”வெற்றிக்கதவை திறக்க வைக்கணும்!”

நட்சத்திரம் - செஸ்ஆ.ஐஸ்வர்ய லட்சுமி, லோ.பிரபுகுமார், ச.செந்தமிழ் செல்வன், படம்: பா.பிரபாகரன்

சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, எந்தப் பின்புலமும் இல்லை என்றாலும், ‘திறமைக்குத் தடை கிடையாது’ என நிரூபித்திருக்கும் கறுப்பு, வெள்ளைக் கட்டங்களின் ராணி. இவர், அண்ணா பல்கலைக்கழக இ.சி.இ இறுதியாண்டு மாணவி நந்திதா!

‘`சேலம் மாவட்டம் சங்ககிரி என் சொந்த ஊர். அப்பா  வெங்கடாசலம், விவசாயி. அம்மா சுமதி, கூட்டுறவு வங்கியில வேலை பார்க்கிறாங்க. நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு. என் ஒன்பதாவது வயசுலதான் எனக்கு செஸ் அறிமுகம். ஆரம்பப் போட்டிகளில் வெற்றி பெறலைன்னாலும், கோச் எனக்கு ஊக்கம் கொடுத்துட்டே இருந்தார். 2007-ம் ஆண்டு கோழிக்கோட்டில் நடந்த  11 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசியப் போட்டியில் சாம்பியன்ஷிப் வாங்கினதுதான் முதல் பெரிய வெற்றி’’ என்கிற நந்திதா, 2008-ல் தேசிய போட்டியில் வெள்ளி, 2009-ல் ஆசிய யூத் போட்டியில் தங்கம், 2011-ல் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற ஆசியப் போட்டியில் தங்கம், 2012-ல் காமன்வெல்த் போட்டியில் வெள்ளி, 2015-ல் ஆசிய ஜூனியர் போட்டியில் வெண்கலம், 2016-ல் இலங்கையில் நடைபெற்ற காமென்வெல்த் போட்டியில் தங்கம் எனத் தொடர்ந்து பெரும் வெற்றிகளை வசப்படுத்தியிருக்கிறார். ‘போட்டிகளுக்கு நடுவில் படிப்பை எப்படிச் சமாளிக்கிறீங்க?’ என்றால் கூலாகச் சிரிக்கிறார்.

``பள்ளி நாட்களில் இருந்தே அது எனக்குப் பழகிடுச்சு. டென்த், ப்ளஸ் டூ-ல எல்லாம் மொத்தமா மூணு மாசம்தான் ஸ்கூலுக்குப் போயிருப்பேன். அம்மா தனியா எனக்கு ட்யூஷன் ஏற்பாடு செய்து பாடங்களைப் படிக்க வெச்சாங்க. ஸ்போர்ட்ஸ் கோட்டாலதான் அண்ணா பல்கலைக்கழக ஸீட் கிடைச்சது. மாசாமாசம் டோர்னமென்ட்டுக்குக் கிளம்பிடுவேன். ஆனாலும், பேராசிரியர்களும் நண்பர்களும் பாடங்களை முடிக்க உதவி செய்வாங்க.

என்னைப் போல இன்னும் பல திறமைசாலிகள் இருக்காங்க. அவங்களை அடுத்த கட்டத்துக்கு வரவிடாமல் தடுப்பது ஏழ்மைதான். அதுபோன்ற மாணவர்களை அரசு தேர்ந்தெடுத்து உதவிகள் செய்தா, இன்னும் பல சாதனைகள் நமக்குச் சொந்தமாகும். மாணவர்களும் மூடப்பட்டிருக்கும் வெற்றிக் கதவுகளை மன உறுதியோட திறக்க வைக்கணும்’’ என்று 20 வயதிலேயே தன்னம்பிக்கை பாடம் எடுக்கும் நந்திதாவின் 21-வது வயதுக்கான திட்டங்கள் என்ன?

‘`இப்போ பெண்கள் பிரிவில் நான் ‘இன்டர்நேஷனல் மாஸ்டர்’. சீனியர் பெண்கள் பிரிவில் ‘கிராண்ட் மாஸ்டர்’ பட்டம் வெல்வதுதான் அடுத்த இலக்கு.''

காத்திருக்கிறோம் பாராட்டும் தருணத்துக்கு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்