பொறுத்தது போதும்!

மேடைபொன்.விமலா, படங்கள்: மா.பி.சித்தார்த்

பெண்களுக்கு எதிரான குற்றங்களின் அளவு ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் சொல்கின்றன. குற்றங்கள் நடக்காமல் இருக்க தண்டனைதான் தீர்வா? அல்லது அடிப்படையிலேயே மனித குலம் வளர்ப்பு முறையில் இருந்தே வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளவேண்டுமா? பெண்ணின் மீது ஓர் ஆணால் ஒரு குற்றம் நடத்தப்படுகிறது எனில், பாதிக்கப்படுவது பெண் மட்டும்தானா? குற்றம் புரிந்த ஆணின் குடும்பமும் பாதிக்கப்படுவதில்லையா? இப்படி பல்வேறு கேள்விகளை முன்வைத்துப் பேசுகிறது ‘பொறுத்தது போதும்’ நாடகம்.

இயக்குநர் கே.பாலசந்தரின் உதவி இயக்குந ராக இருந்து, பின் ‘இரண்டாம் சாணக்யன்’, ‘வீட்டுக்கு வீடு லூட்டி’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ உள்ளிட்ட தொலைக் காட்சி தொடர்களை இயக்கியவர் பாம்பே சாணக்யா. ‘பிரேமி’, ‘ஜன்னல்’ உள்ளிட்ட சின்னத்திரை தொடர் களுக்கு வசனங்கள் எழுதியவர். இப்போது சுவாதி படுகொலை பாதிப்பில் பாம்பே சாணக்யா உருவாக்கிய நாடகமே ‘பொறுத்தது போதும்!’

‘‘பெண்களுக்கும் சுதந்திரம் வேணும், முழு உரிமைகள் வேணும்னு கேட்கிறோம். அதே நேரத்துல ஒரு ஆண்பிள்ளைக்குத் தாயாக மாறும்போது, அவளே முழுக்க முழுக்க ஆண் பிள்ளைக்குதான் ஆதரவா பேசுவா. ஓர் ஆண் தவறு செய்தா அதுக்கு முழுக்காரணம் வீட்டில் இருந்து, அவன் வளர்ப்புமுறையில் இருந்துதான் ஆரம்பிக்குது. ஒருதலைக்காதல், உறவுச் சிக்கல் போன்ற காரணங்களால் ஒரு பெண் கொல்லப்பட்டா, அவளை, அவளுடைய குடும்பம் முழுமையா புரிந்துகொள்ளாததும் ஒரு காரணம். குழந்தைகளை பெற்றோரிடம் மனம் திறந்து பேச அனுமதித்தாலே பல குற்றங் கள் தடுக்கப்படும். இதைத்தான் நாடகத்துல சொல்லியிருக்கிறேன்’’ என்கிறார் சாணக்யா.

நாடகத்தில் கொலை செய்யப்படும் பெண்ணின் தந்தை உருகி அழும் காட்சியும், கொலை செய்தவனின் தாய் அவனைக் காப்பாற்றப் போராடும் காட்சியும் நெஞ்சை நெகிழச் செய்கின்றன. ஒரு நாடகத்தின் காட்சிகளே நம்மை இத்தனை பாடுபடுத்துகிறது என்றால், நிஜ வாழ்க்்கையில் நம் கண் முன் நடக்கும் குற்றச் சம்பவங்களைக் கண்டும் காணாததுபோல இருக்க முடியுமா என்ன? அதுவும் குற்றமே... ‘பொறுத்தது போதும்... பொங்கி எழுவோம்!’ என்கிறது இந்நாடகம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்