டீன் 15 - வைஷாலி - நிதானம் தவறமாட்டேன்!

செஸ் புலிதா.ரமேஷ்

ந்நேரமும் வாட்ஸ்அப், ஃபேஸ் புக்கில் நேரம் செலவழிக்கும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு மத்தியில், 64 கட்டங் களில் கவனம் பதித்து முத்திரையும் பதித்தவர்; அசாத்திய சாதனை புரிந்த குழந்தை களுக்கான தேசிய விருது, ஆசிய அளவில் சிறந்த சாதனையாளர் விருது, சிறந்த செஸ் வீராங்கனைக்கான விருது என ஏராளம் வென்றவர்... பத்தாம் வகுப்பை முடிக்கும் முன் 36 பதக்கங்கள் அள்ளியவர் வைஷாலி!

பத்து வயதில் இருந்து தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வரும் வைஷாலி, 2012-ல் ஸ்லோவேனியாவில் நடந்த வேர்ல்ட் யூத் செஸ் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார். ஏசியன் கேம்ஸ், காமன்வெல்த் கேம்ஸ் என பங்கேற்ற அனைத்துப் போட்டியிலும் பதக்கம் தட்டினார்.

இந்த ஆண்டு ஏசியன் யூத் செஸ், ஏசியன் ஜூனியர் செஸ், ஏசியன் கான்டினென்டல் செஸ் என மூன்று சர்வதேச தொடர்களில் பதக்கம் வென்றது, அவரது செஸ் வாழ்வின் உச்சம். ஐந்துமுறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் தன் டீன்ஏஜ் பருவத்தில் சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் பட்டங்களை ஒரே ஆண்டில் வென்றார். பெண்கள் பிரிவில் வைஷாலி அந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். எனவே, ஆனந்த் போல வைஷாலி நிச்சயம் ஜொலிப்பார் என்பது செஸ் ஆர்வலர்களின் கணிப்பு.

அதற்கான அர்ப்பணிப்பு வைஷாலியிடம் நிறையவே உள்ளது. பயிற்சியாளர் சொல்லிக் கொடுக்கும் நேரம் தவிர்த்து வீட்டில் அதிகம் செஸ் பார்ப்பதும், பயப்படாமல் தைரியமாக விளையாடுவதும் வைஷாலியின் பலம்.

‘நாம் ஒரு தப்பான மூவ் செய்து விட்டோம் என்றால், உடனே ரியாக்ட் செய்யக்கூடாது. எதிராளி யோசித்துக் கொண்டிருப்பார். அவர் நம் தவறாக நகர்த்தியதை கவனித்தாரா என தெரியாது. அதனால், உடனடியாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடாது. நாம் நிதானமாகவே இருந்தால், நம் தவறை அவர் சாதகமாகப் பயன்படுத்த வாய்ப்பு இல்லை. அதே நேரம் அவர்களின் ரியாக்‌ஷனையும் கவனிக்க வேண்டும்’ என்று அண்மையில் செஸ் ஆனந்த் கூறிய விஷயங்களை எல்லாம், வைஷாலி பின்பற்றுவதாகக் கூறுகிறார்.

மற்ற குழந்தைகள் மணிக்கணக்கில் டி.வி பார்ப்பது போலவே, தினம் ஐந்து மணி நேரம் கம்ப்யூட்டரிலேயே செஸ் பார்ப்பது வைஷாலி வழக்கம். ஏன்?

‘‘செஸ் ஆட்டத்துக்கு டிசிப்ளின் ரொம்ப அவசியம். டோர்னமென்ட்டுக்கு சென்ற இடத்தில் வெளியே சுற்றமாட்டேன். தேவையில்லாமல் பேசக்கூட மாட்டேன். கம்ப்யூட்டரில் செஸ் பார்ப்பதுதான்   என் வேலை. என் பொழுதுபோக்கும் அதுதான். கேம் முடிந்ததும், உடனே கம்ப்யூட்டரில் பார்த்து, தவறுகளை நோட்ஸ் எடுத்து, அனலைஸ் செய்து, பயிற்சியாளரிடம் கொடுப்பேன்... அதற்கேற்ப அடுத்த ஆட்டத்துக்கான சைக்கலாஜிகல் மூவ்களை திட்டமிடுவேன்’’  என்கிறார் அவர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜயலட்சுமி, இந்தியாவின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர். அவருக்கு அடுத்தபடியாக அந்த இடத்தை நிரப்பும் தகுதியுள்ளவர் வைஷாலி. அதற்கான தகுதியும் உழைப்பும் நிச்சயம் வைஷாலியிடம் உள்ளது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்