நமக்குள்ளே...

‘பெற்றோரைப் பராமரிக்கும் கணவனை, தன்னுடன் பிரிந்து வரச்சொல்லும் மனைவியை விவாகரத்து செய்ய சட்டத்தில் உரிமை உள்ளது’ என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புப் பற்றி சென்ற இதழ் நமக்குள்ளே பகுதியில் பகிர்ந்திருந்தோம். இதைப் பற்றி உங்களுடைய கருத்துகளையும் கேட்டிருந்தோம். இதழ் கையில் கிடைத்ததும் வாட்ஸ் அப், முகநூல், கடிதம் என உங்கள் எண்ணங்களை சிந்தாமல் சிதறாமல் எங்களிடம் சேர்த்திருக்கிறீர்கள். உங்கள் அன்பும் அக்கறையும் பெருமைகொள்ள வைக்கிறது.

`கணவனின் வருமானத்தை அனுபவிக்க, பெற்றோருக்குத்தான் முதல் முக்கியத்துவம் தரவேண்டும்’ என சாத்தூர் வாசகர் கார்த்திகேயன் பதிவு செய்திருக்கிறார்.

`ஆண்களிடம் இருக்கும் ஆணாதிக்க மனநிலையும், பெண்களிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் விட்டுக் கொடுக்காத மனநிலையும்தான் பெற்றோர் வயதான காலத்தில் தனித்திருக்கக் காரணம்’ என பொதுவான பார்வையில் பேசியிருக்கிறார் மதுரை வாசகி உஷா முத்துராமன்.

`இதெல்லாம் மிடிஸ் கிளாஸ் ஆட்களுக்கு எப்படிப் பொருந்தும்... தன் வருவாய் தனக்கே போதாத நிலையில் இப்படி ஒரு தீர்ப்பை எப்படி ஏற்க முடியும்?’ என்று கேள்விகளாக அடுக்குகிறார் ஆன்லைன் வாசகர் சுந்தர்.

`ஆணுக்கு ஒரு சட்டம், பெண்ணுக்கு ஒரு சட்டம் என்பதை எல்லாம் ஏற்கவே முடியாது’ என வேலூர் வாசகி லாவண்யாவும், `ஒரு குழந்தை மட்டுமே இருக்கிற இந்தக் காலத்தில் பெற்றவர்களைப் பாதுகாக்க கணவன்-மனைவி இருவருக்குமே வலுவான சட்டங்கள் அவசியம்’ என்று மணப்பாறை வாசகி சிவரஞ்சனியும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு நடுவே, `குழந்தைகள், பெரியவர்கள் ஆனதும் தங்களைக் காப்பாற்றுவார்கள் என்று பெற்றோர் எதிர்பார்ப்பதே தவறு என்கிற நிலைதான் இன்றைக்கு எங்கும் நிலவுகிறது. அதனால் கடைசி காலத்துத் தேவைகளுக்கு, கையும் காலும் தெம்பாக இருக்கும்போதே அவரவர் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்’ என்று எதார்த்த யோசனை ஒன்றை முன் வைத்திருக்கிறார், புதுச்சேரியைச் சேர்ந்த வாசகி அம்புஜம்.

ஒவ்வொருவரின் பார்வையும் சிந்திக்கக் கூடியவையே!

20 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறான கருத்துகளைப் பேசவும் பகிரவும்கூட வாய்ப்பில்லாத சூழல்தான் இருந்தது. அதாவது, `பெண்ணின் பெற்றோர், பெண்ணின் பராமரிப்பில் வாழலாம்’ என்பதை பேச்சுக்குக்கூட சொல்லியிருக்க முடியாத சூழல்தான் அன்று. அதிலிருந்து விடுபட்டு விவாதிக்கும் அளவுக்காவது வந்திருக்கிறோம் இன்று!

இங்கே ஆண்-பெண் என்கிற நிலை தாண்டி, மனிதம் பேசும் மகத்துவம் மனிதர்களிடம் உண்டாக வேண்டும். அந்த இலக்கை நாம் நெருங்கிக் கொண்டிருப்பதாகவே நம்புவோம்.

உரிமையுடன்,


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்