என் டைரி - 393

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தத்தளிக்கும் வாழ்க்கை!

ன்னம்பிக்கையுடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதுதான் வாழ்க்கை என்ற கொள்கை கொண்டவள் நான். அதன்படியே வாழ்ந்து கொண்டிருந்தேன். கல்லூரி முடித்து வேலையில் அமர்ந்தபோது ஏற்பட்ட காதல், என் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது.

நான் பணிபுரியும் இடத்தில் என்னுடைய சுயமரியாதை, வேலை நிமித்தம்கூட என்னுடைய மேலதிகாரியை அனுசரித்துப்போக விடவில்லை. அதுவே அவருக்கு என்மீது காதல் ஏற்பட காரணமாகி விட்டது. பெண்களுக்கு அவர் கொடுக்கும் மதிப்பாலும், அவரின் கண்ணியம் குலையாத நடத்தையாலும் நானும் கவரப்பட்டேன்.

இருவரின் குடும்ப அந்தஸ்தின் ஏற்றத் தாழ்வை சுட்டிக்காட்டி, திருமணத்தை நிறுத்த முயன்ற அவரின் உறவினருக்கு மத்தியில், மகனுக்கு பக்கபலமாக இருந்து, எங்கள் திருமணத்தை நிகழ்த்தினார் என்னுடைய மாமியார். இதற்கு என் கணவர் கொடுத்த விலை அவரின் சுதந்திரம்.

அதுவரை அவர் வைத்ததுதான் சட்டம் என இருந்த அந்த வீட்டில், மாமியாரின் சொல் மட்டுமே இறுதிச் சொல்லாகிப்போனது. அவரின் சொல் எங்கள் படுக்கை அறைவரை எதிரொலிக்க, என்னுடைய சுயமரியாதை தலைதூக்கியது. தாய்க்கும் தாரத்துக்கும் நடுவே அல்லாடிய என் காதல் கணவருக்காக, அனுசரித்துபோகலாம் என நினைத்தாலும், `வாழ்நாள் முழுவதும் இப்படியே கழிந்துவிடுமோ?' என சுயபச்சாதாபம் ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை.

கணவரின் இயலாமை என்னை விரக்தியில் தள்ளி இருந்த சமயம் வயிற்றில் மூன்று மாதம். உடல்நலன் கருதி தந்தை வீட்டுக்கு வந்தேன். அந்த தாயுமானவனின் அன்பால், இழந்த வாழ்க்கையை மீண்டும் சுவாசிக்க ஆரம்பித்தேன். விளைவு... கணவர் இல்லாமல் வாழ்வது என முடிவு செய்து கோர்ட்வரை போராடி விவாகரத்து வாங்கினேன்.

உறவினர்களை விட்டு விலகவும் முடியாமல் என்னுடன் வாழவும் முடியாமல் தவித்த என் கணவர், எனக்காக விவகாரத்தையும் அளித்தார். வாழ்க்கை ஓட்டத்தில் என் குழந்தைக்கு ஐந்து வயதாகிறது. ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் பழைய வாழ்க்கையைப் பற்றிய பேச்சே எழக்கூடாது எனும் என்னுடைய உத்தரவின் பேரில், இன்றுவரை இருவரும் அவரவர் வீட்டில் அவரவர் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தாலும், பரஸ்பரப் புரிதலின் அடிப்படையில் நட்பாகவும், எங்கள் குழந்தைக்கு பெற்றோர்களாகவும் அவரவர் பங்கைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.

சுதந்திர வாழ்க்கை எனக்கு கிடைத்தாலும், இன்றுவரை என்மீதான அன்பும் அக்கறையும் குறையாத என் கணவரின் குணத்தினாலும், காலத்தினால் ஏற்பட்ட மனப்பக்குவத்தினாலும்,  `அவசரப்பட்டு விட்டோமோ' எனும் எண்ணம் தலைதூக்குவதுடன், மீண்டும் கணவன் மனைவியாக அவருடன் கைகோத்து வாழமாட்டோமா எனும் ஏக்கமும் அவ்வப்போது மனதை உறுத்திக்கொண்டிருக்கிறது. 

மன உளைச்சலாலும், அன்பின் வலியாலும் தவித்துக்கொண்டிருக்கும் எனக்கு வழி சொல்வீர்கள் என காத்துக் கொண்டிருக் கிறேன்.

- பெயர் வெளியிட விரும்பாத சென்னை வாசகி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்