பிளாட்பாரம் டு உலகக் கோப்பை... - பிரமிக்க வைக்கும் சங்கீதா!

நட்சத்திரம் - கால்பந்துவெ.நீலகண்டன் படங்கள்: மீ.நிவேதன்

“இதோ, இந்த பிளாட்பார்ம்லதான் இருக்கோம். குளிக்கிற தெல்லாம் பப்ளிக் பாத்ரூம்ல. அதையும் ராத்திரி 9 மணிக்கெல்லாம் மூடிடுவாங்க. அதுக்கு மேல அவசரம்னா சென்ட்ரல் ஸ்டேஷன் வெயிட்டிங் ரூமுக்குத்தான் போகணும். ஆர்.பி.எஃப்-காரங்க பார்த்தா துரத்துவாங்க. அதோ, அந்த ரோட்டோரத்துலதான் தூங்குவோம். மழை வந்தா கடைகளுக்கு முன்னாடி ஒண்டி உக்காந்துக்குவோம். கொஞ்சநாள் முன்னாடி, ராத்திரி தூங்கிக்கிட்டிருந்தப்போ, குடிபோதையில ஆட்டோவை ஓட்டிக்கிட்டு வந்து ஒருத்தன் என் கையில ஏத்திட்டான். நகம் உடைஞ்சு தொங்குச்சு. அந்த மாதிரி நிறைய நடக்கும். சிலபேர் செத்தே போயிருக்காங்க...” - சங்கீதா சிரித்துக்கொண்டே சொல்லும்போது நமக்கு இதயம் நடுங்குகிறது.
 
சென்னையின் பரபரப்பு மிகுந்த வணிக சாலைகளில் ஒன்றான வால்டாக்ஸ் ரோட்டில், பிளாட்பாரத்தில் வசிக்கிறது சங்கீதாவின் குடும்பம். அப்பா, குடிக்கு அடிமையாகி குடும்பத்தை விட்டு விலகி விட்டார். உழைத்து உழைத்து சோர்ந்து துவண்டுவிட்டார் அம்மா. அக்காவும் அண்ணனும் உழைத்துச் சேர்க்கிற சொற்ப வருமானத்தில் குடும்பம் நகர்கிறது. இவ்வளவு துயரம் சூழ்ந்த வாழ்வியல் சிக்கல்களுக்கு மத்தியில்தான் சங்கீதா ஸ்காட்லாந்து சென்று வேர்ல்டு கப் ஃபுட்பால் விளையாடிவிட்டு வந்திருக்கிறார்!

கிழிந்துபோன பந்துகளைத் தேடியெடுத்து, தெருவில் உதைத்து விளையாடித் திரிந்த சங்கீதாவை அடையாளம் கண்டு, தக்க பயிற்சியளித்து ஃபுட்பால் வீராங்கனையாக உருமாற்றியிருக்கிறது `கருணாலயா' தொண்டு நிறுவனம். எந்தச் சிரமத்தையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் பண்பு, சங்கீதாவுக்கு இயல்பாகவே வாய்த்திருக்கிறது. அருகில் இருக்கிற சென்னை மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 படிக்கிறார்.

“நாங்க நாலு பிள்ளைங்க. அப்பா விட்டுட்டுப் போனபிறகு, அம்மா, தெரு கூட்டுற வேலைக்குப் போச்சு. இப்போ, அதால குனிஞ்சு நிமிந்து வேலை செய்ய முடியலே. அக்காதான் எல்லாம். கொஞ்சநாளா அண்ணாவும் வேலைக்குப் போறான்.

சாலையோரத்துல வாழ்ற பிள்ளைகளுக்கு ட்யூஷன் எடுக்கிற துக்காக கருணாலாயாவுல இருந்து வந்தாங்க. நாங்க ஃபுட்பால் விளையாடுறதைப் பார்த்துட்டு, பயிற்சிக்கு வரச் சொன்னாங்க. ஸ்கூல் விட்டு வந்தவுடனே தண்டையார்பேட்டை கிரவுண்ட்டுக்கு போய் விளையாடுவோம். கிழியாத பந்து, ஷூ, ஷாட்ஸ், ஜெர்ஸி யெல்லாம் பார்த்தவுடனே இன்ட்ரஸ்ட் ஆகிடுச்சு. அடிப்படையே தெரியாம பந்தை மனம்போன போக்குல உதைஞ்சு திரிஞ்ச நான், ஈடுபாட்டோட ஃபுட்பால் கத்துக்க ஆரம்பிச்சேன்.

இப்படி பந்தை சுமந்துகிட்டு ஆம்பளை மாதிரி திரியுறதைப் பாத்து பக்கத்துல இருக்கவங்கள்லாம் அம்மாவை திட்ட ஆரம்பிச்சுட்டாங்க. அம்மா அதையெல்லாம் கண்டுக்கலே. `நீ என்ன செய்யணும்னு நினைக்கிறியோ அதை செய்'னு சொல்லிடுச்சு.

பொதுவா எங்களை மாதிரி ரோட்டுல வாழுற ஜனங்களை யாரும் மனுஷங்களா மதிக்கிறதே இல்லை. தலைமுறை மாறுனாலும் எங்க ரோட்டு வாழ்க்கை மட்டும் மாறவே மாறாது. `இந்த விளையாட்டாவது வாழ்க்கையை மாத்தட்டுமே'னு அம்மா நினைச்சுச்சு.

முதன்முதல்ல, சென்னை அளவுல டிஃபன்ஸ் பிளேயரா ஆடினேன். அதுல எங்க டீம் கப் வின் பண்ணுச்சு. பெஸ்ட் பெர்ஃபாமென்ஸ் அவார்டு எனக்குக் கிடைச்சுச்சு. அதுக்கப்புறம் தீவிரமா விளையாட ஆரம்பிச்சுட்டேன். ஃபார்வர்டும் ஆடுவேன்.
வீடில்லாத குடும்பங்களைச் சேர்ந்த ஃபுட்பால் வீரர்களுக்காக தேசிய அளவுலயும், உலக அளவிலயும் ஹோம்லெஸ் ஃபுட்பால் டோர்ன மென்ட் நடத்துறாங்க. அதுக்கு நாங்க தயாரானோம்.

வழக்கமா ஃபுட்பால் விளையாடுறவங்க முட்டை, பால், ஆப்பிள்னு சத்தான உணவுகளா சாப்பிடணும். எனக்கு மூணு வேளை சோறு கிடைக்கிறதே சிரமம். இதுல சத்துணவுக்கு எங்கே போறது..? கருணாலயாவுல அவிச்ச பயறு, பால் தருவாங்க. மத்தபடி வீட்டுல என்ன கிடைக்குதோ அதுதான் சத்துணவு.

நாக்பூர்ல ராஜீவ் காந்தி மெமோரியல் ஃபுட்பால் டோர்னமென்ட்... தமிழ்நாடு பெண்கள் டீமுக்கு நான்தான் கேப்டன். நல்லா விளையாண்டோம். இருந்தாலும் உடல் அளவுல வலுவா இருந்த சில அணிகள் எங்களை பின்னுக்கு தள்ளிட்டாங்க. ஒன்பதாவது இடம் தான் கிடைச்சுச்சு. அதேநேரம், டீம் டிசிப்பிளினுக்காக ஃபேர்பிளே அவார்டு எங்களுக்குக் கிடைச்சுச்சு. ஒரு கேப்டனா அது எனக்கு உற்சாகமா இருந்துச்சு...”  - பெருமிதமாகச் சொல்கிறார் சங்கீதா!

கடந்த பிப்ரவரியில் கொல்கத்தாவில் நடந்த தேசிய ஹோம்லெஸ் ஃபுட்பால் டோர்னமென்ட்டில் அண்டர்-16 பிரிவில் தமிழக அணியை வழிநடத்திச் சென்றார் சங்கீதா. அப்போட்டியில் விளையாடிய அணிகளில் சிறப்பாக ஆடிய 35 பேர் வேர்ல்டு கப் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்கள். அதில் ஒருவராகத் தேர்வான சங்கீதா, இறுதி அணியிலும் இடம் பிடித்தார்.

“ரொம்ப சர்ப்ரைஸா இருந்துச்சு. ஃபைனல் டீம் செலக்ட் செய்த பிறகு நிறைய பயிற்சி கொடுத்தாங்க. நல்ல சத்துணவு கொடுத்தாங்க. மென்டல் ஃபிட்னஸ், பிசிக்கல் ஃபிட்னஸ் எல்லாம் கிடைச்சுச்சு.

வேர்ல்டு கப் டோர்னமென்ட் ஸ்காட்லாந்து நாட்டுல நடந்துச்சு. இந்தப் போட்டிக்கு  நான் தேர்வானதை எங்க மக்கள் கொண்டாடி தீர்த்துட்டாங்க. ஃபிளக்ஸ் போர்டெல்லாம் வெச்சாங்க. இங்க உள்ள கடைகாரங்கள்லாம் சேர்ந்து 8 ஆயிரம் ரூபாய் கலெக்ட் பண்ணித் தந்தாங்க. அதுலதான் டிரெஸ், மருந்து, தைலமெல்லாம் வாங்கினேன். ஃபிளைட்ல ஏறும்போது உண்மையிலேயே நம்ப முடியலே... `நாம எல்லாம் ஏரோபிளேன் பக்கத்துல நின்னு பாப்போமா'னு நினைச்சிருக்கேன். ஆனா, அதிலயே பயணம் செய்வேன்னு நினைச்சுக்கூட பாத்ததில்லை!
ஸ்காட்லாந்துல அந்த நாட்டோட பிரபலமான ஃபுட்பால் பிளேயர் ஆண்டி ஹூக் எங்களுக்குப் பயிற்சி கொடுத்தார். ஒவ்வொருத்தரோட திறமையையும் தனித்தனியா கண்டுபிடிச்சு அதுக்கு தகுந்த மாதிரி அவர் கத்துக்கொடுத்த நுட்பங்கள் வியப்பா இருந்துச்சு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்