வீரியமாக முயன்றார். எவரெஸ்ட்டின் உச்சம் தொட்ட முதல் மாற்றுத்திறனாளி என உலகமே இன்று அவரைக் கொண்டாடுகிறது. மற்றவர் பார்வையில் சாத்தியமே இல்லை எனத் தோன்றக்கூடிய ஒரு விஷயம் அருணிமாவுக்கு மட்டும் எப்படி வசப்பட்டது? சவாலை சந்திக்கத் துணிந்த அவரது தைரியம். ‘நான் இழந்தது என் கால்களைத்தானே தவிர, என் தன்னம்பிக்கையை அல்ல...’ என்று ஒரு பேட்டியில் அருணிமா சொன்னதுதான் அவரது யு.எஸ்.பி.

அப்படி ஒன்று உங்களுக்கும் உண்டுதானே..? வாருங்கள்...  சவால்களுடன் சந்திக்கக் காத்திருக்கிறோம்!

வள் சேலஞ்சில் பங்கெடுக்க இந்த கேட்டகரிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் யோசித்திருக்கும் சாதனை இப்பட்டியலில் அடங்காவிட்டாலும் கவலை வேண்டாம். அவற்றையும் சிறப்பு சேலஞ்சாக கருதி பரிசீலிப்போம்.

இவை மட்டுமல்ல... வியக்க வைக்கும், அசாதாரணமான, அபாரமான எந்தவொரு சாகச சவாலையும் தகுந்த பயிற்சி மற்றும் பாதுகாப்புடன் நீங்கள் சந்திக்கலாம்!

உங்கள் சவால்களை அனுப்ப வேண்டிய முகவரி: அவள் சேலஞ்ச், அவள் விகடன், 757 அண்ணா சாலை, சென்னை - 600 002. email: aval@vikatan.com

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick