இது செலவு அல்ல... ஆரோக்கியத்துக்கான முதலீடு!

என் வீட்டுத் தோட்டத்தில்! ஜி.பழனிச்சாமி

ன்று நமக்கு ஏற்படுகிற பல்வேறு நோய்களுக்கு முக்கிய காரணம் நம் உணவுதான் என்கிறது மருத்துவ அறிவியல். இதற்கு ஆதாரம் சேர்க்கும் வகையில், நாம் பயன்படுத்தும் காய்கறிகளில் அதிக அளவு நச்சுத்தன்மை கலந்திருப்பதும் அறியப்பட்டுள்ளது. நல்லவேளையாக, இதிலிருந்து மீளும் விதமாக இயற்கை விவசாயம் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஒரு கை அளவு நிலம் இல்லாதவர்கள்கூட தமது குடும்பத்துக்குத் தேவையான நஞ்சில்லா காய்கறிகளை உற்பத்தி செய்துகொள்ள முடியும். இதற்கு வெற்றி உதாரணமாகத் திகழ்பவர்தான் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் பகுதியைச் சேர்ந்த  பிரேமா. வீட்டின் பின்புறம் உள்ள காலி இடத்தில் தோட்டம் அமைத்து, இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தி சாகுபடிசெய்து வருகிறார். வீட்டுத்தோட்டம் அமைக்கும் வழி முறைகளை மற்றவர்களுக்கும் கற்றுத்தருகிறார்.

``எனக்கு சின்ன வயதில் இருந்தே விவசாயம் செய்யும் ஆர்வம் நிறைய உண்டு. ஆனால், அதற்கான நிலம் இல்லை. சரி, வீட்டிலேயே தோட்டம் அமைக்கலாம் என்றால்,  கணவர் அரசு ஊழியர் என்பதால் பல ஊர்களுக்கு மாறுதல் ஆகவேண்டிய சூழல்.  கணவர் பணி ஓய்வுபெற்ற பிறகு சொந்த ஊருக்கே வந்துவிட்டோம். எங்களுடையது கிராமத்து ஓட்டு வீடு என்பதால் மாடித்தோட்டம் போட முடியாது. வீட்டின் பின்புறம் இருந்த காலி இடத்தில் புழக்கடைத்தோட்டம் அமைக்கத் தொடங்கினேன்.

ஆரம்பத்தில் எல்லோரையும் போல ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தி விவசாயம் செய்யும் யோசனைதான் இருந்தது. அந்த எண்ணத்தை அடியோடு மாற்றி இயற்கை விவசாயத்தின் பக்கம் என்னை திரும்ப வைத்தது `பசுமை விகடன்'தான்! பசுமை விகடன் நடத்திய இயற்கை விவசாய பயிற்சிகளில் கலந்துகொண்டு இயற்கை இடுபொருட்கள், பூச்சிவிரட்டி தயாரிப்பு உள்ளிட்ட பல தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டேன்.

வீட்டின் பின்பகுதியில் 450 சதுர அடியில் தோட்டம் அமைத்திருக்கிறேன். கத்திரி, வெண்டை, தக்காளி, அவரை, பீட்ரூட், முள்ளங்கி, கொத்தவரை ஆகிய 7 வகை காய்கறிச் செடிகள், பீர்க்கன், புடலை, பாகல், சுரை, வெள்ளரி ஆகிய 5 வகை கொடிப்பயிர்கள்... பாலக் கீரை, புளிச்சக்கீரை, சிவப்புத்தண்டுக்கீரை, அரைக்கீரை, அகத்திக்கீரை, வெந்தயக்கீரை என 6 கீரை ரகங்கள், பப்பாளி, மாதுளை, எலுமிச்சை ஆகிய மூன்று பழவகை செடிகள், ரோஜா, செம்பருத்தி, நித்திய கல்யாணி, நந்தியாவட்டை, அரளி, டேலியா என 6 வகை பூச்செடிகள், துளசி, நொச்சி, கற்பூரவல்லி, இன்சுலின், தவசிக்கீரை, கீழாநெல்லி, பிரண்டை ஆகிய மூலிகைச்செடிகள்... இப்படி 100 பைகளில் வளர்க்கிறேன்.

பைகளில் நாற்று அல்லது விதை நடவு செய்யும் முன்பாக செய்ய வேண்டியது... நல்ல வளமான மண், தென்னை நார் கழிவு, மண்புழு உரம் ஆகிய மூன்றையும் சரிசமமாகக் கலந்து செடி வளரப்போகும் பிளாஸ்டிக் பை அல்லது தொட்டியில் முக்கால் பாகம் அளவு நிரப்ப வேண்டும். தொடர்ந்து விதை அல்லது நாற்றுகளை பையில் நடவு செய்யும் முன்பாக, பஞ்சகவ்யா கரைசலில் விதை நேர்த்தி செய்து நடவு செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் வேர் சம்பந்தமான நோய்கள் செடிகளைத் தாக்காது. ஊக்கமுடன் நின்று சீரான விளைச்சலை கொடுக்கும்.

பழ வகை செடிகளுக்கு பெரிய சைஸ் பைகளை பயன்படுத்த வேண்டும். தரமான பிளாஸ்டிக் பைகளில் இரண்டு வருடம் வரை மகசூல் எடுக்கலாம். பைகளில்தான் வீட்டுத்தோட்டம் அமைக்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. பழைய பக்கெட், கிரீஸ் டப்பா, மரப்பெட்டி, டயர், பீப்பாய் போன்ற உபகரணங்களில் கூட மண்கலவை நிரப்பி வீட்டுத்தோட்டம் போடலாம்.

செடிகளின் துரிதமான வளர்ச்சிக்கும், தரமான காய்கறிகளைப் பெறவும் இயற்கை உரங்கள் அவசியம். ஆட்டு எரு, தொழு உரம், கடலைப்பிண்ணாக்கு   ஆகிய  இயற்கை  உரங்களை சரியான விகிதத்தில் கலந்து, 15 நட்களுக்கு ஒருமுறை செடிகளுக்குக் கொடுக்க வேண்டும். தேவைப்படும்போது 25 கிராம் வேப்பம் பிண்ணாக்கு போட வேண்டும். எறும்பு, எலி, வேர்க்கரையான்  தாக்கு தலில் இருந்து செடிகளைக் காப்பாற்ற இது அவசியம்.

காய்கறிச் செடிகளில் இருந்து உதிரும் இலை தழை களை, சமையல் காய்கறி கழிவுகளை புழக்கடையில் உள்ள உரத்தொட்டியில் கொட்டி, மூடிவைத்துவிடவேண்டும். மீதமான உணவுப் பொருட்களையும் அதில் கொட்டிவிடலாம். சில வாரங்களில் அவை மட்கி நல்ல உரமாக மாறிவிடும். நீடித்த மகசூலை செடிகள் கொடுக்க இது உதவும்.

சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா விர்டி ஆகிய உயிர் உரங்கள் அருகில் உள்ள வேளாண்மை அலுவலகத்தில் கிடைக்கும். இந்த உயிர் உரங்களை 100 கிராம் அளவில் இயற்கை உரங்களுடன் கலந்து இட வேண்டும். செடிகளுக்குத் தேவையான நைட்ரஜனை பெற இந்த உரங்களின் பங்களிப்பு முக்கியமானது''  என்று வீட்டுத்தோட்ட பராமரிப்பு முறையை விளக்குகிற பிரேமா, வீட்டில் வளரும் ஒவ்வொரு செடியையும் குழந்தையாகவே பாவிக்கிறார்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்