``என் வாழ்க்கையைப் பரிசளித்த குழந்தைகள்!” - ப்ரேமா ரேவதி

கல்வி சேவைவி.எஸ்.சரவணன்

“ஆறு மாதம்தான்... என ஆரம்பித்தது. ஆனால், ஆயுட்காலப் பணியாக மாறி விட்டது” என்று சொல்லும் ப்ரேமா ரேவதி, நாகப்பட்டினம் அருகிலுள்ள சிக்கல் எனும் ஊரில் ‘வானவில்’ பள்ளியைத் தொடங்கி, நடத்தி வருபவர். கவிஞர், எழுத்தாளர், நாடக நடிகர், உதவி இயக்குநர் எனப் பன்முகம் கொண்டவர்.

“சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு உதவவே நாகைக் குப் போனோம். அங்கோ, இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்த வேண்டிய நிலை; அப்போது ஏராளமான குழந்தைகளின் பிணங்களைப் பார்த்தது பெரும் துயரம். பிறகு, சுனாமியில் பிழைத்த, ஆதரவற்ற குழந்தைகளின் மறுவாழ்வுப் பணிக்காக அடிக்கடி அங்கு சென்றேன்.  ஒருமுறை நாகை பஸ் ஸ்டாண்டில் நான்கு மாத குழந்தையைத் தூக்கியபடி பசியோடு நின்ற சிறுமியைப் பார்த்தேன். அந்தக் கைக்குழந்தை ஊட்டச்சத்துக் குறைபாடால் மெலிந்திருந்தது. விசாரித்தபோது, அவர்கள் பூம்பூம் மாட்டுக்காரர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என அறிந்தேன். இதுபோன்ற குழந்தைகளை மனதளவில் தேற்றி, அரசுப் பள்ளிகளில் சேர்த்துவிடலாம் என்று தான் ‘வானவில்’ பள்ளியைத் தொடங்கினேன். ஆனால், அரசுப் பள்ளியில் சிலரைச் சேர்த்த பின்பும், பிரச்னை தீரவில்லை. மற்ற பிள்ளைகள் இவர்களோடு ஒட்டாமல் விலகியிருந்தனர். இதனைச் சரிசெய்ய, தற்காலிகப் பள்ளியாக ஆரம்பித்த ‘வானவில்’ பள்ளியை நிரந்தரப் பள்ளியாக்கினேன்.  நண்பர்களின் உதவியோடு இயங்குகிறது இப்பள்ளி.

‘வானவில்’ பள்ளியில் பாடத்தைப் பாடலாகவும், நாடகமாகவும், ஓவியங்களைக் கொண்டும் நடத்துவதால் குழந்தை களுக்கு எளிதாகப் புரிகிறது. இங்கே படித்த லக்ஷ்மி எனும் பெண், கல்லூரிப்படிப்பை முடித்து, இப்போது இங்கேயே வேலை செய்கிறார். இன்னொரு பெண் டீச்சர் ட்ரெய்னிங்கும், மற்றொருவர் இன்ஜினீயரிங்கும் படிக்கிறார்கள்.  ‘வானவில்’ பள்ளியில் பெரும் பாலும் சாதிச் சான்றிதழ் வாங்கக்கூட கஷ்டப்படும் நாடோடி சமூகத்தினரின் குழந்தைகள் மற்றும் பேருந்து, ரயில் நிலையங்களில் ஆதரவற்று வாழும் குடும்பங்களின் குழந்தைகளுமே படிக்கிறார்கள்.  மாணவர்கள் தங்கிப் படிக்கும் வசதி உள்ள இந்தப் பள்ளியில், விடுமுறையே கிடையாது. ஆசிரியர்கள் சுழற்சி முறையில் விடுப்பு எடுத்துக்கொள்கிறார்கள்.

என் வாழ்க்கை முறையையே  ‘வானவில்’ குழந்தைகள் மாற்றி விட்டார்கள். அவர்களிடம் கற்றது ஏராளம். வாழ்க்கையில் ஏகப்பட்ட சுமைகளோடு இருந்த எனக்கு, வாழ்க்கையை எளிமையான ஒன்றாகப் பரிசளித்தது அவர்கள்தான்!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்