உங்கள் உடல்... உங்கள் உரிமை!

எது அழகு? ஆர்.வைதேகி, படம்: தி.குமரகுருபரன்

ம்மாவான பிறகும் அந்தப் பெண் கல்லூரி மாணவி மாதிரியே காட்சியளிப்பாள். அவளது முகம் சின்ன சுருக்கமோ, கரும்புள்ளியோகூட இல்லாமல் பளபளக்கும். ஒன்றோ, இரண்டோ பிரசவங்களைப் பார்த்த அவளது வயிற்றில் தாய்மை வரிகளோ, தழும்புகளோ இருக்காது. உடலின் எந்தப் பகுதியிலும் எக்ஸ்ட்ரா சதை எட்டிப் பார்க்காது. தப்பித் தவறிக்கூட அவளது கூந்தலின் இடையில் வெள்ளை முடியைக் கண்டுபிடித்துவிட முடியாது.

விளம்பரங்கள் சித்திரிக்கிற ஆதர்சப் பெண் ணுக்கான லட்சணங்கள் இவை. நிஜத்தில் லட்சங்களில் ஒருத்திகூட இப்படி  எல்லாம் இருக்க வாய்ப்பில்லை. விளம்பரங்களில் அழகு காட்டுகிற அத்தனை முகங்களும் போலி யானவை. கம்ப்யூட்டர் உதவியுடனும் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பங்களுடனும் வார்க்கப்படுபவை. சருமத்திலோ, கூந்தலிலோ, உடல்வாகிலோ குறைகளே இல்லாத பெண்கள் போட்டோஷாப்பில் மட்டுமே காணக்கிடைப்பவர்கள். ஆனாலும், அந்த உண்மையை உணராமல் ‘நான் அவளைப் போல இல்லையே...’ என ஏங்கச் செய்வதும், ஏக்கம் தீர்க்க உத்தரவாதம் தருகிற பொருட்களைத் தேடி ஓடச் செய்வதும்தான் விளம்பரங்களின் வெற்றி.

‘நீ அழகில்லை... நிறமாக இல்லை...
சரியான வடிவத்தில் இல்லை...
உன்கிட்ட ஏதோ சரியில்லை.... நீ தகுதியில்லாதவள்...
நீ ஸ்மார்ட்டானவள் இல்லை.
உன்னைவிட அழகான பெண்கள் இருக்கிறார்கள்...'

- பல ஃபேஷன் பத்திரிகைகளும் பெண்களை இப்படித்தான் மிரட்டிக்கொண்டிருக்கின்றன. இந்த வகை விளம்பரங்களைப் பார்த்த, படித்த மூன்றாவது நிமிடமே, எழுபது சதவிகிதப் பெண்கள் அவமானத்தை, குற்ற உணர்வை உணர்வதோடு, மன அழுத்தத்துக்கும் ஆளாகிறார்கள் என்கிறது லேட்டஸ்ட் ஆய்வு.

பெண்களுக்கான விளம்பரங்களில் மட்டும் பெண்கள் செக்ஸியாகவும் சைஸ் ஸீரோ உடல்வாகுடனும் இருந்தால் போதாது. ஆணுக்கான உள்ளாடை விளம் பரத்திலும், அவனுக்கான வாசனைப் பொருள் விளம்பரத்திலும் மயங்கிக் கிறங்கவும் அப்படிப்பட்ட பெண்களே வேண்டும் என்பது எழுதப்படாத நியதி.

கனவிலும் கற்பனையிலும் வாழ்வதை விரும்புகிற மனிதர்கள் நாமெல்லாம்...  விளம்பர மாடல் பரிந்துரைக்கிற அழகு சாதனத்தையோ, ஹெல்த் டிரிங்க்கையோ உபயோகித்தால் நாமும் அவர்களைப் போலவே மாறிவிடலாம் என்கிற பேராசை!
பெண்களை போகப் பொருட்களாக்கி, பெண்களிடமே வியாபாரம் செய்கிற இந்த விளம்பரத் தந்திரங்களுக்கெல்லாம் என்னதான் தீர்வு?

``ச
மீபத்துல ஒரு விளம்பரம் பார்த் தேன். ஆண்களுக்கான ஷூ விளம்பரம். அந்த ஆண் ஷூ போட்ட தன்னோட காலை ஒரு அழகான பெண்ணோட தொடையில வெச்சுக்கிட்டு நிக்கற மாதிரியான அந்தக் காட்சி ரொம்பவே கோபத்தை ஏற்படுத்தினது. புடவை, நகைக்கடை விளம்பரங்களுக்கு மட்டும் மாடல்கள் மகாலட்சுமி மாதிரி இருக்கணும். மத்த விளம்பரங்கள்ல பெண்கள் சும்மா வந்துட்டுப் போனா போதும்.  ஒரு ஆணோட பனியன், உள் ளாடை விளம்பரத்துலயோ, பெர்ஃப்யூம் விளம்பரத்துலயோ வர்ற பெண்களோட நிலைமை இன்னும் மோசம். அதுல பெண்கள் சும்மா அலங்காரப் பொருட்களாத்தான் காட்டப்படறாங்க. பெண்களை மையப்படுத்தற விளம்பரங்கள்லயே கூட எந்த ஆணையும் அப்படி ஒப்புக்கு சப்பாணியா பார்க்க முடியாது. நாப்கின் விளம்பரங்கள்ல மட்டும் பெண்ணை தைரியசாலியாகவும் தன்னம்பிக்கை உள்ளவளாகவும் காட்டினா போதுமா என்ன?’’ என்கிறார் சூர்யா தின்கர். 18 வருட மாடலிங் வாழ்க்கையை வெறுத்து, வெளிநாட்டுக்குச் சென்றவர்.

``பிஸியான மாடலா இருந்தபோதும் பெண்களைக் கேவலமா சித்திரிக்கிற மாதிரியான விளம்பரங்கள்ல நடிக்கிறதில்லைங்கிறதுல உறுதியா இருந்திருக்கேன். அவங்களோட தோற்றத்துக்கு சவால் விடற மாதிரியான விளம்பரங்கள் பண்ணினதில்லை. ஆனா,  இப்பவும் நம்மூர்ல சிவப்பழகு க்ரீம் விளம்பரங்களைப் பார்க்கிறபோது அது பெண்குழந்தைங்களை மட்டுமில்லாம, ஆண் குழந்தைங்களோட தன்னம்பிக்கையையும் பாதிக்கிறது வருத்தமா இருக்கு. கறுப்பான சருமம்தான் ஆரோக்கியமானதுனு இவங்களுக் கெல்லாம் யார் சொல்லப் போறாங்க?  விளம்பரங்கள் எடுக்கிறவங்களைக் கேட்டா, மக்கள் இப்படித்தான் எதிர்பார்க்கிறாங்கனு சொல்லித் தப்பிச்சுக்கிறாங்க. நாங்க யாரும் இப்படிக் கேட்கறதில்லைங்கிறதை மக்கள்தான் முன்னெடுத்துச் சொல்லணும். அவங்களால மட்டும்தான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்’’ என்கிறார் சூர்யா தின்கர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்