நமக்குள்ளே!

து, அமெரிக்காவின் நியூயார்க் நகர ஃபேஷன் ஷோ மேடை. இந்த உலகம், அழகு என்று கருதும் ஆடைகளுடன் பெண்கள் பலரும் நளினமாக நடைபோட்டார்கள். அதேமேடையில் ஆசிட்டால் சிதைக்கப்பட்ட முகத்தைக் கொண்ட ரேஷ்மா குரேஷி, மலர்ந்த முகத்தோடு நம்பிக்கையை அணிந்து கம்பீரமாக நடந்து வர... அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது.

ஆம்... வலிகளை விதைகளாகவே தன்னுள் புதைத்து, விருட்சமாக எழுந்து நிற்கும் பெண்களில் முக்கியமானவர்... இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்த ரேஷ்மா. சொந்த அக்காவின் கணவராலேயே ஆசிட் வீச்சுக்கு உள்ளாக்கப்பட்டு, முகம் சிதைக்கப்பட்டு, ஒரு கண்ணின் பார்வை பறிக்கப்பட்டவர். ஆனால், அந்த அமிலக்கரைசலால் அவரது மனவலிமையை பறிக்கமுடியவில்லை.

ஆசிட் வீச்சுக்குப் பின் மீண்டெழுந்தவர், பெண்களுக்கான தன்னம்பிக்கை ஊட்டும் விழிப்பு உணர்வு பிரசாரங்களை செய்யத் தொடங்கினார். யூடியூபில் தன்னம்பிக்கை அளிக்கும் வீடியோக்களைப் பதிவேற்றம் செய்து பல பெண்களின் எனர்ஜிக்கு வித்திட்டார். இதற்கு உலகெங்கும் பலத்த வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கும் நிலையில்தான், சமீபத்தில் நியூயார்க்கில் மேடையேறினார்.

‘அழகு என்பது சருமத்தின் நிறத்திலோ, முகம் மற்றும் உடலின் அமைப்பிலோ மட்டும் இல்லை. மனதில்தான் இருக்கிறது’ என்பதை நிரூபித்து காட்டியதற்காகத்தான் ரேஷ்மாவுக்கு இந்த மரியாதை.

அமெரிக்காவில் அவர் நடைபோட்ட வீடியோ, இப்போது இணைய உலகில் வைரலாகப் பரவிக்கொண்டிருக்கிறது.

முகத்தில் சின்னதாக ஒரு பரு வந்துவிட்டால்கூட வெளியே போக அஞ்சும் பலருக்கு மத்தியில் ரேஷ்மாவின் இந்த நம்பிக்கை நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதானே தோழிகளே!

இவரைப் போல வலியால் வலிமை பெற்ற பல பெண்கள் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் கொண்டாடுவோம். அடையாளங்கள் வலிகளில் புதைந்துவிடாமல் எழுந்து நிற்க கைகொடுப்போம்!

உரிமையுடன்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்