டீன் 19 - நித்யா - செரீனாக்கள் உருவாக உதவுங்கள்!

ராக்கெட் ராணிஎம்.குமரேசன்

‘‘அவங்களோட மூவ் ஒவ்வொன்றி லும் அவ்வளவு வேகம். சர்வீஸிலும் அவ்வளவு வேகம். காயத்தையும் தாண்டி சாதிச்சிருக்காங்க. இத்தனை வருஷமா எப்படி டென்னிஸ் விளையாடுறாங்கனு பிரமிச்சிருக்கேன்...’’ என்று செரீனா புகழ்பாடும் நித்யா, அவரைப் பார்த்துப் பார்த்துதான் டென்னிஸ் ஆடவே  கற்றுக்கொண்டாராம். நம்பிக்கையூட்டும் இளம் டென்னிஸ் வீராங்கனையாக மலர்ந் திருக்கிற எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரிப் பெண், இப்போது தேசிய டென்னிஸ் சாம்பியன்!

‘’சின்னப் புள்ளைல இருந்தே எனக்கு அத்லெட்டிக்ஸ்ல அதிக ஆர்வம். அதைப் பார்த்துட்டு எங்க அம்மாதான் ஏதாவது விளையாட்டுல சேர்க்கணும்னு டென்னிஸ் கோச் கிட்ட விட்டாங்க. பத்து வயசுல டென்னிஸ் ராக்கெட்டை கையில் எடுத்தேன். நான் இந்த அளவுக்கு டென்னிஸ்ல சாதிக்க எங்க அம்மாதான் காரணம். ஜூனியர் லெவல்ல இருந்து என்னை இந்தியா முழுக்கக் கூட்டிட்டுப் போய் ஆட வெச்சுருக்காங்க. அப்பா ரயில்வேல காண்ட்ராக்டர். பணத்துக்குக் கஷ்டம் இல்லைனாலும் அப்பாகூட செலவழிக்கத் தயங்குவாரு... அம்மாதான் எனக்காகப் பேசி, என்னை இந்த அளவுக்குக் கொண்டு
வந்திருக்காங்க.

பள்ளில படிக்கிறப்போகூட டென்னிஸ்ல ஒண்ணும் பெரிசா சாதிக்கல. காலேஜ்லதான் பின்னி எடுக்க ஆரம்பிச்சேன். ஆல் இந்தியா யுனிவர்சிட்டி டென்னிஸ்ல இரண்டாவது இடம். தேசிய அளவிலும் பல போட்டிகளில் ஜெயிச்சிருக்கேன்.

இந்தியன் பிளேயர்ஸ்ல நம்ம சானியாவ ரொம்பப் பிடிக்கும். அவங்க சாதனையை நெருங்கிப் பார்க்கணும்னு ஆசை இருக்குது. டெல்லியில ஒரு முறை அவங்கள சந்தித்தேன். ரொம்ப என்கரேஜ் பண்ணினாங்க; ரொம்ப சப்போர்ட்டிவா பேசினாங்க’’ என்கிற நித்யா, அண்மையில் தாய்லாந்தில் நடந்த ஏசியன் டென்னிஸ் போட்டி செமிஃபைனல் வரை சென்றிருக்கிறார்!

‘‘இந்தியாவுல டென்னிஸ் விளையாட்டுக்குச் செலவழிக்கிற அளவுக்கு பணம் சம்பாதிக்க முடியாது. பொருளாதார பிரச்னைகளைத் தாண்டிதான் விளையாட வேண்டி இருக்கு. வெளிநாட்டுல எல்லாம் ஒரு டோர்னமென்ட் ஆடினாலே நல்ல காசு கிடைக்கும். நம்ம நாட்டுல அந்த மாதிரி கிடையாது. பொதுவாகவே இந்தியாவுல பெண்களுக்குப் போட்டிகளும் குறைவு. ஸ்பான்சர்ஷிப் கிடைக்கறதும் பெரிய பிரச்னை. டாப்ல இருக்குற ஐந்து பேருக்குதான் ஸ்பான்சர்ஷிப் கிடைக்கும். மத்தவங்கள்லாம் சொந்தக் காசுலதான் போட்டிக்கே போக வேண்டிய நிலை. நிறைய கம்பெனிகள் டென்னிஸ் ஆட்டக்காரர்களைத் தத்து எடுக்க முன் வரணும். இப்போ, தமிழ்நாட்டுல சி.எம் டிராஃபி போட்டில ஜெயிச்சா ஒரு லட்ச ரூபாய் பரிசு கிடைக்கும். அந்தப் பணம் நாங்க அடுத்த போட்டிக்குப் போறதுக்கு கொஞ்சம் உதவியா இருக்கும். நம்ம சி.எம் பெண்களுக்குனு தனியா போட்டி நடத்தினா, பெண்கள் டென்னிஸ் வளரும். நம்ம நாட்லயும் நிறைய செரீனாக்கள் உருவாகி வருவாங்க’’ என்கிறார் நித்யா, முன்னோக்குப் பார்வையோடு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்