உண்மையான புதுமைப் பெண்! - நடிகை கஸ்தூரி

வாழ்வை மாற்றிய புத்தகம் ஆர்.வைதேகி, படம்: தி.குமரகுருபரன்

‘`ஒவ்வொருமுறை வாசிக்கிறபோதும் எனக்குள் ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிற புத்தகம் புதுமைப்பித்தனின் சிறுகதைத் தொகுப்பு... ஒவ்வொரு கதையும் புரட்சி பேசும்!

பால்ய விவாஹம் முடிந்து, அந்த வயதிலேயே கணவனையும் இழந்த ஒரு பெண்... அந்த இளம்பெண்ணிடம் ஓர் இளைஞன் ஆதரவாகப் பேசுவான்.  அக்கறை காட்டுவான். அவளுக்கும் அவன்மீது ஓர் ஈர்ப்பு இருக்கும். அதைவிட அதிகமாக பயம். அந்த இளைஞன், தன் விருப்பத்தை அவளுக்குக் கடிதமாக எழுதுவான்... `இத்தனை நாளுக்குள் பதில் சொல்லாவிட்டால் நான் உன்னை விட்டு விலகிவிடுகிறேன்' என. பாவம்... அவளுக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியாதே... குறிப்பிட்ட நாளுக்குள் பதில் வராததால், அவளுக்கு விருப்பமில்லை என நினைத்து விலகிச் சென்றுவிடுவான். பிறகொரு நாளில் அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்த விவரம் தெரிய வரும்போது துடித்துப் போவாள். அந்தக் குற்ற உணர்விலிருந்து மீண்டு எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டு, ஒருநாள் ஒரு கல்லூரிக்கே முதல்வர் ஆவாள். மற்றவர்களின் வாழ்க்கையை மாற்றும் அளவுக்கு தன்னை வளர்த்துக்கொள்வாள்.

அதே தொகுப்பில் இன்னொரு கதை...முற்போக்கு எண்ணம் கொண்ட ஒரு மனிதர்,  கணவனை இழந்த பெண்ணைத் திருமணம் செய்ய நினைப்பார். அவளிடம் ‘உனக்கு வாழ்க்கை தருகிறேன்’ என்பார். அந்தப் பெண்ணோ, ‘எனக்கு இன்னொரு மணம் தேவையில்லை. அன்பு போதும்’ என்பாள். இப்படிச் சொல்கிற புதுமைப்பித்தனின் கதாநாயகிதான் உண்மையான புதுமைப் பெண்ணாக எனக்குத் தெரிகிறாள். `திருமணம் வேண்டாம்...  ஆதரவாக இருக்க ஆண் துணை போதும்' என இன்று எந்தப் பெண்ணால் சொல்ல முடியுமா? 1920 - 30களில் இப்படி புரட்சிகரமான விஷயங்களை சர்வசாதாரணமாக தனது கதைகளில் கையாண்ட புதுமைப்பித்தனின் எழுத்தாளுமையை எப்போது படித்தாலும் பிரமித்துப் போகிறேன்.

வாசித்த பிறகு புரிதலை, வாழ்க்கையை மாற்றிய புத்தகம் இது என்றால் வாசிக்காமலேயே வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட புத்தகம் ஒன்றும் இருக்கிறது. அது ராஜாஜி எழுதிய ‘கூனி சுந்தரி’  சிறுகதைப் புத்தகம். இதை என் அம்மா எனக்கு கதையாகச் சொன்னார்.

நரசிம்ம ஐயர் மனைவியை இழந்தவர். 6 வயதில் பெண்குழந்தை. அவருக்கு இன்னொரு திருமணம் செய்து வைப்பார்கள். திருமணத்துக்குப் பிறகுதான் அவள் கூன் விழுந்தவள் என்பதெல்லாம் அவருக்குத் தெரியும். அவளைப் பார்த்தாலே எரிச்ச லடைவார். அந்தப் பெண்ணோ எதையும் பொருட்படுத்தாமல் தன் கடமைகளை செய்துகொண்டிருப்பாள். ஒருநாள் நரசிம்ம ஐயரின் மகள், ‘ஏம்ப்பா உனக்கு அம்மாவைப் பிடிக்கலை... அவங்க எவ்ளோ அழகா இருக்காங்க...’ எனச் சொல்லிக் கட்டிப் பிடித்துக்கொள்வாள். அப்போதுதான் சுளீரென உறைக்கும் அவருக்கு. தன் தவறை உணர்ந்து திருத்திக்கொள்வார்!

எல்லா அம்மாக்களுக்கும் ஏதோ ஒரு தருணத்தில் நான் என் குழந்தைக்கு சரியான அம்மாவாக இல்லையோ என்கிற எண்ணம் எட்டிப் பார்க்கும். குழந்தைகளைப் பொறுத்தவரை அம்மாதான் சிறந்தவள். அதை அவர்கள் உணர்ந்து கொண்டு வெளிப்படுத்தும் போது அம்மாக்களுடைய குற்ற உணர்வு காணாமல் போய் விடும். எத்தனை பெரிய தத்துவத்தை எவ்வளவு எளிமையாக சொல்லியிருக்கிறார் ராஜாஜி..!’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்