அம்மா திரும்பி வந்த கதை!

நெகிழ்ச்சி ம.மாரிமுத்து

‘காணவில்லை’ தலைப்புக்குக் கீழே ஒரு புகைப்படம். அதில் காணப்படுபவர் 60 வயது தாத்தாவாகவோ, 70 வயது பாட்டியாகவோ இருக்கலாம். பார்த்தவுடனேயே நமக்குள் ஒரு கேள்வி பிறக்கும்... ‘இந்த வயதில் இவர்கள் ஏன் காணாமல் போக வேண்டும்?’ இந்தக் கேள்விக்கான பதில்கள் வெவ்வேறானவை. பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள், சொத்துக்காகத் துரத்தப்பட்டவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்... இப்படி நீள்கிற இந்தப் பட்டியலில் உள்ள ஒவ்வொருவரின் பின்னால் ஒரு சோகக்கதை.

பரபரப்புக்குக் குறைவில்லாத சென்னை, சைதாப்பேட்டை... கணவர் ஆண்ட் ரூஸுடன் வாழ்ந்துவந்தார் சரஸ்வதி. கலப்புத் திருமணம். சரஸ்வதியின் அண்ணன்கள் இருவரும் மலேசியாவில் வசிக்கிறார்கள். அக்காவும் தங்கையும் சென்னையில். இதற்கிடையே சரஸ்வதியின் தந்தை இறந்துபோக, தன் அம்மா பாப்பாத்தி அம்மாளைத் தன்னுடனேயே வைத்துக்கொள்ள விரும்பினார் சரஸ்வதி. கணவர் ஆண்ட்ரூஸ் தோட்டப் பராமரிப்புத் தொழிலாளி. அதிக வருமானம் இல்லை. என்றாலும், அள்ள அள்ளக் குறையாத பாசம் இருந்தது. மகளும் மருமகனும் நன்றாகக் கவனித்துக்கொண்டாலும், பாப்பாத்தி அம்மாளிடம் ஒரு வெறுமை குடிகொண்டிருந்தது. கணவரின் பிரிவும், அதனால் ஏற்பட்ட தனிமையும் அவரைப் படுத்தி எடுத்தன. தனக்குள் சுருங்கிப் போனார்.

இந்தச் சூழ்நிலையில், கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் அந்தக் குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய அந்தச் சம்பவம் நடந்தது. ஆம்... பாப்பாத்தி அம்மாள் காணாமல் போனார். எங்கு போனார்; என்ன ஆனார்? யாருக்கும் தெரியவில்லை. சரஸ்வதியும் அவர் சகோதரிகளும் கலங்கிப்போனார்கள். மலேசியாவில் இருக்கும் சகோதரர்களுக்கும் செய்தி பறந்தது. பிறகென்ன... குடும்பமே தேடி அலைந்தது. புதுச்சேரி, சென்னை, கடலூர் என்று அலையாத ஊர் இல்லை. ஆனாலும், பாப்பாத்தி அம்மாளை  கண்டுபிடிக்கவே முடியவில்லை. 

இத்தனை வேதனைக்கு நடுவிலும் ஆண்ட்ரூஸிடம் ஒரு பழக்கம்... ஆண்டுதோறும் வேளாங்கண்ணிக்குப் பாதயாத்திரையாகச் சென்றுவிடுவார். இந்த முறை, சரஸ்வதியும் சேர்ந்துகொண்டார். களைப்பு, உடல்வலி. அத்தனையும் தாங்கியபடி அவர்கள் நடந்துகொண்டிருந்தார்கள். காரைக்கால் அருகே அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது அது நடந்தது.

 ‘‘காரைக்கால் தாண்டிப் போயிட்டிருந்தோம். ஒரு இடத்துல கும்பலா சில பேர் நின்னுட்டு இருந்தாங்க. என்னன்னு எட்டிப் பார்த்தேன். பார்வை தெரியாத ஒரு பெரியவர், குரங்குகளை வெச்சு விளையாட்டுக் காட்டிட்டு இருந்தார். ‘சரி, கிளம்பலாம்’னு மெதுவா திரும்பினேன். யதேச்சையா என் பார்வை அந்தப் பெரியவருக்குப் பின்னாடி விழுந்தது. அங்கே உட்கார்ந்திருந்தவங்க... ‘ஐயோ, இது சரஸ்வதியோட அம்மால்ல’ன்னு பதறிட்டேன். அந்த அம்மா என்னைப் பார்த்ததும் சட்டுனு தலையைக் குனிஞ்சுக்கிட்டாங்க. ‘மாதாவே! இது நம்ம மாமியாரா இருக்கணுமே’னு மனசு கிடந்து அடிச்சுக்கிச்சு. தூரத்துல நின்னுட்டு இருந்த சரஸ்வதியைக் கூப்பிட்டேன். அவளும் வந்து பார்த்தா. ‘அம்மா’னு கத்தி, அழுதுட்டா. அதுக்கப்புறம் அவங்களாலயும் தன்னைக் கட்டுப்படுத்திக்க முடியலை. எழுந்து வந்து தன் மகளைக் கட்டிக்கிட்டாங்க. அழுகைன்னா அழுகை... அப்படி ஓர் அழுகை!’' - ஆண்ட்ரூஸின் குரல் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் கலந்து ஒலிக்கிறது.

‘‘நாலரை வருஷமா, அம்மாவைத் தேடாத இடம் இல்லை. ஆனா, ஒரு நம்பிக்கை மட்டும் இருந்துச்சு, நிச்சயமா என் அம்மா எங்கேயோ உயிரோட இருக்காங்க’னு! இப்பரொம்பச் சந்தோஷமா இருக்கு. எல்லாம் அந்த வேளாங்கண்ணி மாதாவே நடத்தின அற்புதம்தான்’’ - உணர்ச்சிப் பெருக்கில், சரஸ்வதியின் கண்கள் கலங்குகின்றன.

“மகள் மட்டுமில்லே... மருமகனும் என்னை சொந்த அம்மா போலத்தான் பார்த்துக்கிட்டார். ஆனா, கணவர் போன கவலையில என் மனநிலை பாதிச்சுடுச்சு. ஒரு நாள் கால் போன போக்குல போக ஆரம்பிச்சுட்டேன். எங்கே போறேன்னு ரியலை. ஆனா, எங்கேயாவது போகணும்னு தோணிடுச்சு. நடந்து நடந்து கடலூர், நெல்லிக்குப்பம்னு நான் பாட்டுல நீள நெடுக போயிட்டே இருந்தேன். இப்போ எதுவுமே எனக்குச் சரியா நினைவுல இல்லை. பார்வை தெரியாத அந்தப் பெரியவர்தான் எனக்கு அடைக்கலம் கொடுத்தார். என்னை நல்லா பார்த்துக்கிட்டார். அவர்கிட்ட இருந்த குரங்குகளும் எங்க குடும்ப உறுப்பினர்கள் மாதிரிதான். கடைசியா பிரியும்போது, நான் போகப் போறேன்னு அதுங்களுக்கு எப்படித்தான் தெரிஞ்சுதோ... சத்துல கத்த ஆரம்பிச்சுடுச்சுங்க. எனக்கும் அதுங்களைப் பிரியறோமேனு வருத்தத்துல கண்ணீர் வந்துடுச்சு. பெண்ணைப் பார்த்த சந்தோஷம் ஒருபக்கம்... அடைக்கலம் கொடுத்த வங்களைப் பிரியுறோமேனு சோகம் மறுபக்கம். அதனாலதான், வங்களைப் பார்த்ததும் என்னை மறைச்சுக்கிட்டேன். இப்ப எல்லாம் சரியாகிடுச்சு!’’ - பாப்பாத்தி அம்மாள் சொல்கிறபோது, கண்களில் ஒளி தெரிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்