``குழந்தைகளின் சந்தோஷத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்!” - மனோன்மணி

கலை சேவைகே.ஆர்.ராஜமாணிக்கம், படம்: த.ஸ்ரீநிவாசன்

மேட்டுப்பாளையம் கூட்டுறவு சங்க குடியிருப்புப் பகுதி... ஓவியம், கிராஃப்ட், சங்கீதம், பரதநாட்டியம் என குழந்தைகளின் பல்கலைக்கூடமாக விளங்குகிறது,  ‘கருணாஸ் கலைக்கூடம்.’ தன் கணவரின் நினைவாக 2009-ல் மனோன்மணி தொடங்கிய இந்த இலவச கலைப்பள்ளியில், 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள் பயிற்சிக்கு வருகிறார்கள். கிராஃப்ட் மெட்டீரியல்களில் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் என வடிவமைத்துக்காட்டி அவர்களை சந்தோஷப்படுத்துகிறார்.

``என் கணவர் கருணாகரனின் திடீர் மறைவு என்னை மிகவும் பாதித்தது. தங்கை மற்றும் என் இரண்டு மகன்களின் ஆதரவால், மெதுவாக மீண்டு வந்த நேரத்தில், அக்கம் பக்கக் குழந்தைகளுக்குப் படம் வரைந்து கொடுப்பது, கிராஃப்ட் செய்துகாட்டுவது என இருந்தேன். அது சந்தோஷம் தரவே, என் இரண்டு வீடுகளில் ஒன்றை, ஆர்ட் மற்றும் கிராஃப்ட் கற்றுக்கொடுப்பதற்காக ஒதுக்கினேன்.

‘இந்த ஹால், மாடி அறைகளை வாடகைக்கு விட்டால் நல்ல வருமானம் வருமே?’ என்று சிலர் கேட்பார்கள். அமெரிக்காவில் இருக்கும் மகன், என்னுடன் இருக்கும் மகன் என்று இரண்டு பிள்ளைகளும் எனது இந்த சேவைக்கு ஆதரவாக இருந்து, ‘காசெல்லாம் பொருட்டல்ல... பிடிச்சதைச் செய்யுங்க’ என்று சொன்னதுடன், மைக், யுபிஎஸ் என வகுப்புக்கான வசதிகளையும் செய்துகொடுத்திருக்கிறார்கள்.

மாதம் ஒருநாள் ‘ஜாலி டே’ கொண்டாடுவோம். அன்று முழுவதும் நடனம், பாட்டு என்று குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். கிராமத்து விளையாட்டுகள் சொல்லிக் கொடுப்பது, கறிவேப்பிலைப் பொடி சாதம் செய்வது, அதன் நன்மைகளை சொல்வது என கச்சேரி களைகட்டும். இங்கேயே பரதநாட்டியம், கர்னாடக சங்கீதம் என என் தோழிகளின் வகுப்புகளும் நடக்கின்றன. அவர்களிடமிருந்தும் வாடகை வாங்குவதில்லை. ஆனால், அவர்கள் விரும்பிக் கொடுக்கும் பணத்தை குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ், கிராஃப்ட் மெட்டீரியல் வாங்கவும், கற்றுக்கொடுத்ததைச் சிறப்பாகச் செய்யும் குழந்தைகளுக்கு பரிசுகள் வாங்கவும் பயன்படுத்திக் கொள்கிறேன். படிப்பு குழந்தைகளுக்கு சுமையாக ஆகிவிட்ட சூழலில், இந்தக் கலைக்கூடம் மூலம் அவர்களின் சந்தோஷத்தை அவர்களிடம் ஒப்படைப்பதே என் ஆசை!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்