``ஆதிவாசிகளுக்கு நெலம் வாங்கிக்கொடுக்கணும்!” - மல்லிகா

பழங்குடி மக்கள் சேவைசண்.சரவணக்குமார், படம்: வீ.சிவக்குமார்

ளியர் சமூகத்தைச் சேர்ந்த மல்லிகா, மேற்குத் தொடர்ச்சி மலை பழங்குடி சமூகத்தின் நம்பிக்கை. பூர்வீக நிலம்  மற்றும் ரேஷன் கார்டு பெற்றுத் தருவது, வீடுகட்ட உதவுவது, பழங்குடி குழந்தைகளுக்கு கல்வி வசதி ஏற்பாடு செய்வது என மக்களின் அடிப்படைத் தேவைக்காக போராடி வரும் வெளிச்சம். கொடைக்கானலில் இப்போதைய வாசம்!

“வெளி மனுஷங்களைப் பார்த்தா ஓடி ஒளிஞ்சி மறைஞ்சி, காட்டுலயும் பாறைக்குகையிலயும் வாழ்ந்த சனம் எங்க சனம்.

தேன் எடுக்குறது, கிழங்கு, ஈஞ்சம்புல், குங்கலியம் எடுக்குறதுதான் எங்க தொழில். நான் பிறந்தது கொடைக்கானல் ஆடலூர் சிலம்பக்கானல். எங்கப்பா விவசாயம் செஞ்ச நிலத்தை வேறு சாதியைச் சேர்ந்தவங்க ஏமாத்திப் பிடுங்கிக்கிட்டாங்க. இன்னைக்கு நிலப்பிரச்னையில நான் தைரியமா போராட, அதுதான் காரணம்.

பள்ளிக்கூடத்துக்குப் போக ஆசைப்பட்டேன். முடியல. எங்க மக்களுக்காகப் போராட படிப்பறிவு இல்லைங்கிறது எனக்கு ஒரு தடையா இல்ல.  1999-ம் வருஷம் மஞ்சளாறு டேம் பக்கம் அம்பாவிங்கிற கிராமத்து மக்களுக்கும், எங்க சனத்துக்காகவும்  பழனியம்மாள்  என்பவரும் நானும் சேர்ந்து பொதுவேலைகள் செஞ்சோம். நிலையான வீடுகள் இல்லாத அவங்களுக்காக அரசு உதவியோட குடியிருப்புகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வாங்கித்தந்து ‘ராசிமலை காலனி’யை உருவாக்கினோம். அஞ்சு வருஷப் போராட்டத்துக்குப் பலனா, 30 குடும்பங்களுக்கு வீடும் விவசாய நெலமும் கிடைச்சிருக்கு.

தேனி மாவட்டம் சின்னூர் காலனிக்குப் போனேன். அங்க எங்க ஆளுங்களை தோட்டக் காட்டுல சம்பளம் தராம கொத்தடி மையா வெச்சிருந்தாங்க... போராடி அவங்களை மீட்டதோட நிலமும் வாங்கிக்கொடுத்தோம். எங்க சமுதாய வளர்ச்சிக்கு வனத்துறையோட சேர்ந்து சேர், பாத்திரம் வாங்கி டி.வி ரூம் கட்டிக் கொடுத்தோம். கல்யாணம், காதுகுத்துக்கு மண்டபமாகவும் பயன்படுது. சுகாதாரப் பணியாளரா அஞ்சு வருசம் வேலை பார்த்தேன். இளைஞர் அமைப்பை உருவாக்கி சேமிக்கும் பழக்கத்தை உண்டாக்கினேன். 

நானும் எங்க சாதிசனம் மாதிரிதான், ஒரு இடத்துல நிலையா இருந்ததில்ல. இப்போ வாழகிரியில இருக்கேன்... இப்போதான் எனக்குன்னு ரேஷன் கார்டு வாங்கியிருக்கேன். இந்த இடத்திலயும் எங்க மூதாதையர்களுக்கு நிலம் இருக்கு, பட்டா இல்லை. அதுக்கான போராட்டம் நடந்துட்டு இருக்கு. பழனிமலையில ஆதிவாசிகளுக்கு  நெலம் வாங்கிக்கொடுக்கணும். அந்த வைராக்கியம்தான் இப்போ என் மனசெல்லாம் இருக்கு!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்