சமச்சீர் டயட்டில் எடை குறைக்க முடியுமா?

டயட் டூர் இளங்கோ கிருஷ்ணன்

``இட்லி, தோசை, சட்னி, சாதம், சாம்பார், ரசம், தயிர், பொரியல், அவியல் என்றும் நாம் வழக்கமாகச் சாப்பிடும் உணவையே சமச்சீர் டயட் என்கிறோம். நம் மரபான சமச்சீர் உணவை முறையாக உண்டாலே அளவான எடையோடு வளமாக வாழலாம்'' என்கிறார் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.

அரிசி சாதம் சாப்பிடலாமா?

அரிசி சாதத்தில் ஆபத்து அதிகம் என்பதைப் போன்ற ஒரு கருத்து நம் மக்களிடையே இப்போது பரவிவருகிறது. பேலியோ முதல் மெடிட்டரேனியன் டயட் வரையிலான அரிசி இல்லாத புதிய புதிய டயட்டுகள் புகழ்பெற்று இருப்பதே இதற்குச் சாட்சி. உண்மையில், ‘அந்தந்த மக்களுக்கு அந்தந்த நிலத்தின் உணவுகள்’ என்பது ஒரு முக்கியமான உணவு விதி. எனவே, நம் நிலத்தில் அதிகம் விளைகிற, நம் முன்னோர் தொடர்ந்து எடுத்துக்கொண்ட உணவை அறவே தவிர்ப்பதில் அர்த்தம் இல்லை. அரிசியில் வெறும் கார்போஹைட்ரேட் மட்டுமே இருக்கிறது என்று சொல்வது தவறு. அரிசியில் முக்கியமான சத்துக்கள் பலவும் உள்ளன. ஆகவே, அரிசி எப்போதும் உங்கள் மெனுவில் இருக்கட்டும்.

வெள்ளை வெளேர் அரிசி சாப்பிடலாமா?

இன்னொரு முக்கியமான விஷயம், அரிசி என்றதும் வெள்ளை வெளேர் என்று இருப்பதுதான் நல்ல அரிசி என்று நினைக்கிறோம். இது தவறான கருத்து. அரிசி வெள்ளை வெளேர் என்று இருந்தால் அது பட்டை தீட்டப்பட்டது என்று பொருள். பட்டை தீட்டப்பட்ட அரிசியில் அதன் நார்ச்சத்து உள்பட முக்கியமான நுண்ணூட்டச் சத்துக்கள் நீங்கிவிடுகின்றன. சற்றே பழுப்பான அரிசிதான் சத்தும் ஆரோக்கியம் நிறைந்தது.  இதேபோல சிவப்பு அரிசியிலும் சத்துக்கள் அதிகம்.சிவப்பு அரிசியும் பழுப்பு அரிசியும் வேறு வேறு. பழுப்பு அரிசி என்பது நாம் வழக்கமாக உண்ணும் புழுங்கல் அரிசிதான். புழுங்கல் அரிசியையும் சிவப்பு அரிசியையும் மாறி மாறி சாப்பிடுவதன் மூலம் இரண்டின் பலன்களையுமே பெற முடியும்!

சிறுதானியம் எனும் நண்பன்

சிறுதானியங்கள்தான் நம் முன்னோர் பெரும்பாலும்
பயன்படுத்திய பாரம்பர்ய உணவு. கார்போ ஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து, விட்டமின்கள், நுண்ணூட்டச்சத்துகள் நிறைந்தது. நம் செரிமான மண்டலம் பாரம்பரிய உணவுப்பழக்கத்துக்கு ஏற்ப தகவமைப்பு கொண்டது. செரிமான மண்டலத்துக்கும் மூளையின் செயல்பாடுகளுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதை நவீன ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, குதிரைவாலி போன்றவற்றை உண்பதன் மூலம் நமது செரிமான மண்டலம் மேம்படும். நம் உடலும் உள்ளமும் நலம் பெறும். நமது தினசரி உணவில் அரிசிக்கு இணையாக சிறுதானிய உணவுகளும் இருக்க வேண்டியது அவசியம்.

காய்கறிகள், கீரைகள் எனும் வானவில் கூட்டணி

விட்டமின்கள், தாதுஉப்புக்கள், நுண்ணூட்டச் சத்துகள், நார்ச்சத்துகள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த காய்கறிகள், கீரைகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். பொதுவாக, நமது நிலத்தில் விளைந்த காய்கறிகள், பழங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால், உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து, நார்ச்சத்து கிடைப்பதோடு, ஆரோக்கியமும் மேம்படும். இங்கிலீஷ் காய்கறிகளான கேரட், பீட்ரூட், பீன்ஸ், முட்டைகோஸ் போன்றவையும் சேர்த்துக்கொள்ளலாம். காய்கறிகள், பழங்களைப் பொறுத்தவரை ஒரே மாதிரியான காய்கறிகளையும் பழங்களையும் உண்ணாமல், எல்லாவற்றையும் சமவிகிதத்தில் எடுத்துக்கொள்வதே சிறந்தது. வானவில் வண்ணத்தில் காய்கறிகள், பழங்களை எடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணம் என உணவில் சேர்ப்பதன் மூலம் ஆரோக்கியமும் அழகும் இளமையும் நம் வசமாகும்!

பழங்கள் பழகுவோம்


காய்கறிகள், கீரை களுக்கு இணையான நற்பலன்கள் பழங்களில் நிறைந்துள்ளன. தினசரி ஏதேனும் ஒரு பழம் உண்பதை வழக்கமாக வைத்துக்கொள்வது நல்லது. ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட பழங்களை உண்பதைவிட ஒவ்வொரு நாளும் ஒவ் வொரு பழம் என உண்பது நல்ல பலன் தரும். பழங்களை உணவுக்கு முன்போ, பின்போ உண்ணக்கூடாது. ஓர் உணவு வேளைக்கும் இன்னோர் உணவு வேளைக்குமான இடைவெளியில் பழங்களை உண்ண வேண்டும். உணவு உண்ட இரண்டு மணி நேரம் கழித்து உண்பது மிகவும் நல்லது. பழங்களை ஜூஸாக்கும் போது அதில் உள்ள நுண்ணூட்டச் சத்துக்கள் உடைந்து விடுகின்றன. பால், நீர், சர்க்கரை போன்றவற்றைச் சேர்க்கும்போது அவற்றில் உள்ள வேதிப்பொருட்கள் பழங்களில் உள்ள வேதிப்பொருட்களோடு வினைபுரிந்து பழத்தின் பலன்களைக் குறைக்கின்றன. எனவே, நோயுற்றோர், முதியவர்கள், மென்று உண்ண முடியாதவர்கள் தவிர, மற்றவர்கள் பழங்களை நன்கு நீரில் கழுவி, அப்படியே கடித்து, மென்று தின்பதே சுவையும் ஆரோக்கியமும் தரும் நற்பழக்கம்!

- டயட்டை தொடர்வோம்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்