அவள் சேலஞ்ச் - சாதனைப் பெண் ஆகணுமா? சவாலைச் சந்தியுங்கள்!

வாருங்கள் வாசகிகளே...

வால்களால் நிறைந்தது நம் வாழ்க்கை. அந்தச் சவால்களை எப்படி வெற்றிகரமாகக் கையாண்டு, நம் வாழ்க்கையை வளம்பெறச் செய்கிறோம் என்பதில்தான் நம் திறமையே அடங்கியிருக்கிறது.

67 வயதில் தனியாக அப்பலாச்சியன் மலை ஏறிய கிராண்ட்மா கேட்வுட், 72 நாட்களில் உலகைச் சுற்றி வந்த நெல்லி ப்ளை, தனியாக அட்லான்டிக் பெருங்கடலைக் கடந்த அமேலியா எர்ஹார்ட், எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் இந்தியப் பெண் பச்சேந்திரி பால் போன்ற எண்ணற்ற பெண்கள் சவால்களைச் சாதனைகளாக மாற்றி, சரித்திரத்தில் இடம்பெற்றவர்கள்.

சவால்கள் நம் வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்தக் கூடியவை. வாழ்க்கை அளிக்கும் எதிர்பாராத சவால்களை விடுங்கள்... நாமே சில சவால்களை உருவாக்கிக்கொண்டு, அவற்றில் வெற்றி பெறுவது இன்னும் இனிமை சேர்க்கும்தானே?

முதலில் ஒரு மாத சவாலில் இறங்கி, புத்துணர்வுப் பெண்ணாக மாறலாம், வாருங்கள். நாள்தோறும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வது சவாலில் சேருமா? அது நம் உடலைப் பாதுகாக்க அவசியம் செய்ய வேண்டிய அன்றாடப் பணிதானே? அதேபோல, தினமும் ஒரு புடவை கட்டி செஃல்பி எடுப்பதும் இன்று சாதாரணமான விஷயம் ஆகிவிட்டது.

வேறு என்ன செய்யலாம்? ஓவியத்தில் நாட்டம் இருந்தால் 30 நாளில் 30 ஓவியங்களைத் தீட்டலாம். புகைப்பட ஆர்வலராக இருந்தால் 30 நாட்களில் 30 படங்களை எடுக்கலாம். சூழலைக் காக்க 30 நாட்கள் மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்தாமல் சைக்கிளில் மட்டுமே பயணிக்கலாம்! ஏன்... 30 நாட்களில் ஏதேனும் ஒரு புதிய விஷயத்தைக்கூட கற்றுக்கொள்ளலாம்.

இவை எல்லாம் உதாரணம்தான். நீங்கள் காலங்காலமாகக் கனவு கண்ட ஒரு விஷயத்தை நிறைவேற்ற இது ஒரு நல்வாய்ப்பே! நீங்கள் 30 நாட்கள் சவாலுக்குத் தயாரா? என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை உடனே எழுதி அனுப்புங்கள். அடுத்த இதழில் இருந்து சவால்களைச் சந்திப்போம். வாழ்த்துகள்!

அவள் சேலஞ்ச்
அவள் விகடன், 757 அண்ணா சாலை, சென்னை - 600 002
email: aval@vikatan.com

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick