உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்! - தீபா மலிக்

சோதனை டூ சாதனை

பொதுவெளிக்கு வரும் ஒவ்வொரு பெண் ணின் வாழ்க்கையும் பரமபதம்தான். சில பெண்களுக்கோ ஏணி இருக்கும் இடத்திலும் பாம்புகளையே படுக்க வைத்திருக்கிறது வாழ்க்கை. அப்படியொரு நிலையில் இருந்தவர்தான், தீபா மலிக்... பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மங்கை!

பிரேசிலின் ரியோ நகரில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் குண்டு எறிதலில் வெள்ளி வென்று அசத்தியிருக்கிறார் 45 வயதான தீபா மலிக். பாராலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்ற முதல் இந்தியப் பெண் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்ணும் தீபாவே என்பது சிறப்புச் செய்தி.

குண்டு எறிதலின் F-53 பிரிவில் 4.61 மீட்டர் தூரம் வீசி பதக்கத்தை வசப்படுத்திய தீபாவின் வெற்றி, சமீபத்திய ஒலிம்பிக்கில் அசத்திய சிந்து, தீபா கர்மாகர்,  சாக் ஷி மலிக் ஆகியோரின் சாதனைகளுக்குச் சற்றும் குறைந்ததல்ல. சொல்லப் போனால், அவற்றைவிட அசாத்தியமானது!
உடலியக்கக் குறைபாடு உடையவரான தீபா, தனது 28-வது வயதில் ஏற்பட்ட முதுகுத்தண்டுவடக் கட்டியால் காலுக்குக் கீழாக முழு உணர்ச்சியையும் இழந்தார். 31 அறுவை சிகிச்சைகள், 183 தையல்கள் போடப்பட்டு வீல் சேரில் கிடத்தப்பட்டார். இப்படி ஒரு சம்பவம், மற்றவர்களுக்கு வாழ்க்கையின் மீது விரக்தியை ஏற்படுத்தியிருக்கக்கூடும். தீபாவையோ, அது ஒரு ஃபீனிக்ஸ் பறவையாக மாற்றியது.

அடிப்படையில் மோட்டார் ரேஸிங்கில் ஆர்வமிக்க  தீபா மலிக், இயலாமையை தூக்கி எறிந்து தனது சாதனைப் பயணத்தைத் தொடங்கினார். நீச்சல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் முதலான போட்டிகளில் கலந்துகொண்டு அசத்தினார். இருப்பினும், சிறுவயது ஆசையான மோட்டார் ரேஸிங் அவரது மனதில் புதையுண்டு இருந்ததால், அதையும் கையில் எடுத்தார். மிகவும் ஆபத்தான மலைத்தொடர்களிலும், பாலைவனத்திலும் மோட்டார் வாகனத்தில் சாகசப் பயணம்  செய்தார். அதற்கான லைசென்ஸ் பெற்ற முதல் மாற்றுத்திறனாளியும் தீபாதான். அவர் இதை செய்ததற்கு ஒரேயொரு காரணம் தான்... தங்களாலும் ஓட்டுநர் உரிமம் பெற முடியும் என்பதை மாற்றுத்திறனாளிகள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதே அது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்