``விளிம்புநிலை பெண்களுக்காகப் போராடுகிறேன்’’ - கிளாரா

உழைப்பாளர் சேவைசண்.சரவணக்குமார், படம்: வி.சதிஷ்குமார்

வீட்டுவேலை செய்யும் தொழிலாளிகளின் உரிமைகளை உரக்கச் சொல்ல பிரதிநிதிகள் பரவலாக இல்லாத நிலையில், அவர்களுக்காக அவர்களுடன் இணைந்து பாடுபடுகிறார், மதுரையைச் சேர்ந்த கிளாரா.

“தமிழ்நாடு வீட்டுவேலை தொழிலாளர்கள் சங்கம் தொடங்கி 21 ஆண்டுகளாக வீட்டுவேலை செய்யும் பெண்களுக்காகப் போராடி வருகிறேன். ‘உழைப்பின் வியர்வை காயும் முன் அதற்கான கூலியைக் கொடுங்கள்’ என்பது பொன்மொழி. ஆனால், வீட்டுவேலை செய்யும் தொழிலாளிகளுக்கு பெரும்பாலும் நியாயமான ஊதியம் கிடைப்பதில்லை. பழைய சோறும், கந்தல் உடைகளும்தான் கடந்தகாலங்களில் அவர்கள் பெற்ற ஊதியம். அவர்களுக்கு மட்டும் ரேஷன் அரிசி சாதம், வீட்டுக்கு வெளியே வசிப்பிடம் என ஒருவித தீண்டாமை உலகில்தான் வாழ்கிறார்கள்.

போனஸ் கேட்பார்கள் என்று, பண்டிகைக்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னதாக ஏதாவது குறைகள் சொல்லியோ, திருட்டுப் பட்டம் கட்டியோ அவர்களை வெளியே அனுப்பிவிடுவார்கள். சில வீடுகளில், 30 வருடங்கள் வேலைபார்த்து வந்த தொழிலாளியைக்கூட திடீரென வேலையை விட்டு அனுப்பிவிடுவார்கள்.

வீட்டுவேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் கொடுமைகள், மிகக் கொடூரமானவை. சில வீடுகளில்  அங்கு வேலை செய்த தொழிலாளி வேலையை விட்டு நின்று ஒன்றிரண்டு வருடங்கள் ஆகியிருந்த நிலையிலும், அந்த வீட்டில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால், இவர்களையே போலீஸ் பிடிக்கும்.

2010-ல் வீட்டுவேலை செய்பவர் களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மணிக்கு 30 ரூபாய் விகிதம் நிர்ணயம் செய்து, அதைச் சட்டமாக்கப் போராடி நீதிமன்றத்தை நாடிய பிறகு, நீதிமன்றம் ‘வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியக்குழு’ என்ற கமிட்டி அமைத்தது. அதுவும் கிடப்பில் கிடக்கிறது. தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம், வீட்டுவேலை செய்யும் தொழிலாளிகளுக்காக பேசப் போனால், ‘திருடிகளுக்கு ஏன் பேச வருகிறீர்கள்?’ என்று வெளிப்படையாகவே பேசுவார்கள். இந்தக் கறுப்பு உலகம் மிகவும் பரிதாபமானது; மிகவும் பெரியது. இந்த விளிம்புநிலை மனிதர்களுக்கு வேலை செய்வது பெருமை, கடமை!’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்