``அன்பால் உதவுகிறோம்!’’ - வானவன் மாதேவி - இயல் இசை வல்லபி

சிகிச்சை - பயிற்சி சேவைவீ.கே.ரமேஷ், படம்: எம்.விஜயகுமார்

சிறு துன்பம் வந்தால்கூட மூலையில் முடங்கிப் போகிறோம். ஆனால், ‘உனக்கு வந்திருப்பது மஸ்குலர் டிஸ்ட்ரோபி எனும் தசை சிதைவு நோய். இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு படிப்படியாக ஒவ்வொரு உறுப்பும் செயல் இழக்கும். முதலில் நாமே அசைக்கக்கூடிய கை, கால், கழுத்துத் தசைகள் செயலிழந்து அசைக்க முடியாமல் பொம்மையைப் போல ஆகிவிடும். அதன் பிறகு தானாகவே அசையக்கூடிய நுரையீரல், இதய தசைகள் பாதிக்கப்பட்டு இறப்பு நேரும்...’ என்று மருத்துவர் கூறிய பிறகும்கூட தளராமல்  ஆக்கபூர்வமாகச் செயல்படும் உயிர்கள் இவர்கள். இன்று கை, கால், கழுத்து போன்றவை செயலிழந்த நிலையிலும் வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி சகோதரிகள் முடங்கிப்போகாமல், தங்களைப் போன்றே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சேலம் அருகே ‘ஆதவ் ட்ரஸ்ட்’ வாயிலாக ஒரு ஏக்கர் பரப்பளவில் பத்தாயிரம் சதுர அடியில் கட்டடம் அமைத்து உறைவிடம் உருவாக்கியுள்ளார்கள்.

இந்த இல்லத்தில் தன்னைப் போல தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வீல் சேரில் அமர்ந்தே நம்பிக்கை ஊட்டி வரும் வானவன் மாதேவி,   உடல்நலக் குறைவைத் தாண்டியும் பெரும் சோகங்களைச் சந்தித்தவர். கடைசி தங்கையின் மரணம், விபத்தில் இயல் இசை வல்லபியின் கால் முறிவு என அடுத்தடுத்து இடி விழுந்தாலும், மனதை ஒருபோதும் தளர விடாமல் ஓயாது உழைக்கிறார்.

‘‘தசை சிதைவு நோய் உள்ளவர் களைக் குணப்படுத்த முடியாது. ஆனால், நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். அதற்குத் தொடர்ச்சியான பிசியோதெரபி, அக்குபங்சர், ஆயுர்வேத மருத்துவம் துணை புரியும் என்பதால், 3 டாக்டர்களை நியமித்து இங்கிருக்கும் பத்து குழந்தைகளுக்குப் பயிற்சியும் சிகிச்சையும் அளித்து வருகிறோம். எதிர் காலத்தில் தசை சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் அளவுக்கு இந்த இல்லம் திகழ வேண்டும் என்பதே எங்கள் லட்சியம். அது நிச்சயம் நிறைவேறும்’’ என்று மனவலிமையோடு கூறுகிறார்கள் அன்பு நிறைந்த இச்சகோதரிகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்