50 வயதிலும் ஓடலாம்... வாழ்வைக் கொண்டாடலாம்!

நட்சத்திரம் - மாரத்தான் செ.சங்கீதா

ர்மிளா சுரானா... மாரத்தான் நடக்கும் இடங்களில் எல்லாம் முதல் நபராக ஆஜராகிக்கொண்டிருக்கும் பெண்மணி. தன் ஐம்பத்தோராவது வயதிலும் இருபது வயது இளைஞி போலவே உற்சாகத்துடன் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற 10 கி.மீ மாரத்தானிலும், அண்மையில் பெங்களூரில் நடைபெற்ற மாரத்தானிலும் இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

“எனக்கும் கணவருக்கும் பாம்பே சொந்த ஊர். கோயம்புத்தூர் வந்து ஐந்து வருடங்களாச்சு. பி.காம் பட்டதாரியான நான், 15 ஆண்டுகளாக, பத்து, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டிலேயே சிறப்பு வகுப்பு எடுத்துட்டு வர்றேன். இரண்டு மகள்கள்... கடந்த வருஷம் முதல் பெண்ணுக்கும் இந்த வருஷம் இரண்டாம் பெண்ணுக்கும் திருமணம் முடிந்தது. இப்போ வீடு, வகுப்பு, பயிற்சிகள்னு நிம்மதியா என் வாழ்க்கை நகர்ந்திட்டிருக்கு” என்று தன் குடும்பம் பற்றிக் கூறுகிற ஊர்மிளா, சமையல் கலைஞரும்கூட. ஏராளமான சமையல் போட்டிகளில் பங்கெடுத்து, பரிசுகளும் பட்டங்களும் வென்றுள்ளார்.

“எந்த நோயும் என்னை அண்டிவிடக் கூடாதுங்குறதுதான் என் விருப்பம். அதனால் பேட்மின்டன், யோகா, ஓட்டப் பயிற்சி என சளைக்காமல் செய்கிறேன். கடந்த வருஷத்திலிருந்துதான் மாரத்தானில் கலந்திட்டிருக்கேன். ஒரு நல்ல விஷயத்துக்காக செய்யப்படுகிற காரியத்தில் என்னுடைய பங்கும் அடங்கி இருக்கு என நினைக்கும் போது மனதுக்கு நிறைவா இருக்கு. மாராத்தான் ஓட்டத்தில் 45 முதல் 70 வயது பிரிவில் போட்டியிடுறேன். இதில் வெற்றியோ, தோல்வியோ ஒரு பொருட்டு அல்ல. இந்த வயதிலும் மற்றவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் செயல்படுவதில்தான் மகிழ்ச்சி...'' என்கிற ஊர்மிளாவின் செயல்பாடுகளைப் பார்த்து பல பெண்கள் மாரத்தானுக்கு வருவது இனிய ஆச்சர்யம்! 

“பெண்களின் சிந்தனைகளும் செயல்களும் தான் குடும்பத்தில் பிரதிபலிக்கும். இந்தச் சமூகத்தின் நலனும் பெண்கள் கையில்தான் உள்ளது. அதற்கான நல்வாய்ப்பாகவே மாரத்தானை பார்க்கிறேன். இதுபோன்ற போட்டிகளில் கலந்துகொள்வது மனதளவிலும் உடல் அளவிலும் ஆரோக்கியத்தைத் தரும். அதனால் மாரத்தான் போன்ற விளையாட்டுகளில் பெண்கள் அதிகம் கலந்து கொள்ள வேண்டும்'' என்கிற ஊர்மிளா, கூடவே உத்வேக டிப்ஸ் அளிக்கிறார்.

``கடின முயற்சியே வெற்றியைத் தேடித் தரும். மாரத்தான் போட்டிகளில் வேகமாக ஓடி ஒரு கிலோமீட்டர் தாண்டுவதற்குள் சோர்ந்து விடக் கூடாது. தினமும் காலை ஜாகிங் பயிற்சி எடுத்துக்கொண்டால், இதுபோன்ற நீண்ட ஓட்டப் பந்தயங்களில் எளிதாக வெற்றிபெற முடியும். பெண்களுக்கு உலகத்தையே திரும்பி பார்க்க வைக்கும் திறமைகளும் ஆற்றலும் உள்ளன. அவர்களால்தான் சமூக மாற்றத் தையும் கொண்டு வர முடியும். அதற்கு வயது ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது என்பதே என்னுடைய விருப்பம்'' என்று நம்பிக் கையுடன் கூறுகிறார் இந்த மாரத்தான் புயல்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்